Published : 08 Aug 2015 12:00 PM
Last Updated : 08 Aug 2015 12:00 PM
வீடு வாங்க உத்தேசிக்க ஆரம்பித்தவுடனேயே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் தான். ஏனென்றால், வீட்டுக் கடன் இன்றி பெரும்பாலும் யாரும் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க முடிவதில்லை. அப்படி வங்கிகளுக்கு வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும்போதும் சரி, வங்கிக் கடனை வழங்கும் பணிகள் நடைபெறும்போதும் சரி, நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் எழும். அப்படி எழும் சந்தேகங்களைப் பார்ப்போமா?
தவணை
வீட்டுக் கடன் வாங்கியவரிடம் இருந்து வங்கிகள் மாதத் தவணையை (இ.எம்.ஐ.) வசூலிக்கும் அல்லவா? இந்த மாதத் தவணைத் தொகையை எப்படி வங்கிகள் முடிவு செய்கின்றன என்று ஒரு சந்தேகம் எழும். பொதுவாக வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் மாதத் தவணைத் தொகையை நாம் கட்டி முடிக்கும்வரை ஒரே அளவாக இருப்பது போலப் பார்த்துக்கொள்ளும். இதில் மாத வருவாய், வயது முக்கிய அளவாக எடுத்துக் கொள்ளப்படும். வயது அதிகமாக இருக்கும்போது தவணைத் தொகை அதிகமாக இருக்கும். சில வங்கிகளும், சில நிறுவனங்களும் இளம் வயது உள்ளவர்களை மனதில் வைத்து, வீட்டுக் கடன் வாங்கிய புதிதில் குறைவாகவும், வருவாய் அதிகரிக்க அதிகரிக்க மாதத் தவணையை அதிகமாகவும் கட்டவும் அனுமதிப்பதுண்டு.
இந்த விஷயத்தில் நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு வேறு முறையை வங்கிகள் பின்பற்றும். அதாவது, தொடக்கத்தில் மாதத் தவணை அதிகமாவும், போகப் போக குறைவாகக் கட்டும்படியும் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீட்டுச் செலவுக்கு குறைந்தப்பட்சம் 40 சதவீதத் தொகையையாவது இருக்க வேண்டும் என்பதை மனதில்கொண்டே தவணைத் தொகை நிர்ணயிக்கப்படும்.
வட்டி மட்டுமே
பலருக்கும் இருக்கும் இன்னொரு சந்தேகம் இது. குறிப்பாகத் தனி வீடு வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு எழும் சந்தேகம் இது. சொந்த வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு வாடகை வீட்டில் இருந்தபடிதான் புதிய வீட்டைக் கட்டுவார்கள். கட்டுமானப் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் வரை ஆகலாம். எனவே வீடு கட்டி குடியேறிய பிறகு தவணைத் தொகை கட்ட வேண்டுமா அல்லது வீட்டுக் கடன் பெற்றதிலிருந்தே தவணையைக் கட்ட வேண்டுமா என்ற கேள்வி எழும்.
கட்டி முடித்த வீட்டைப் புதிதாக வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வீட்டுக் கடன் ஒரே செக்கில் பணத்தை எந்த பில்டரிடம் இருந்து வீட்டை வாங்குகிறீர்களோ அவர்களிடம் வங்கிகள் கொடுத்துவிடும். எனவே வீட்டுக் கடன் வாங்கிய மாதத்துக்கு அடுத்த மாதத்தில் இருந்தே தவணைத் தொகை செலுத்துவது கட்டயமாகிவிடும்.
இதுவே வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால் தவணை மாறுபடும். அதாவது கேட்கப்படும் வீட்டுக் கடன் முழுவதையும் வங்கிகள் முழுமையாக வழங்காது. கட்டப்படும் பணிகளுக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்கும். இப்படிக் கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டியை மட்டுமே பெரும்பாலான வங்கிகளும், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களும் வசூலிக்கும். வீடு முழுமையாகக் கட்டிய பிறகே முழுத் தவணைத் தொகையை வங்கிகள் வசூலிக்கும்.
கூடுதல் கால அவகாசம்
சிலர் 45, 50 வயதில் வீட்டுக் கடன் பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் மாதத் தவணையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் எத்தனை ஆண்டுகள் வழங்கப்படும் என்ற ஒரு கேள்வியும் எழலாம். வயதான பிறகு வீட்டுக் கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ.-யைக் கட்டி முடிக்கப்படுமா என்பதை வங்கிகள் முக்கியமாக ஆராயும். ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருந்தால், அதிகபட்சம் 70 வயதுவரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது.
ஆனால், கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைக்க அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும். ஒரு வேளை கோ-ஃபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாக வீட்டில் உள்ள வாரிசு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதற்கான உத்தரவாதத்தை வங்கிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். இந்த நிபந்தனைக்குட்பட்டு வங்கிகள் கால அவகாசத்தை வழங்குவது உண்டு.
சலுகைகள்
வீட்டுக் கடன் பெறுபவர் செய்யும் வேலை, அவர் சார்ந்த நிறுவனங்களைக் கணக்கில் கொண்டு சில வங்கிகள் முக்கியத்துவமும் சலுகையும்கூட வழங்குவதுண்டு. ஏற்கெனவே வாங்கிய கடனைச் சிக்கல் இல்லாமல் கட்டி முடித்திருந்தால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். ஒரு சில வங்கிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வட்டி விகிதத்தில் சலுகை கிடைப்பதும் உண்டு. இன்னும் சில வங்கிகள் முன்தொகையை (மார்ஜின்) அதிகமாக வழங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகை வழங்குவதும் உண்டு.
அதாவது குறைந்தபட்சம் 20 சதவீதம் முன் தொகையை கடன் பெறுபவர் கொடுக்க வேண்டும். அதைக் கூடுதலாக கொடுக்கும்பட்சத்தில் வட்டியில் சலுகைகள் உண்டு. ஆனால், இந்த முறைகள் எதுவும் விதிமுறைப்படி வழங்கப்படுவதில்லை. எல்லோருக்கும் இந்தச் சலுகைக் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. கடன் வாங்குபவர் வங்கியில் பேசுவதைப் பொறுத்தே சலுகைகள் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT