Published : 04 Jan 2020 01:53 PM
Last Updated : 04 Jan 2020 01:53 PM
சீதாராமன்
சென்னை போன்ற பெரு நகரங்கள் அல்லாத சிறு நகரங்கள், சிற்றூர்களில் பெரும்பாலும் மனை வாங்கி வீடு கட்டுவதுதான் வழக்கம். அப்படி மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தால் வீட்டுக் கடன் வாங்குவது எளிதான காரியம் அல்ல.
சென்னை என்றால் சிஎம்டிஏ சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகத்தில் அனுமதி வாங்க வேண்டும். அதுபோல வெளியூரில் மனை வாங்கி வீடுகட்டுபவர்கள், நகர ஊரமைப்பு மற்றும் திட்டமிடுதல் இயக்ககத் துறையில் (டிடிசிபி) அனுமதிபெற வேண்டும்.
இந்த இரு அமைப்புகளிலும் அனுமதி பெற்ற நிலங்களில் பிரச்சினைகள் பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில், மனையின் கிரயப் பத்திரம், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இந்த அமைப்புகள் தெளிவாக ஆராய்ந்த பிறகுதான் சம்பந்தப்பட்ட அந்த மனைக்கு அனுமதி கிடைக்கும்.
மனையில் ஏதேனும் வில்லங்கங்கள் இருந்தாலும் இந்த இரு அமைப்புகளின் ஆய்வுகளின்போது வெளிப்பட்டுவிடும். சிஎம்டிஏ, டிடிசிபி ஆகிய அமைப்புகள் வீடு கட்ட அனுமதி வழங்கச் சில விதிகளை வகுத்துள்ளன. அவர்களின் விதிகளுக்கு நாம் விண்ணப்பிக்கும் மனை இல்லையென்றால் அனுமதி கிடைக்காது.
வீட்டு மனை உள்ள இடத்தில் உள்ள பொதுப் பயன்பாட்டு சாலையைக் கொண்டும் அந்த ஊரின் மக்கள்தொகை, நகராட்சியா, பேரூராட்சியா, ஊராட்சியா என்பதைப் பொறுத்தும் கட்டிட அனுமதி வழங்கப்படும். குறிப்பாகச் சில ஊர்களில் குறிப்பிட்ட தளம் வரை மாடித் தளம் கட்ட முடியும். அதற்குமேல் கட்ட வேண்டி வீட்டுக் கடன் விண்ணப்பித்தால் கடன் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது. சென்னையும், புறநகரில் சில பகுதிகளும் சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பகுதிக்குள் வீடு கட்ட இந்த அமைப்பில்தான் அனுமதி வாங்க வேண்டும்.
இவை அல்லாது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் டி.டி.சி.பி.யின் அனுமதியின் கீழ் வரும். ஆனால், இந்த இரு அமைப்புகளின் அனுமதி மட்டுமல்லாது, வீட்டு மனை உள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறுவதும் அவசியம். இதைப் பயன்படுத்தி பஞ்சாயத்தில் மட்டும் அனுமதிபெற்று வீட்டு மனைகள் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பஞ்சாயத்து அப்ரூவல் என்பது பஞ்சாயத்துத் தலைவர் தனது லெட்டர் பேடில் எழுதிக் கொடுப்பதுதான்.
இதை வைத்து வீட்டு மனைகளை விற்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஒருவகையில் பஞ்சாயத்தில் அனுமதிபெறுவது மிக எளிது. அதனால் ரியல் எஸ்டேட் துறையின் அசுர வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஞ்சாயத்து அனுமதியே போதும் என அதை விற்கக் கிளம்பி விட்கிறார்கள். இம்மாதிரி வீட்டு மனைகளை வாங்கும்போது இதில் உள்ள சிக்கல்கள் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், பஞ்சாயத்து அனுமதி வழங்குவதில் சிஎம்டிஏ, டிடிசிபி போன்ற அமைப்புகள் பின்பற்றுவதுபோல விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அந்த வீட்டுமனையை அவ்வளவாக ஆராய்வதில்லை. அதனால் அதில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் நமக்குத் தொடக்கத்தில் தெரியாமல் போய்விடும். இம்மாதிரி பஞ்சாயத்தில் அனுமதிபெற்ற நிலங்களுக்கு வங்கிகளில் இருந்து வீட்டுக் கடன் கிடைப்பதிலும் சிக்கல் வருகிறது.
ஆனால், இம்மாதிரியான மனைகளுக்கு வீட்டுக் கடன் வழங்கத் தனியார் வீட்டுக் கடன் நிதி நிறுவனங்கள் முன்வருவதாகவும் சொல்லப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மனைக்கான ஆவணங்களை, லே அவுட் பிளான்களை பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் தெளிவாகப் பார்ப்பதற்கான அமைப்பு இன்னும் உருவாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT