Published : 22 Aug 2015 10:31 AM
Last Updated : 22 Aug 2015 10:31 AM
மாற்றுக் கட்டுமானப் பொருள்களுக்கான காலம் இது. கட்டுமானத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மாற்றுப் பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இவ்வகையான மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் மூலம் நம் பூமி மாசுபடுவது குறைக்கப்படுகிறது. பல்வேறு வழிகளில் நம் சுற்றுச்சூழல் மாசுபட்டுவரும் இன்றைய சூழல் இதன் தேவை அவசியமான ஒன்று. இந்த மாதிரியான மாற்றுப் பொருள்தான் செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks). இது செங்கலுக்கு மாற்றுப் பொருள்.
செங்கல் தயாரிப்புக்காக நாள்தோறும் மரங்கள் வெட்டப்படுகின்றன. பூமியில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இதனால் பூமியில் உண்டாகும் வெப்பம் மிக அதிகமாகும். இது நம்மையும் பாதிக்கக்கூடியது. இதைத் தடுக்கும் பொருட்டே இந்த மாற்றுக் கட்டுமானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் மிக்ஸரும் கிரைண்டரும். ஃபோம் ஜெனரேட்டர் ப்ளே ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருள்கள்.
இதில் சிமென்ட் ஃபோமிங் ஏஜண்ட் தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளே ஆஷ், சிமென்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான இந்தக் கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலரவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும். பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கும். இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகைக் கற்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இம்முறையில் தயாரிக்கப்படும் கற்கள் அதிக எடை தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால் உறுதியானது. எடையும் குறைவு. மேலும், இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும்போது கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கட்டுமானத்தின் மொத்த செலவுகளில் 20 சதவீதம் வரை மிச்சமாகும். அது மட்டுமல்லாது இந்த மாற்றுக் கட்டுமானப் பொருள்களை உபயோகிப்பதன் மூலம் நாம் வாழும் பூமியின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT