Published : 11 Jan 2020 01:35 PM
Last Updated : 11 Jan 2020 01:35 PM
இ.எம்டி. ஃபாரூக்
எண்பதுகளில் அரசு குடியிருப்பில் வசித்துவந்தோம். அங்கிருந்த நண்பர் ஜோதி விற்பனை செய்த வீட்டு மனையில் 2,565 சதுர அடி மனையை ஒரு ரூபாய் முன் பணம் கொடுத்துப் பதிவுசெய்துவைத்தோம். பிறகு அந்த மனையை ரூ. 26,500க்கு அவரே எங்களுக்குப் பத்திரப்பதிவுசெய்து கொடுத்தார்.
இடம், ஊரப்பாக்கம் ஸ்ரீராம் நகர். அந்த மனையை என் வருங்கால வைப்பு நிதிக் கடன் மூலம்தான் வாங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் மனை சும்மா கிடந்தது. மழைக்காலங்களில் குட்டைபோல் நீர் தேங்கி, நண்பர்களின் கேலிக்கும் ஆளாகும்.
என் மனைவி, அரசு ஊழியர். எனக்கு டிவிஎஸ்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் கிளேட்டனில் வேலை. பதவி உயர்வு பெற்றுப் பல வடமாநிலங்களில் வேலைசெய்ய வேண்டியிருந்தது. 1995 வாக்கில் பாட்னாவுக்கு பணி மாறுதல் பெற்றேன். பீகார் பல நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலம். எங்கள் நிறுவனம் எர்த் மூவிங் இயந்திரங்களுக்குப் பகுதிப் பொருட்களை விநியோத்துவந்ததால் சுரங்கப் பணிமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
நக்சல் பகுதியில் ஒருவர்
96-ல் எனது கம்பெனியின் விநியோக மேலாளருடன் காட்டுப்பகுதியில் உள்ள சுரங்கப் பணிமனைக்கு வாகனத்திக் பயணித்தோம். அது நக்சல் நடமாட்டம் உள்ள பகுதி. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஊன்றுகாலுடன் ஒருவர் எங்கள் வாகனத்தை மறித்தார். வாகனத்தை நிறுத்தச் சொன்னேன்.
அருகில் வந்தவர், நாங்கள் செல்லும் பணிமனையின் முன்னாள் ஊழியர் என்றும் பணியின்போது காலை இழந்ததாகவும் சிகிச்சைக்குப் பின் வேலை போய்விட்டது. இப்போது பணிக் கொடைக்காக அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
ஒற்றைக்காலுடன் ஊன்று கோலுடன் வண்டியின் முன் சீட்டில் அமர்ந்து கொண்டார். பயணம் தொடர்ந்தது. வந்தவர், “பாபுஜி நான் ஒன்று கேட்பேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே” என்றார். “என்ன?” என்றேன். “பாபுஜி உங்களுக்குச் சொந்தமாக வீடு ஏதும் இருக்கிறதா?” என வங்காள நடை ஹிந்தியில் கேட்டார்.
ஹிந்தியிலேயே “பதிலாக, சொந்த மண்ணில் 10 ஆண்டுகளாக நிலம் மட்டுமே இருக்கிறது. மனைவி மகளுடன் பணி நிமித்தம் பாட்னாவில் வசிக்கிறேன். சொந்த வீடு கட்டும் கனவு இதுவரை நிறைவேறவே இல்லை. நிதி ஆதாரமும் தற்போதைக்கு இல்லை” என்றேன். அந்த நபர், “குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
பாபுஜி. இன்றைய தேதியிலிருந்து 365 நாட்களில் சொந்த வீடு கட்டி குடியும் புகுந்து விடுவீர்கள். என் வார்த்தையை நம்புங்கள்” என்றார். “நல்ல விஷயம் சொல்கிறீர்கள். நன்றி” என்றேன். பணிமனை வாயிலில் இறங்கிக் கொண்டார்.
