Published : 15 Aug 2015 03:03 PM
Last Updated : 15 Aug 2015 03:03 PM
சென்னைக்கு 376-வது பிறந்த நாள் இது. பிறந்த நாள் கொண்டாடும் பேறு பெற்ற நகரங்களுள் நம் சென்னையும் ஒன்று. சென்னையின் பிறந்த நாள் ஒரு வாரம் கொண்டாடப்படவுள்ளது. நாளை (16-ம் தேதி) தொடங்கப்படவுள்ள இந்தக் கொண்டாட்டம் 22-ம் தேதி முடிவடைகிறது. இதை ஒட்டி சைக்கிள் பேரணி, புத்தக வெளியீடு, கூட்டங்கள் எனப் பல விதமான நிகழ்ச்சிகளை நகரமெங்கும் பல அமைப்புகள் முன்னெடுக்கவுள்ளன. சென்னையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் கட்டிடங்கள். புகழ்பெற்ற அதன் கட்டிடங்களைப் பற்றி இந்தச் சிறப்புப் பகுதியைச் சென்னை தினக் கொண்டாட்டத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.
வள்ளுவர் கோட்டம்
சென்னையின் அடையாளங்களுள் ஒன்று வள்ளுவர் கோட்டம். வான் புகழ் வள்ளுவம் தந்த திருவள்ளுவரைப் போற்றும் வகையில் தமிழக அரசால் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு கல்லில் பிரம்மாண்டமான தேர் உருவாக்கப்பட்டுள்ளாது. இதன் உயரம் 39 மீட்டர். இதன் உள்ளே திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியக் கட்டிடக் கலையைச் சிறப்பிக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள மண்டபத்தில் புத்தக வடிவில் குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய பெரிய அரங்கமும் இதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற தென்னிந்தியக் கட்டிடக் கலைஞரான கணபதி ஸ்தபதி இதன் வடிவமைப்பாளர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னைக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு அடையாளம். தமிழக அரசால் 2010-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலகம் ஆசியாவின் பெரிய நூலங்களுள் ஒன்று. எட்டு ஏக்கரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 9 மாடிகளைக் கொண்டது. 1,280 பேர் அமரும் அளவிலான அரங்கமும் உள்ளது. நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நூலகத்தில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி நூல்களும் உள்ளன. குழந்தைகளுக்கெனத் தனிப் பிரிவும் உள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு உள்ளன. இந்தக் கட்டிடம் அமெரிக்காவின் பசுமைக் கட்டிடச் சான்றிதழான லீட் (LEED) பெற்றுள்ளது. சி.என். நாராயணா ராவ் நிறுவனம் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தது.
சென்னைப் புறநகர் பேருந்து நிலையம்
ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையைப் பெற்ற பேருந்து நிலையம் இது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கும் சென்னை நகருக்குள் செல்லும் பேருந்துகளுக்குமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. 2002-ல் இது மக்களுக்குச் சேவையாற்றத் தொடங்கியது. ஒரு நாளைக்கு 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்திவருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து போகின்றன. 17 ஆயிரத்து 840 சதுர மீட்டர் பரப்பளவு பேருந்துகள் நிற்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு மக்கள் காத்திருக்கும் பகுதிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டபோது விமான நிலையம் போல இருந்த இந்தப் பேருந்து நிலையம் இப்போது முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. என்றாலும் சென்னையின் பல்லாயிரக்கணக்கான பயணிகளையும் பேருந்துகளையும் ஒருங்கிணைக்கும் மையமாக இன்றளவிலும் இது திகழ்கிறது.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னையின் பெருமைமிகு அடையாளமாக ஆகியிருக்கிறது மெட்ரோ ரயில். இந்தாண்டு ஜூன் 29-ல் அது தன் சேவையைத் தொடங்கிய நாளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் சுற்றுலாத்தலங்களாக ஆகிவிட்டன. வயது வித்தியாசமின்றி பறந்து செல்லும் மெட்ரோ ரயிலைக் காண நாள்தோறும் அதன் நிலையங்களில் கூடிவருகின்றனர். தமிழக அரசால் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2015-ல் அதன் ஒரு வழித் தடப் பணிகள் முடிவடைந்துள்ளன. சென்னை முழுவதையும் இணைக்கக்கூடிய வகையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை முதற்கட்டமாக தன் சேவையைத் தொடங்கியுள்ளது. சீனாவின் உயர் தொழில் நுட்பத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுவருகிறது.
டைடல் பார்க்
ராஜீவ் காந்தி சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த டைடல் பார்க் ஒரு மென்பொருள் பூங்கா. தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட இது சென்னைக்கு நவீன அடையாளமாக மாறியுள்ளது. மென்பொருள் நிறுவனங்களுக்கான அலுவலக இடப்பற்றாக்குறையைப் போக்கும் விதமாக இது கட்டப்பட்டது. 13 மாடிக் கட்டிடமான இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிகள் 2000-ம் ஆண்டில் முடிவடைந்தன. ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்காக்களுள் ஒன்று என்ற பெருமையும் டைடல் பார்க்குக்கு உண்டு. சென்னை, உலகின் முக்கியமான மென்பொருள் மையமாக மாற இந்தக் கட்டிடம் ஒரு தொடக்கமாக இருந்தது. ஜி.ஆர்.என் நிறுவனம் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளது.
எல்.ஐ.சி. கட்டிடம்
சென்னையின் முதல் வானுயர் கட்டிடம். தென்னிந்தியாவிலேயே முன்பு உயரமான கட்டிடம் என்றுகூடச் சொல்லலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை சென்னை வருபவர்கள் தவறாது வந்து கண்டு வியக்கும் இடமாகவும் இது இருந்துள்ளது. சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனரான சிதம்பரம் செட்டியார் இந்தக் கட்டிடப் பணியை 1952-ல் தொடங்கினார்.
ஆனால் 1956-ல் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங் களும் தேசியமயமான பிறகு இந்தக் கட்டிடம் 1959-ல் எல்.ஐ.சி. இன்சூரன்ஸின் சென்னைப் பிரிவின் தலைமையிடமாக ஆனது. இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் லண்டனைச் சேர்ந்த எச்.ஜே.பிரவுன், எல்.சி. மவுலின். இதைக் கட்டி முடித்தது எல்.எம். சிட்லே என்னும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர். இதற்குப் பிறகு இந்தக் கட்டிடத்தைக் காட்டிலும் உயரமான பல கட்டிடங்கள் சென்னையில் கட்டப்பட்ட பிறகும் இது சென்னையின் ஓர் அடையாளமாக இன்றும் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT