Published : 22 Aug 2015 11:30 AM
Last Updated : 22 Aug 2015 11:30 AM

சென்னையின் அடையாளங்கள் அன்றும் இன்றும் - ஒரு நினைவலை

இந்தியாவின் முதல் நவீன நகரம் என்ற அடையாளத்தைக் கொண்ட சென்னை, ஒரு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் மனதுக்கு நெருக்கமான இடமாக இருந்துள்ளது. நாடு விடுதலை பெற்ற பின் சென்னை பெருநகரம் கண்ட ராக்கெட் வேக வளர்ச்சியில், பல பொக்கிஷங்கள் மண்ணோடு மூடப்பட்டுவிட்டன. நல்ல வேளையாக ஒரு சில அடையாளங்கள் மட்டும் அரசின் கருணையாலும், சில ஆர்வலர்களின் அக்கறையாலும் தப்பிப் பிழைத்திருக்கின்றன. சென்னை என்றவுடன் இன்று நம் நினைவுக்கு வரும் முதன்மையான நில அடையாளங்கள், அந்தக் காலத்தில் எப்படி இருந்தன? கால இயந்திரத்தை சற்றே பின்னோக்கித் திருப்புவோம்.

அழிவின் விளிம்பில்: ஆங்கிலேயர்களோடு நெருக்கம் பாராட்டிய ஆர்க்காடு நவாபுகள் 1768-1855 வரை வாழ்ந்த அரண்மனை, சென்னை பல்கலைக்கழகத்துக்கு அருகே மிகப் பெரிய பூங்காவுடன் சேப்பாக்கத்தில் இருந்தது. ‘சேப்பாக்கம் அரண்மனை' என்றழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் வடக்குப் பகுதியான கால்சா மஹாலில், நாடு விடுதலை பெற்ற பின் அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவந்தன. 2012, 2013-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிபத்துகளில் இதுவும் சிதிலமடைந்தது. தற்போது பாதுகாப்புக்காக ஏங்கி நிற்கும் ஒற்றை கோபுரம்.

தப்பிய ஒற்றைக் கட்டிடம்: ஆங்கிலேய ஆட்சியின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றாக எஞ்சி நிற்கும் ராஜாஜி ஹால் எனப்படும் இந்த அரங்கு, 1802-ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு 1939-ல் மதராஸ் மாகாண சட்டப்பேரவைக் கூட்டமும், அண்ணா முதல்வராக பதவியேற்ற இடம் என்ற பெருமையையும் கொண்டது இந்த அரங்கு.

புதிய சட்டப்பேரவை வளாகம் 2010-ல் கட்டப்பட்டபோது, அரசுத் தோட்ட வளாகத்தில் தப்பிய ஒரே பழைய கட்டிடம் இது. சட்டப்பேரவை வளாகமாகக் கட்டப்பட்டு சிறப்பு மருத்துவமனையாக மாறிவிட்ட கட்டிடத்தை, புதிய படத்தின் பின்னணியில் பார்க்கலாம்.

எப்போதும் பரபரப்பு: அண்ணா சாலை எனப்படும் பழைய மவுண்ட் ரோடு 400 ஆண்டுகளுக்கு முந்தையது. கூவம் கடலில் கலக்கும் இடத்துக்கு அருகே தொடங்கும் இந்த அகலமான சாலை கிண்டி கத்திபாராவில் முடிவடைகிறது. 1724-ல் சைதாப்பேட்டையில் அடையாறின் மேல் பாலம் கட்டப்பட்ட பின், இந்தச் சாலை சுறுசுறுப்படைந்தது.

இன்றைக்கு பல்வேறு காரணங்களால் அண்ணா சாலையின் தன்மையும் நெருக்கடிகளும் மாறிவிட்டன. ஆனால், 1910-களில் ரவுண்டானாவாகவும் 2010-களில் சாந்தி தியேட்டர் முனையாகவும் மாறிவிட்ட அண்ணா சாலையின் இந்தப் பகுதி, எப்போதும் பரபரப்பாகவே இருந்துவந்திருக்கிறது.

சிவப்பரங்கு: அரிய பெருமைகள் பல கொண்ட சென்னை அருங்காட்சியகத்தின் 1900-ம் ஆண்டை ஒட்டிய படம், பார்ப்பதற்கு வெளிநாட்டுக் கட்டிடம் போலத் தோற்றமளிக்கிறது.

இன்றைக்கும் காப்பாற்றப்பட்டுவரும் ஒரு சில பழமையான கட்டிடங்களில் ஒன்றான மியூசியம் அரங்குக்கு முன்பாக நிறைய மரங்கள் வளர்ந்துவிட்டதால், அந்த வெளிநாட்டுத் தோற்றத்தை உணர முடியவில்லை. நேரில் பார்க்காத பலருக்கும்கூட மியூசியம் அரங்கு நிச்சயம் தெரிந்திருக்கும், பல சினிமாக்களில் நீதிமன்ற வளாகமாகத் தலைகாட்டியிருக்கிறதே.

மவுன சாட்சி: சென்னை என்றவுடன் நம் மனதில் தோன்றும் முதல் சித்திரமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை நகரம் கண்ட பல்வேறு மாற்றங்களுக்கு மவுன சாட்சியாக நிற்கிறது.