மனைவியின் அறிவுறுத்தல்
பணி முடிந்து பாட்னா திரும்பினேன். வீட்டில் நுழைந்ததும் என் மனைவி சோகமாக அமர்ந்திருந்தார். காப்பி குடித்தபடி “என்ன விஷயம்?” எனக் கேட்க, அவர் புலம்ப ஆரம்பித்தார்: “சென்னைக்குப் போகும்போதெல்லாம் வயசுப் பெண்ணுடன் ஹோட்டலில் தங்குவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவேயில்லை. நமக்கு ஒரு வீட்டுமனை இருக்குதானே? அதில் ஒரு ஐம்பதாயிரத்தில் சிறிய மச்சுவீடாவது கட்டி, மகளுடன் அங்கேயே இருந்துகொள்கிறேன். நமக்கு ஒரு ஜாகையும் கிடைத்துவிடுமே.”
அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. எனக்கு ஒரே வியப்பு. “சரி வீடு கட்டும் முயற்சியைத் தொடங்கிவிடுவோம். முதலில் நீயும் மகளும் ஊரப்பாக்கத்திற்கே வாடகையில் வீடு பார்த்துப் போங்கள்” என அனுப்பிவிட்டு, வங்கிக் கடனுக்கும் வருங்கால வைப்பு நிதிக்கடனுக்கும் விண்ணப்பித்தேன். என்ன ஆச்சரியம் ஒரே மாதத்துக்குள் அனைத்து வேலைகளும் முடிந்தது. வீடு கட்ட ரூ. 2,50,000 கையில்.
பாலகிருஷ்ணன் என்ற ஒரு நல்ல கட்டுமான ஒப்பந்ததாரரும் கிடைத்தார். முழுப் பணத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு பாட்னா வந்துவிட்டேன். கட்டுமான முன்னேற்றம் பற்றி அவ்வப்போது மனைவி தொலைபேசியில் சொல்வார். ஒருமுறை மட்டும் நேரில் வந்து பார்த்தேன். உடல் சிலிர்த்தது. கடவுளுக்கு நன்றி சொன்னேன். எங்கள் எதிர்பார்ப்போ 500 சதுர அடி. ஆனால் 1,100 சதுர அடியில் 3 அறைகள், சுற்றுச்சுவருடன் வீடு தயார். செலவோ ரூ. 3,75,000. அவர் சொன்னபடி 365 நாட்களுக்குள் புதிய வீட்டில் குடிபுகுந்தோம்.
கைமாறிய கனவு
என் ஒவ்வோரு சென்னை வருகையின்போதும் ஊரப்பாக்கத்தின் அமைதியான சூழ்நிலை இங்கேயே தங்கச் சொன்னது. விரைவிலேயே விருப்ப ஓய்வு பெற்று ஊரப்பாக்கத்துக்கே வந்துவிட்டேன். வீட்டுக்கடனையும் முழுமையாக ஒரே தவணையில் அடைத்தேன். மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவைத்தேன்.
தொடர்ந்து அங்கேயே வசித்துவந்தோம். பிறகு என் மனைவியின் அறிவுறுத்தலாலும் என் மன நிந்தையாலும் வீட்டை இரண்டு மகன்களுக்கும் 2012-ல் சமமாகச் சாசனம் செய்துவிட்டேன். 1997 முதல் தொடர்ந்து 17 ஆண்டுகள் அதே வீட்டில் வசித்தோம்.
பிறகு என் மகன்களின் பண நெருக்கடியின் காரணமாக 2014 வாக்கில் 70 லட்சம் ரூபாய்க்கு மகன்கள் வீட்டை விற்றுவிட்டனர். தொகையைப் பகிர்ந்துகொண்டனர். பெற்றவர்களுக்குப் பங்கில்லை. பணியில் சாதாரண தொழிலாளியாகச் சேர்ந்த நான், எங்கள் நிறுவன நிர்வாக இயக்குநரின் ஊக்கத்தால் முதுநிலைச் செயல் அதிகாரியாக உயர்ந்தேன்.
எங்கள் வீட்டுக்கு வேணு சீனுவாசன் என்னும் நிர்வாக இயக்குநரின் பெயரைச் சூட்ட நினைத்தேன். அது நிறைவேறவில்லை. ஆனால் ஆச்சரியம், வீட்டை 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கியவரின் பெயர் சீனுவாசன். இது மட்டும்தான் இன்றைக்கு என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment