Published : 01 Feb 2020 12:40 PM
Last Updated : 01 Feb 2020 12:40 PM
ஜீ. முருகன்
உங்களுக்குக் கட்டிடக் கலையைப் பற்றிக் கொஞ்சம் புரிதல் இருந்தால், ஓரளவு கணினி அறிவு இருந்தால் போதும், உங்கள் வீட்டை நீங்களே வடிவமைத்துவிடலாம். மேலும் அதன் இறுதி செய்யப்பட்ட முப்பரிமாண வடிவத்தையும்கூட பார்த்துவிடலாம்.
இதற்கு நீங்கள் ‘ஆட்டோ கேடு’ போன்ற மென்பொருள்களில் நிபுணராக இருக்கத் தேவையில்லை. ஆட்டோ கேடில் வீட்டுக்கான வரைபடத்தை இரு பரிமாணத்திலும் வீட்டின் மாதிரியை முப்பரிமாணத்திலும் தனித்தனியாக வரைய வேண்டும். ஆனால் ‘ஸ்வீட் ஹோம் 3டி’ (SweetHome 3D) மென்பொருளில் இந்த இரண்டு வடிவமைப்பையும் ஒருங்கே செய்துவிடலாம். இது ஒரு இலவச மென் பொருள்தான்; ஓபன் சோர்ஸ் (Open source) மென்பொருள் என்பதால் உங்களுடைய பங்களிப்பைக்கூட அதற்கு வழங்கலாம்.
கூகுளில் SweetHome 3D என்ற பெயரைத் தட்டித் தேடினால் அதன் இணைய தளத்தை (http://www.sweethome3d.com) எளிதாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். அதில் பதிவிறக்கம் செய்யும் பட்டன் இருக்கும். அதைத் தட்டினால் உங்கள் கணினிக்கு அது வந்து சேர்ந்துவிடும். அதை நிறுவிக் (Install) கொள்ளுங்கள்.
எந்த மென்பொருளையும் முதலில் பார்த்தால் மலைப்பாகத்தான் தெரியும். அதைப் போலத்தான் இதையும் எதிர்கொள்வீர்கள். அதன் கருவிகள் ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியதும் எளிதாகிவிடும். யூ டியுபில் இதற்கான பயிற்சி வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தால் இன்னும் எளிதாகப் புரிந்துகொண்டு விடுவீர்கள்.
Create walls, Create rooms, Create poly line, Create dimensions, Add text என்ற அடிப்படையான கருவிகளையும் box, cylinder என்கிற அடிப்படை முப்பரிமாண வடிவங்களையும் வைத்துக்கொண்டு பல அடுக்குமாடி கட்டிடத்தையும் கட்டிவிடலாம். சுவர்களுக்கு வேண்டிய வண்ணத்தைப் பூசிப் பார்க்கலாம், கருங்கல், செங்கல் போன்ற டெக்ஸர்களை பொருத்திப் பார்க்கலாம். மேல் வின்டோவில் இருபரிமாண வரைபடத்தை வரையும் போதே கீழ் வின்டோவில் அதன் முப்பரிமாண மாதிரி உருவாகிக்கொண்டே வரும்.
Create walls கருவியையும், அதை வைத்து முப்பரிமாண வடிவங்களை எப்படி உருவாக்குவது என்ற நுட்பத்தையும் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்றால் பல மேஜிக்குகளை இதில் செய்ய முடியும். அதே போலத்தான் Elevation அளவும். எந்தப் பொருளை எந்த உயரத்தில் நிறுத்துவது என்பதை இதுதான் தீர்மானிக்கிறது என்பதால் இது முக்கியமானது.
பல வகையான கதவுகள், ஜன்னல்கள், மாடிப்படிகள் போன்றவை முப்பரிமாண மாதிரிகளாகவே இதில் கிடைக்கின்றன. அவற்றை எடுத்து வந்து பொருத்திவிடலாம். அலமாரிகள், விளக்குகள், கடிகாரங்கள், ஓவியங்கள்கூட மாதிரிகளாக இருக்கின்றன. மேலும் வீட்டுக்கு வேண்டிய கட்டில், நாற்காலி, சோபா போன்ற ரெடிமேடான பர்னிச்சர்களையும் கொண்டு வந்து வைத்துவிடலாம்.
செடிகள், மரங்களை நட்டு அழுகு பார்க்கலாம். மனித மாதிரிகளும் இருக்கின்றன. அவற்றை வைத்து ஒரு உயிரோட்டமுள்ள ஒரு வீட்டை கண் முன்னால் காண முடியும். தரைக்கு டைல்ஸ், மார்பிள், கிரானைட் கற்களைக்கூட (பைசா செலவில்லாமல்) பாவிவிடலாம்.
Level 0, Level 1, Level 2 என எத்தனை அடுக்குகளாகவும் கட்டிடத்தை மேலே அடுக்கிக்கொண்டே போகலாம். தரைக்குக் கீழேயும் கூடத் தளங்களை உருவாக்க முடியும்.
நல்லது, உங்கள் கற்பனையையும், அறிவையும் கொண்டு ஸ்வீட் ஹோம் 3டியில் ஒரு மாதிரி வீட்டைக் கட்டிவிட்டீர்கள். அதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் அல்லவா? கவலையில்லை. வீட்டின் மாதிரி வரைபடம், முப்பரிமாண மாதிரி, பர்னிர்ச்சர் பட்டியல் எல்லாவற்றையும் பிடிஎப் கோப்புகளாக மாற்றிக்கொள்ளவும், அதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும் முடியும்.
நீங்கள் உருவாக்கிய வீட்டை ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும், வீட்டுக்குள்ளேயே கேமராவைத் தூக்கிக்கொண்டு போய் வீடியோ எடுக்கவுமான வசதியும் இதில் இருக்கிறது. அதை உங்கள் வீடியோ பிளேயரில் போட்டு திரைப்படம் போல உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் காட்டி ஆலோசனை செய்யலாம். உங்கள் பொறியாளரிடமும், கொத்தனாரிடமும் போட்டுக் காட்டினால் அவர்களுக்கு உங்கள் தேவை என்ன என்பது எளிதாகப் புரிந்துவிடும்.
இப்படியான மாதிரியை உருவாக்கிப் பார்ப்பதில் உள்ள முக்கிய அனுகூலம். நீங்கள் உருவாக்கப் போகும் வீட்டை வடிமைக்கப் போகிற பொருள்கள் என்னென்ன, எவ்வளவு தேவை என்பது புரிந்துவிடும். இதனால் செலவையும் கணிக்க முடியும். தவறுகள் நேராமலும் தடுக்கலாம். கதவு, ஜன்னல்களை எங்கே வைப்பது, எந்த சுவரை எவ்வளவு உயரத்துக்கு அமைப்பது, எதை எங்கே வைத்தால் பின்னால் இடையூறுகள் ஏற்படாது என்பதை கண்டுபிடித்துத் திருத்திக்கொள்ள முடியும்.
மொத்த மாதிரியும் உங்கள் கையில் இருப்பதால், உங்களுக்கு வேண்டியதை கொத்தனாரை வைத்து செய்துவிடும் தன்னம்பிக்கை கொண்டவராக நீங்கள் மாறி விடுவீர்கள். இந்தத் தெளிந்த நிலை, உங்கள் கற்பனை வீட்டை நோக்கி உங்களை கைப்பிடித்து எளிதாக அழைத்துச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
‘ஆந்தரய் தார்க்கோவ்ஸ்கியின் ஏழு காவியங்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment