Published : 15 Aug 2015 02:37 PM
Last Updated : 15 Aug 2015 02:37 PM
வீடு என்பது எல்லாருக்கும் ஒரு கனவு. சொந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டுக்கு அலையாய் அலையும் போது விற்ற வீட்டைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டே செல்வது வலி. அப்போது தங்கள் வாழ் நாளில் சின்னதாகவேனும் ஒரு வீட்டைக் கட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். வாய்க்கும் கைக்குமான போராட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்த கனவு நிறைவேறாத பகல் கனவாகவே முடிந்து விடுவதுமுண்டு.
அப்படித்தான் நாங்கள் பாசத்துடன் உம்மா என்றழைக்கும் எங்கள் அம்மாவின் அந்தக் கனவும் அவர்களின் வாழ்நாளில் நிறைவேறாமலே போனது. எங்களுக்காகவே வாழ்ந்து உயிரையும் துறந்த எங்கள் அம்மாவின் நினைவாக அவர்கள் பேரிலேயே கட்டி முடித்ததுதான் எங்கள் வீடு.
குமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட எழில்மிகு மணலிக்கரை என்ற ஊரில் அமைந்துள்ள எங்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனிதான் எங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம்.
ஒரு பக்கத்தில் குமரிக் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியைத் தழுவி வரும் தென்றல் காற்றும் மறுபுறத்தில் மருத்துவமலை என்றழைக்கும் வேளிமலையின் சுகந்தத்தைச் சுமந்து வரும் காற்றும் இணைந்து எங்கள் பால்கனியை மனச்சோர்வை நீக்கிப் புத்துணர்வு தரும் இடமாக மாற்றுகிறது. உம்மாவுடன் சேர்ந்து எங்கள் வீட்டில் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் மனதை அழுத்தினாலும், வீட்டைக் கட்டி முடிக்கக் கடின உழைப்பால் கை ரேகைகள் தேய்ந்தாலும் அதையெல்லாம் மறக்க வைக்கும் சோலைவனமாய் எங்கள் வீட்டு பால்கனி இருக்கிறது.
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக் கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி. உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி
சொந்த வீடு,
‘தி இந்து’ கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT