Published : 07 Mar 2020 11:34 AM
Last Updated : 07 Mar 2020 11:34 AM
கனி
உடை அலமாரியை எப்படி அடுக்கிவைத்தாலும் உடனடியாகக் கலைந்துவிடுகிறது என்று கவலைப்படுபவர்கள் அதிகம். உடைகளை அடுக்கிவைக்கும்போது முக்கியமான சில அம்சங்களில் கவனம் செலுத்தும்போது, உடை அலமாரி மட்டுமல்லாமல் எல்லா அலமாரிகளையும் பராமரிப்பது எளிமையானதாகிவிடும். உடை அலமாரியைக் ஒழுங்கமைப்பதற்கான சில ஆலோசனைகள்:
அலமாரியில் பருவநிலைக்கு ஏற்ற உடைகளை அடுக்கிவைப்பது பொருத்தமானதாக இருக்கும். இன்னும் சில வாரங்களில் கோடைக்காலத்தின் தாக்கம் அதிகமாகிவிடும். பெரும்பாலும் குளிர்காலத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியும் உடைகளுக்குக் கோடையில் தேவையிருக்காது.
அதனால், குளிர்காலத்துக்கு ஏற்ற உடைகளை உடை அலமாரியிலிருந்து தனியாகப் பிரித்து எடுத்து ஒரு பையிலோ பெட்டியிலோ போட்டு அலமாரியின் மேல் அடுக்கிலோ அலமாரியின் மேலேயோ வைத்துவிடலாம். இந்த முறையைப் பருவகாலம் மாறும்போதும் தொடர்ந்து பின்பற்றினால், அன்றாடம் காலையில் உடைத் தேர்வில் செலவிடும் நேரத்தைக் கணிசமாகச் சேமிக்கலாம்.
அலுவலக உடைகள்
உடைகளை அவற்றின் வகைப்படி அடுக்கிவைக்கும்போது பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். அலுவலகத்துக்குப் பயன்படுத்தும் ‘ஃபார்மல்’ உடைகள், வீட்டில் பயன்படுத்தும் ‘கேஷுவல்’ உடைகள், விழாக்களுக்குப் பயன்படுத்தும் உடைகள் போன்றவற்றைத் தனித்தனியாகப் பிரித்து அலமாரிகளில் அடுக்கிவைப்பது சிறந்த வழிமுறை.
அதே மாதிரி, உடைகளைப் பருத்தி, நைலான், அதிக எடை, குறைந்த எடை போன்றவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்தி அடுக்கிவைக்கலாம். சட்டைகளை முழுக் கை சட்டைகள், அரைக் கை சட்டைகள் என்று பிரித்து அடுக்கிவைக்கலாம். இப்படிப் பிரித்து அடுக்கிவைப்பது அலமாரி கலைவதிலிருந்து பாதுகாக்கும்.
வண்ணங்கள் முக்கியம்
உடைகளை அவற்றின் வகைப்படி பிரித்த பிறகு, அடுத்த கட்டமாக அவற்றை நிறங்களின் அடிப்படையில் பிரித்து அடுக்கலாம். ஒவ்வொரு வகையான உடையையும் அடர்நிறத்திலிருந்து மென்நிற வரிசையில் அலமாரியில் அடுக்கலாம். உங்கள் உடை அலமாரியை மேலும் சிறப்பாக ஒழுங்கமைக்க விரும்பினால், உடைகளின் அமைப்புகளாக இடம்பெற்றிருக்கும் கோடுகள், பூக்கள் போன்றவற்றின் அடிப்படையிலும் அடுக்கலாம்.
தேவையற்ற உடைகள்
இப்படி அலமாரியில் உடைகளை அடுக்கிவைத்தவுடன், அடுத்தகட்டமாக அவற்றிலிருந்து தேவையற்ற உடைகளை நீக்கிவிடுவது நல்லது. இந்த உடையை இன்று கடையில் பார்த்தால் நீங்கள் வாங்க விரும்புவீர்களா என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். இந்தக் கேள்விக்கு இல்லை, ஒருவேளை வாங்கலாம் என்று பதிலளித்தால், அந்த உடையை அலமாரியிலிருந்து அகற்றிவிடுங்கள்.
என்றாவது ஒரு நாள், இந்த உடையை அணிவேன், இந்த உடை என் மனதுக்கு நெருக்கமானது என்பது போன்ற காரணங்களால் நீண்ட காலமாக அலமாரியில் தேவையற்ற உடைகளைத் தேக்கிவைக்க வேண்டாம். ஓர் ஆண்டுக்கு மேலாக ஓர் உடையை நீங்கள் அணியாமல் வைத்திருந்து, அந்த உடையை பார்த்தால் வாங்க மாட்டேன் என்று இன்று கடையில் நீங்கள் நினைத்தால், அந்த உடையை அலமாரியிலிருந்து எடுத்துவிடவேண்டும்.
சாதாரண உடைகள்
ஹேங்கரில் மாட்ட முடியாத உடைகளை மடித்து உடை அலமாரியிலோ, வெளியிலிருக்கும் அலமாரியிலோ அடுக்கிவைக்கலாம். பெரும்பாலும் சாதாரணமாக வீட்டில் அணியும் உடைகளை இப்படி அடுக்கிவைக்கலாம்.
பைகள்
ஷால்கள், பைகள், உடைகளுக்கேற்ற காலணிகள், தொப்பிகள் போன்றவற்றையும் நிறங்கள் வாரியாக அலமாரியிலோ அட்டைப் பெட்டியிலோ போட்டு அடுக்கிவைக்கலாம். இப்படி அடுக்கி வைப்பதால், பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment