Published : 11 Jan 2020 02:03 PM
Last Updated : 11 Jan 2020 02:03 PM
முகேஷ்
கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட். அதற்கு ஆதாரம் கட்டுமானக் கம்பிகள். இந்தக் கம்பிகளைக் கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதி தேவைப்படும். இரண்டாவது கம்பிகளைக் கொண்டுவந்து சேர்க்க, அவற்றை வளைத்துக் கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாகக் கம்பிகளைக் கட்ட ரெடிமெட் கம்பிகள் வந்துள்ளன.
கட்டுமானத்துக்குரிய விவரங்களை (Bar Bending Schedule) முன்பே கொடுத்துவிட்டால் அதற்குத் தகுந்தவாறு கம்பிகளைப் பணிமனையிலேயே உருவாக்கிவிடுவார்கள். அப்படி உருவாக்கப்பட்ட கட்டுமானக் கம்பிகளைக் கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்துக்கே அனுப்பிவிடும். அதை அப்படியே இறக்கிக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம்.
சரியான அளவில் கம்பிகளை வளைத்துக் கச்சிதமாகக் கட்ட பிரத்யேகமான மென்பொருட்கள் இருகின்றன. அதைப் பயன்படுத்தி இந்த ஆயத்த கட்டுமானக் கம்பிகளை உருவாக்குகிறார்கள். இந்த முறையின் மூலம் கட்டிடச் செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்திலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறையக் கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்.
பழைய முறையில் ஒரு கட்டிடக் கட்டுமானத்துக்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கம்பிகள் கட்டுமானத்திற்குப் பிறகு வீணாகவும் வாய்ப்புண்டு. இந்தப் புதிய முறையில் ரெடிமேட் கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும்.
கட்டிடப் பணியிடத்திலேயே வேலையை மேற்கொண்டால் அது மற்ற வேலைகளுடன் ஒரு பகுதி வேலை என்பதால் அதற்குத் தனிக் கவனம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வேலை அவர்களைப் பொறுத்தவரை தனியானது.
அதனால் அதைச் சிறப்பாகவும் கவனமாகவும் செய்வார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாகக் கம்பிகள் கிடைக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால் விலையும் சிக்கனம்தான். கம்பிகளை வெட்ட, வளைக்க, கட்ட வேலையாட்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT