Published : 01 Feb 2020 12:48 PM
Last Updated : 01 Feb 2020 12:48 PM
வி.ஆர்.,
பனிக் காலம் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கம் பகலில் கூடி வருகிறது. இனி வரும் மாதத்தில் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை வரும். ஆனால், ஏசி இல்லாமல் கோடையை நம்மால் சமாளிக்க முடியாதா, என்ன? அதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
பகலில் வீசும் அனல் காற்றைச் சமாளித்து வீட்டில் புழங்க வேண்டுமானால் வீட்டைக் குளிர்ச்சியாக மாற்ற வேண்டும். வீட்டைப் புதிதாகக் கட்டிக்கொண்டிருப்பவர்கள் தங்களுடைய வீட்டைக் கோடையைத் தாங்கும் வகையில் குளிர்ச்சியாக வடிவமைப்பதற்குச் சில வேலைகளைச் செய்தால் போதும். தென்னை ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம்.
இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்துகொண்டால் அவ்வளவு ரம்யமாக இருக்கும்.
பொதுவாகவே கோயில்கள், தேவாலயங்களின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கூரை உயரமாக இருப்பதுதான். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூரையின் உயரத்தை 12 அடி இருக்கும் அளவில் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். எல்லாம் சரி, ஏற்கெனவே கட்டிய வீட்டுக்கு என்ன செய்வது என்று கேட்கலாம்.
இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் மொசைக் டைல்ஸ் அல்லது சலவைக் கற்களைப் பதித்துவிடுகிறார்கள். கோடைக் காலத்துக்கு ஏற்றவையாக இவை இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பெரும்பாலான மக்களின் விருப்பமாக அவை இருக்கின்றன. இதுபோன்ற வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான ஒரு தடுப்பைக் கொடுத்தால் வீட்டின் உள்ளே வெளியிலிருந்து கடத்தப்படும் வெப்பம் தடுக்கப்படும்.
பார்ப்பதற்கும் வீட்டிற்குள் ஏதோ உள் அலங்கார அமைப்பை பிரத்யேகமாகச் செய்தது போல் இருக்கும். வீட்டில் உள்ளே புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைக் கோடைக் காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஃபேன்களை முகப்பு அறையிலும் படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பொருத்த வேண்டும்.
அதேநேரத்தில் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவும். வீட்டின் வெளிப்புறத்துக்குக் கோடைக் காலத்தில் அடர்த்தியான வண்ணத்தைவிட மென்மையான வண்ணங்களே சிறந்தவை. மென்மையான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment