Published : 04 Jan 2020 03:26 PM
Last Updated : 04 Jan 2020 03:26 PM

வாடகைதாரரும் உரிமையாளரும்

அனில்

வாடகைதாரர் பலருக்கும் வீட்டு வாடகைச் சட்டங்கள் தொடர்பாகப் பல சந்தேகங்கள் வரும். பொதுவாக, வீட்டு வாடகைச் சட்டம் தொடர்பாகப் பல கட்டுக் கதைகளும் இருக்கின்றன. உதாரணமாக, வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்க முடியும் எனச் சொல்லப்படுவதுண்டு. இது முழுவதும் உண்மையல்ல.

வாடகை வீட்டுக்காரர் எத்தனை வருடம் வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழி இல்லை. ஆனால், 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டுக்கு உரிமை கோரச் சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியம். அப்படி இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் வசித்தால் வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியாது.

அதுபோல் வீட்டு வாடகைக்கான முன்பணம் (Advance) நிர்ணயிப்பதில் ஓர் ஒழுங்கு இல்லை. சில நகரங்களில் ஒருமாதம் வீட்டு வாடகை மட்டுமே முன்பணமாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஐந்து மாதம் முதல் 12 மாதம் வரை முன்பணமாக வாங்கப்படுகிறது.

ஆனால், வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால், அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகை கட்டணம் உயர்த்தப்படுவதை வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.

வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்துக்குக் குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.

வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது. அதுபோல் வாடகைதாரர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று, திடீரென வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலிசெய்யச் சொல்வது. இதில் எந்தெந்தக் காரணங்களுக்காக வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும் என்பதைச் சட்டம் வரையறுத்துள்ளது. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம்.

உதாரணமாக ஒப்பந்தத்தில் 5-ம் தேதிக்குள் வாடகைப் பணம் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை கெடு கொடுக்கலாம். அதற்குப் பிறகு வாடகை கொடுக்கவில்லை என்றால் காலிசெய்யச் சொல்லலாம். வாடகை ஒப்பந்தப் பத்திரத்துக்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விட்டாலோ வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தாலோ காலிசெய்யச் சொல்லலாம். வீடு எந்தப் பயன்பாட்டுக்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற காரியத்துக்குப் பயன்படுத்தினால் காலிச்செய்யச் சொல்லலாம். உதாரணமாக வசிப்பதற்காக ஒப்பந்தம்செய்த வீட்டில் வணிகம் செய்தால் காலிசெய்யச் சொல்லலாம்.

சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்தினாலோ பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தாலோ காலிசெய்யச் சொல்லலாம். வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபட்டாலோ வீட்டில் வசிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தாலோ வீட்டைக் காலிசெய்யச் சொல்லலாம். மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது.

வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டுக்காகச் செலுத்தியிருக்கும் முன்பணத்தில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.

இதுபோல் வீட்டு உரிமையாளரிடமிருந்து வாடகைதாரர் இழப்பீடு வாங்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழும். தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது இது போன்று உரிமை யாளர்கள் தொந்தரவு தரும்போது வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம்.

இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகை தாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும் பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும். வாடகை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சென்னைவாசிகள் உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x