Published : 22 Feb 2020 12:34 PM
Last Updated : 22 Feb 2020 12:34 PM

நவீனச் சமையலறைகள்

ஜி.எஸ்.எஸ்.

நவீன அடுக்ககங்களுக்கு மாறுவோர் முன் தோன்றக்கூடிய ஒரு கேள்வி - மாடுலர் சமையலறையா, வழக்கமான பாணியில் அமைந்த சமையலறையா, எது நல்லது?

மாடுலர் சமையலறைகளை வைத்திருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். ‘‘இதுதான் பெஸ்ட், வசதியாக இருக்கிறது’’ என்று கூறுபவர்களும் இருப்பார்கள். ‘‘என்னவோ, நிறையப்பேர் சொன்னாங்களேன்னு மாடுலர் சமையலறையை வச்சுக்கிட்டோம். ஆனால், இந்தியச் சமையலுக்கு இது ஏற்றது இல்லை. மேற்கத்திய சமையல் வேறு மாதிரி. எளிமையானது. புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக்கிட்ட மாதிரி இருக்கு எனக்கு’’ என்று ஆதங்கப்படுபவர்களும் உண்டு.

பெரும்பாலான வீட்டு வசதிப் பொருள்களில் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. மாடுலர் சமையலறையைத் தேர்வு செய்வதற்குமுன், அதன் சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.

மாடுலர் சமையலறை என்பதன் அடிப்படை வார்த்தை ‘மாட்யூல்’. மாட்யூல் என்றால் தொகுதி என்று பொருள். அதாவது சமையலறை உள்ளே பொருட்களை வைத்துக் கொள்ளும் இடங்களைத் தொகுதி தொகுதியாக வடிவமைக்கிறோம். இதன் காரணமாக வருங்காலத்தில் வேறு புதிய கட்டிடத்துக்குச் சென்றால்கூட இந்தத் தொகுதிகளை அப்படியே பிரித்தெடுத்துக் கொண்டு போய் புதிய இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்.

உங்கள் தனிப்பட்ட தேவைக்கேற்ப இவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். மாடுலர் சமையலறைகளில் பாத்திரங்கள், கரண்டிகள் போன்றவையெல்லாம் அவற்றுக்கான டிராயர்களுக்குள்தான் (இந்த டிராயர்களை கேபினெட் என்கிறார்கள்) வைக்க வேண்டும். உங்களிடம் பாத்திரங்கள் அதிகம் என்றால் உயரம் அதிகம் கொண்ட கேபினெட்களை அதிக எண்ணிக்கையில் வைக்கலாம்.

தட்டுகள் நெட்டுக்குத்தாக வைக்கும் வசதி கொண்ட ஸ்டாண்டை வைக்கும்படியான கேபினெட்கள் உண்டு. பெரும்பாலான மாடுலர் சமையலறைக்கான தொகுதிகள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டு வீடுகளில் பொருத்தப்படுகின்றன. எனவே, தச்சர் வீட்டுக்கு வந்து மாடுலர் சமையலறையை உருவாக்குவார் என்று எண்ண வேண்டாம்.

மாடுலர் சமையலறையில் மேடை சமதளத்தில் இருக்கும். ஸ்டவ்கூட அதன் நடுவே சமதளத்திலேயே பொருத்தப்பட்டால் மேடையை சுத்தம் செய்வது எளிது. ஆனால், மாடுலர் சமையலறையை உருவாக்க அதிகம் செலவாகும். இவற்றில் பொருத்தப்பட்டுள்ள கேபினெட்கள் நவீனத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை. இவற்றில் ஏதாவது பழுது ஏற்பட்டால் ‘ஏதோ ஒரு உள்ளூர் தச்சரைக் கொண்டு’ அதைச் சரிசெய்துவிட முடியாமல் போகலாம்.

மாடுலர் சமையலறையில் கடைசி நிமிடத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்துவிட முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டவை இவை. பெரும்பாலான மாடுலர் சமையலறைகள் அதிக காலத்துக்கு சிக்கலின்றி இருக்கும்.

சமையலறைக்குள் ஏதாவது இன்டீரியர் வேலைகள் செய்யப்பட்டால் அதெல்லாம் முடிந்த பிறகே மாடுலர் சமையலறையின் கேபினெட்கள் பொருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் சிறு சிறு சிமெண்ட், மரத்தூள்கள் கேபினெட்களை இழுக்கும் பகுதிகளில் நுழைந்து அந்தக் கேபினெட்களை எளிதாக இழுத்து மூடுவதில் இடைஞ்சலை உண்டு பண்ணலாம். மாடுலர் சமையலறை அமைக்கப்படும்போது மொத்தச் சமையலறைக்குமே அதிகப்படி இடம் கிடைத்து விட்டதாகத் தோன்றும். மாடுலர் சமையலறைகளை வடிவமைக்கும்போது சிலவற்றை மனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்டவ், மைக்ரோவேவ் அவன், கிரைண்டர் போன்ற எல்லாவற்றுக்குமே ஒவ்வொரு குறிப்பிட்ட இடம் என்பது அதில் தெளிவாகி விடும். தவிர அவை (அல்லது அவற்றில் பெரும்பகுதி) கேபினெட்களுக்குள் சென்று விடும்.

முழுக்க முழுக்க வெண்மையான வண்ணத்தில் அமைந்த மாடுலர் சமையலறை வேண்டாம். பராமரிப்பது கஷ்டம். அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டி வரும். கேபினெட்களை மிகவும் சின்னப் பகுதிகளாகப் பிரித்து வைக்க வேண்டாம். கொஞ்சம் பெரிதாகவே வைத்திருப்பது நல்லது. தவிர நிறைய கேபினெட்கள் இருப்பதைவிட குறைவான கேபினெட்கள் (அவற்றிலுள்ள சில தடுப்புகள் இருப்பதுபோல) அமைந்திருப்பது நல்லது.

சுவர் மூலைகளில் உள்ள கேபினெட்களைக்கூட சிரமமின்றிப் பயன்படுத்துவதேற்ப சுழலும் பகுதிகள் கொண்ட கேபினெட்கள் அறிமுகமாகி விட்டன. அதாவது உள்ளுக்குள் வைத்திருப்பவற்றைக்கூட ஒரு சுழற்சியின் மூலம் வெளியே கொண்டு வந்துவிட முடியும். சமையலறையில் உள்ள கேபினெட் கைப்பிடிகள் ஒருவிதத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. அவற்றில் அழுக்கு அதிகம் படியும் வாய்ப்பு உண்டு. தவிர உங்கள் உடையும் அதில் சிக்கிக் கொள்ளக் கூடும். இப்போதெல்லாம் கைப்பிடி இல்லாத கேபினெட்கள் வந்துவிட்டன. லேசாக அழுத்தினால் போதும் கேபினெட் வெளியில் வந்து விடும்.

‘துலக்கிய சாமான்களைத் துடைத்து விட்டு உள்ளே வைக்க வேண்டியிருக்கிறதே’ என்பது போன்ற சின்னச் சின்ன இடைஞ்சலைத் தவிர்த்து விட்டால், பழக சிறிது காலமாகும் என்பதை மனத்தில் கொண்டால், மாடுலர் சமையலறைகள் வசதியானவைதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x