Published : 11 Jan 2020 02:11 PM
Last Updated : 11 Jan 2020 02:11 PM

வீடு கட்டலாம் வாங்க 11: வலிமையான வளைவுக் கட்டுமானம்

ஜீ. முருகன்

ஆர்ச் என்கிற வளைவு, கட்டிடக் கலையில் பின்பற்றப்படும் அற்புதத் தொழில்நுட்பம். உலகின் பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தத் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய தேவாலயங்கள், பாலங்கள், மசூதிகள், பிரம்மாண்ட அரண்மனைகளில் கூரையைத் தாங்குவதற்காக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று இரும்புக் கம்பிகள், ஜல்லி, சிமெண்ட் கொண்டு அமைக்கப்படும் தூண்கள் செய்யும் வேலையைத்தான், வெறும் கல்கொண்டு அடுக்கப்பட்ட இந்த வளைவுகள் செய்தன. கற்களை இணைக்கக் கலவைகூட இதற்கு அவசியமில்லை என்பதுதான் இதன் சிறப்பு. கருங்கற்களையோ உறுதியான செங்கற்களையோ அடுக்கி அமைக்கப்படும் இந்த வளைவுகள் பல ஆயிரம் கிலோ எடையை அநாயசமாகத் தாங்க வல்லவை.

வலிமையானது மட்டுமல்லாது, இந்த வளைவுகளைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களுக்குப் பிரத்தியேகமான அழகும் வந்து சேர்ந்துவிடுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கம்பிகளாலும் சிமெண்டாலும் அமைக்கப்பட்ட (நாம் வலிமையானது என்று நம்பிய) கான்கிரீட் கூரைகள் இன்று கம்பிகள் துருப்பிடித்து, வில்லைகளைகளாக உடைந்து, நம் தலைமேல் விழுந்து கொண்டிருக் கின்றன.

இந்தச் சூழலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கம்பிகள் இல்லாமல் இந்த ஆர்ச் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் கம்பீரமாக நின்றுகொண்டிருப்பதை, தட்டையான நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஒப்புக் கொடுத்துவிட்ட நாம் அவசியம் கவனிக்க வேண்டும்.

கீழே ஆறடி ஆழம் முதல் மேலே பத்தடி, இருபதடி, முப்பதடி எனக் கூரை வரை, பில்லர்கள், டை பீம், பிலின்த் பீம், லென்டில் பீம் (போதாதற்கு சில் பீம்), மேலே கான்கிரிட் கூரை, அதற்குள் மறைத்து வைக்கும் பீம்கள் என நாம் கட்டும் வீடு முழுவதுமே கம்பிகளும், ஜல்லியும், சிமெண்டும்தான் நிறைத்துக் கொண்டிருக்கின்றன. கட்டிடத்துக்காகச் செலவிடும் தொகையில் பெரும் பகுதியை இந்த அசுரப் பாம்புகளே விழுங்கிக் கொண்டு விடுகின்றன.

விலை கொடுத்து வினையை வாங்குவதைப் போல இந்த வீடுகள் வெப்பத்தைச் சேகரித்து வைக்கும் கொள்கலனாகவும் மாறிவிடுவதுதான் வேதனையான விஷயம். இதற்கு மாற்று என்றால் அது எளிமையான, வலிமையான, செலவு குறைந்த, அழகான, பழமையான இந்த ஆர்ச் தொழில்நுட்பம்தான்.

கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்.
‘மின்மினிகளின் கனவுக் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x