Published : 11 Jan 2020 01:27 PM
Last Updated : 11 Jan 2020 01:27 PM
தீபன்
எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. 1,200 சதுர அடி (அரை கிரவுண்டு) மனை வாங்கினாலும், அதன் முழுவதும் வீடு கட்ட முடியாது. நான்கு பக்கங்களிலும் இடம்விட வேண்டும். எவ்வளவு இடம்விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்கு இடம் மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன.
மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.
அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் தெரியுமா? வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள்.
மொத்தப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. ஒரு கிரவுண்டு மனை இருக்கிறது என்றால் அதில் முழுமையாக வீடு கட்டிவிட முடியாது. குறிப்பிட்ட பரப்பில்தான் வீடு கட்ட முடியும். இந்தக் கணக்கும்கூட தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.
மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். ஏதோ அடுக்குமாடி வீடு கட்டுவதை போல இத்தனை விதிமுறைகளா என்று நினைக்க வேண்டாம்.
எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை வீட்டு வரைபடமாக மாற்றிச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம். அதற்கு முன்பாக வீடு கட்டும் வரைபடத்துக்கு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும்.
திட்டத்தில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி எல்லாம் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகி விடும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. திட்டத்தில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. திட்டத்துக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...