1873-ல் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் சில கட்டுமரங்கள் இருப்பதை இடது ஓரத்தில் பார்க்கலாம். இப்படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்த சென்னை மத்திய சிறையும், பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்தும் இன்றைக்கு இல்லை. சென்ட்ரலைவிட உயரமாக எழுந்துவிட்ட பாலம் மட்டுமின்றி, மெட்ரோ ரயில் பணிகளும் பரபரப்படைந்துவிட்டன.

கடற்கரை சாலை எங்கே? - விவேகானந்தர் இல்லம் இன்றைக்குக் குடிகொண்டிருந்தாலும், சென்னை மக்களுக்கு என்றுமே அது ஐஸ் ஹவுஸ்தான். ஆங்கிலேயர்களின் தேவைக்காக கடல் வழியாகக் கொண்டுவரப்பட்ட ஐஸ் பாளங்களை சேமித்து வைக்க 1842-ல் கட்டப்பட்ட கட்டிடம் இது.

1880-களில் பங்களாவாக மாறுவதற்கு முன், இப்பகுதியில் மணல் பரந்த மெரினாவும் இல்லை, கடற்கரைச் சாலையும் இல்லை.

அதிகரித்துவிட்ட அடையாளங்கள்: உலகிலுள்ள பழமையான செனட் இல்லங்களில் ஒன்று, சென்னை பல்கலைக்கழக செனட் இல்லம். 1879-ல் அது கட்டப்பட்ட கொஞ்ச காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், செனட் இல்லத்துக்குத் தெற்கே ஒன்றிரண்டு தாவரங்களைத் தவிர வேறெதுவும் இல்லாமல் இருக்கிறது.

ஆனால், இன்றைக்கோ செனட் இல்லதுக்கு தெற்கேயும் எதிரேயும் பல புதிய அடையாளங்கள் வந்துவிட்டன. ஆட்களும் அதிகரித்துவிட்டார்கள், அடையாளங்களும் பெருகிவிட்டன.

வெளிநாட்டு சாலையோ? - எஸ்பிளனேடு எனப்படும் இன்றைய என்.எஸ்.சி. போஸ் சாலையின் பாரிமுனை சந்திப்பு இது. உயர் நீதிமன்றம், துறைமுகம், பெரிய சந்தைகள் என முக்கியமான இடங்கள் இருந்த இந்தப் பகுதி, 1900-க்கு முன் பழைய வெளிநாட்டுச் சாலைகளைப் போல நெருக்கடி இன்றி குதிரை வண்டிகள் சாவகாசமாக நடைபயிலும் இடமாக இருந்திருக்கிறது.

இன்றைக்கு அதே சாலையில் பெரும் கட்டிடங்கள் தலைதூக்கி நிற்கின்றன.

நீதியின் கதவுகள்: சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த கட்டிடத்தில் 1862 வரை மதராஸ் மாகாணத்துக்கான உச்ச நீதிமன்றமே இயங்கிவந்ததாம். அதே வளாகத்தில் இருந்த உயர் நீதிமன்றம் 1892-ல்தான், தற்போது உள்ள பாரிமுனை பகுதிக்கு வந்திருக்கிறது.

இங்கே இருக்கும் கலங்கரை விளக்கம்தான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். துரதிருஷ்டவசமாக அது சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இன்றைக்கு அதன் உயரத்தை மறைக்கும் அளவுக்குச் சில மரங்கள் வளர்ந்திருப்பது சிறிய ஆறுதல்.

துறைமுகக் குழந்தை:

சற்றே பெரிய மசூலா படகுகளின் பின்னணியில், 1881-களில் திறக்கப்பட்ட சென்னை துறைமுகத்தின் அந்தக் காலத் தோற்றம். அன்றைக்கு இவ்வளவு நீண்ட மெரினா கடற்கரை இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், சென்னை துறைமுகம் தந்த குழந்தைதான் மெரினா. புதிய படத்தில் இன்றைக்கு பிரம்மாண்ட கிரேன்கள் பெருகிவிட்ட சென்னை துறைமுகக் காட்சியை, மெரினா கடற்கரையிலேயே தெளிவாகப் பார்க்க முடிகிறது.

ஆங்கிலேயர்களோடு நெருக்கம் பாராட்டிய ஆர்க்காடு நவாபுகள் 1768-1855 வரை வாழ்ந்த அரண்மனை, சென்னை பல்கலைக்கழகத்துக்கு அருகே மிகப் பெரிய பூங்காவுடன் சேப்பாக்கத்தில் இருந்தது. ‘சேப்பாக்கம் அரண்மனை' என்றழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் வடக்குப் பகுதியான கால்சா மஹாலில், நாடு விடுதலை பெற்ற பின் அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவந்தன. 2012, 2013-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிபத்துகளில் இதுவும் சிதிலமடைந்தது. தற்போது பாதுகாப்புக்காக ஏங்கி நிற்கும் ஒற்றை கோபுரம்.

நன்றி: இந்து ஆவணக் காப்பகம், இணைய வரலாற்று ஆர்வலர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x