Published : 25 Jan 2020 12:26 PM
Last Updated : 25 Jan 2020 12:26 PM

வாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை நனவாக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

மிது

நடுத்தர குடும்பத்தினர் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்வார்கள். ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தப் பிரிவினருக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் பெரும்பாலும் கானல் நீர்தான். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும்கூட வீடு கட்ட முடியும் என்று கூறுகிறார்கள். ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதம மந்திரி குடியிருப்புக் கட்டும் திட்டம்) என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சொல்வது என்ன?

மத்திய அரசு முன்பு அறிவித்த ‘எல்லோருக்கும் வீடு’ என்ற திட்டம்தான் தற்போது ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கு அதிகமாக வீடுகளை நாடு முழுவதும் கட்ட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். 2015-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2022-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாகச்செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி முடிப்பது, இரண்டாம் கட்டமாக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 200 நகரங்களில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வது, மூன்றாவது கட்டமாக எஞ்சிய நகரங்களில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுக்குள் மேம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொள்வது என திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரிவினர் தங்கள் குடும்பத்துக்கு வீடு வாங்க மானியம் அளிப்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு லட்சம் ரூபாய் முதல் 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாகக் கிடைக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெறும் பயனாளிக்கு வட்டியில் 6.5 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பொதுவாக பெண் மனுதாரராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்தத் திட்டம் பெண்கள் நலம் சார்ந்த திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத (பசுமை வீடு) வகையிலான தொழில்நுட்பங்களை முன்னனெடுக்க வேண்டும் என்று இதில் நிபந்தனையும் உள்ளது.

வீட்டுக் கடன் வாங்கி தவணைச் செலுத்தும்போது நடுத்தக் குடும்பத்தினரே திணறி விடுவார்கள். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் என்றால் அவர்களுக்கு இன்னும் சிக்கலாகிவிடும். இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் வீட்டுக்கடன் பெறுவர்களுக்கு மாதத் தவணை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் வீட்டுக்கடனுக்கான வட்டி வீதம் 10.5 சதவீதமாக உள்ளது.

ஆனால், வீடு வாங்க 6 லட்சம் ரூபாயை 15 ஆண்டு கால அவகாசத்தில் கடனாகப் பெற்றால் மாதத் தவணை மாதந்தோறும் 6,632 ரூபாய் என்ற அளவில் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின்கீழ் 6.5 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதால், கடன் பெற்றவர் மாதந்தோறும் 4,050 ரூபாய் செலுத்தினாலே போதுமானது. எனவே தவணைத் தொகையில் சுமார் 2000 ரூபாய் குறைந்துவிடும்.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்குச் சராசரியாக மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாயை வழங்கும். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோர் ஆகியோருக்கு 6.5 சதவீதம் மானியம் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்குக் கூடுதலாக 1.5 ரூபாய் வழங்கப்படும். இவர்கள் நகர்ப்புறங்களில் சொந்த வீட்டை கட்டலாம் அல்லது ஏற்கெனவே வீடு இருந்தால் அந்த வீட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் பெறுவதற்கு வசதியாக மானியம் இணைக்கப்பட்ட கடன் திட்டம் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சில தனியார் வங்கிகளில்கூட இந்த வீட்டுக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x