Published : 15 Feb 2020 12:26 PM
Last Updated : 15 Feb 2020 12:26 PM
சுபா ஸ்ரீகாந்த்
வெயில் காலம், மழைக்காலம் போன்று இப்போது வைரஸ் காலமும் ஆண்டுதோறும் வரத் தொடங்கிவிட்டது. வைரஸ் காலத்தில், டெங்கு, மலேரியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிஃபா வைரஸ் போன்ற பாதிப்புகள் நம்முடைய கண்ணில் மரண பயத்தைக் காட்டி சென்றுவிடுகின்றன. இவை போதாது என்று இந்த ஆண்டு புதிதாக வந்திருக்கும் கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது.
இந்த வைரஸ் பாதிப்புகளுக்குச் சுத்தமின்மையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். நமது வீடு சிறியதா பெரியதா என்பது முக்கியமல்ல; அது சுத்தமாக இருக்கிறதா என்பதே முக்கியம். வீட்டைச் சுத்தமாக வைப்பது நமது கடமை. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் சில வழிமுறைகள் உள்ளன.
சமையலறை
நமது வீட்டின் சமையலறையிலிருந்து சுத்தத்தைத் தொடங்க வேண்டும். சமையலறையைக் கூடுமானவரை ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் மின்விசிறி உபயோகிப்பது அதற்கு உதவும். பாத்திரங்களைக் கழுவிய பின்னர் ஸிங்க்கைச் சுத்தமாகக் கழுவி, ஈரம் இல்லாதவாறு துடைத்து வைப்பது நல்லது.
சமையல் முடித்த பின்னர், சமையல் திண்டு, கேஸ் அடுப்பு, மேசை உள்ளிட்டவற்றை நன்கு கழுவி சுத்தமாகத் துடைத்து வையுங்கள். சமையலறை தரையை ஒரு நாளைக்கு மூன்று முறை கூட்டுங்கள். குறைந்தது ஒரு முறையாவது அந்தத் தரையைத் துடையுங்கள்.
வாரம் ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சமையலறையைத் துடைக்க வேண்டும். குறிப்பாக, பாத்திரம் கழுவும் ஸிங்க்கையும் சமையலறை தரையையும் நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஃபிரிட்ஜை வாரம் ஒரு முறை முழுவதும் காலி செய்து, நன்றாகச் சுத்தம் செய்வது அவசியம்.
குளியலறை
நமது வீட்டின் குளியலறையும் கழிப்பறையும் அங்கே உட்கார்ந்து சாப்பிடலாமே என்று தோன்றும் அளவுக்குச் சுத்தமாக இருக்க வேண்டும். குளியலறையின் தளம் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குளியலறையிலும் பேனைப் பயன்படுத்தலாம். பாத்ரூம்மின் வாஷ் பேஸினும் கழிப்பறைக் கோப்பையும் எவ்விதக் கறையுமின்றிச் சுத்தமாக இருக்க வேண்டும். சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு, கழிப்பறை கோப்பையைத் தினமும் கழுவுவது மிகவும் அவசியம். சோப்பு, பேஸ்ட், சாம்பு போன்றவற்றை அதற்கான இடத்தில் வைப்பது நல்லது.
வாரம் ஒரு முறை தரையை மட்டுமல்லாமல்; சுவர்களையும் கழுவ வேண்டும். வாஷ் பேஸினை அதற்கான பிரஷ்ஷைக்கொண்டு சுத்தம் செய்வது நல்லது. குளியலறையிலிருக்கும் ஷெல்ஃபையும் மற்ற இடங்களையும் சுத்தம் செய்ய, கிருமிநாசினியைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் துண்டுகளைத் துவைத்துப் பயன்படுத்துங்கள். வாரம் ஒரு முறை கழிப்பறையை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
வரவேற்பறை
வரவேற்பறையைத் தினமும் ஒழுங்குபடுத்த வேண்டும். அறைக்கலன்களைத் தினமும் தூசிதட்டி விடுவது, டஸ்ட் அலர்ஜி, வறட்டு இருமல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும். தரையைத் தினமும் கூட்ட வேண்டும். வாக்யூம் க்ளீனராலும் தரையைச் சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் தரையைத் துடையுங்கள்.
பிற அறைகள்
அறைகளில் இருக்கும் அறைக்கலன்களைத் தினமும் தூசிதட்டி விடுங்கள். தரையைத் தினமும் கூட்ட வேண்டும். வாக்யூம் க்ளீனராலும் தரையைச் சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் தரையைத் துடையுங்கள். கிருமி நாசினி கலந்த நீரால் துடைப்பது நல்லது. படுக்கையறையின் படுக்கை விரிப்புகளையும் அறைக்கலன் உறைகளையும் வாரம் ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
மாதம் ஒரு முறை செய்ய வேண்டியவை
வீட்டின் எல்லாக் கதவு நிலைகளையும் சுத்தம் செய்யுங்கள். சோஃபாவை நன்கு தூசிதட்டி விடுங்கள். கிளீனர், கண்டிஷனரை போன்றவை மென்மையான தோல் பொருட்களைச் சுத்தம் செய்யப் பயன்படும். சற்றுக் கடினமான தோல் பொருள் என்றால், பிரஷைப் பயன்படுத்தலாம்.
தோட்டம், முற்றம், கார் ஷெட்: உள்ளிட்ட இடங்களை நன்கு கூட்டி, கழுவி சுத்தம் செய்வது அவசியம். வேண்டாத பொருட்கள் கொசுக்களின் வாழ்விடம் என்பதால், சற்றும் யோசிக்காமல் அவற்றைக் கழித்துவிடுங்கள். மெத்தை விரிப்புகளையும் சோபா உறைகளையும் துவைத்து, காய வைத்துப் பயன்படுத்துங்கள்.
குளியலறையிலிருக்கும் ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் முற்றிலும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். வினிகரையும் நீரையும் கலந்து வாஷ் பேசின் ஸிங்க், கழிப்பறையின் வெளிப்பகுதி, குழாய்கள் போன்றவற்றைத் துடைப்பது நல்ல பலன்தரும். விளக்கு, மின்விசிறி, கூண்டு விளக்குகள் போன்றவற்றைச் சுத்தம் செய்வது முக்கியம். திரைச்சீலைகளைக் கழற்றித் துவையுங்கள்.
கதவு, கதவு நிலை, ஜன்னல், ஜன்னல் நிலை உள்ளிட்டவற்றைக் கழுவித் துடைக்க வேண்டும். கண்ணாடி ஜன்னல்களின் ஸ்லைடிங் பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்கையும் தூசியையும் அவ்வப்போது சுத்தம் செய்துவிடுவது நல்லது. இல்லையென்றால், ஜன்னலைத் திறப்பதே கடினமாகிவிடும். ஸ்லைடிங் பகுதியைப் பழைய டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம். வாக்யூம் கிளீனரையும் பயன்படுத்தலாம்.
சுத்தம் பேணுவோம்
நம்மையும் வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தால், பெரும்பாலான வைரஸ்கள் நம்மை அண்டவே அண்டாது. சுத்தத்தின் மேன்மையை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் சாணியால் மெழுகி, கிருமிகள் வீட்டை அண்டாமல் பார்த்துக்கொண்டனர். இன்று காலம் மாறிவிட்டது. நாகரிகத்தின் பெயரால், சாணி மெழுகும் பழக்கம் இன்று வழக்கொழிந்துவிட்டது. ஆனால், மேலே உள்ள எளிய வழிமுறைகள் தொலைந்த சுத்தத்தை மீட்டெடுக்கவும் பேணவும் உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT