Published : 23 Nov 2019 12:28 PM
Last Updated : 23 Nov 2019 12:28 PM
ஜி.எஸ்.எஸ்.
ஒரு வீட்டைக் கட்டும்போது பெரிய அளவில் நாம் மூலதனத்தை அதில் கொட்டுகிறோம். குறைந்த காலத்தில் அந்த வீடு கட்டப்பட்டால் இப்போது இருக்கும் வீட்டுக்கு வாடகை தரவேண்டாம். குடியேறாத புதிய வீட்டுக்கு வங்கிக்கு மாதத் தவணை செலுத்த வேண்டாம் என்றெல்லாம் கணக்கிடுவோம்.
ஆனாலும், கட்டிட ஒப்பந்ததாரர் பெரும்பாலும் வீட்டை முழுவதுமாக எழுப்பிச் சரியான காலத்தில் நம்மிடம் ஒப்படைப்பதில்லை. அவர்களில் சிலர் மட்டும் தாமதமாகும் காலத்துக்குள் நாம் செலுத்திய தொகைக்கான வட்டியை அளிக்கிறார்கள்.
இப்படித் தாமதம் ஆவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை அறிந்து கொண்டால் அவற்றில் பெரும்பாலானவற்றைத் தவிர்ப் பதற்கான வழியும் புலப்பட்டு விடும். மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்தது, புயல் வீசியது, தெருக்களில் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் எதிர்பாராமலும் வரலாம். இது போன்ற காரணங்களால் கட்டுமானப் பணி தடைபடலாம். இது தவிர்க்க முடியாதது.
பட்ஜெட் எவ்வளவு என்பதில் முதலிலேயே தெளிவாக இருக்க வேண்டும். கட்டிட ஒப்பந்ததாரருடன் எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் போடுங்கள் (தனி வீடு கட்டுபவர்கள் பலரும் இதைச் செய்வதில்லை).
அந்த ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகை எந்தெந்தத் தேதிகளில் அளிக்கப்பட வேண்டும், அப்போது எந்ததெந்த வேலைகள் முடிந்திருக்க வேண்டும், முழுமையான கட்டுமானம் எப்போது முடிவடைய வேண்டும் என்பவை குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வாய் வார்த்தையாக இல்லாமல் எழுத்துப்பூர்வ ஒப்பந்தமாக இருக்கும்போது தவறான புரிதல்களும் தவிர்க்கப் படும். குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அதிகமாக இருக்கும்.
இப்போதெல்லாம் கட்டிடப் பணியாட்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்கிறார்கள். உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளைவிடப் பிற பணிகளில் ஈடுபடவே பெரும்பாலான இளம் தலைமுறையினர் விருப்பம் காட்டுகிறார்கள். எனவே, தொடக்கத்திலேயே இது தொடர்பான உத்தரவாதத்தை ஒப்பந்ததாரரிடம் தெளிவாகப் பெற்றுவிடுங்கள்.
முக்கியமாக ஒப்பந்ததாரர் ஏற்கெனவே கட்டுமானம் செய்த இரண்டு வீடுகளின் உரிமையாளர்களையாவது அணுகிப் பேசிப் பாருங்கள். அவர் எந்த அளவு தன் உறுதிமொழியைக் காப்பாற்றுபவராக இருக்கிறார் என்பது தெரிய வரும்.
வீட்டுக்குள் நடக்கும் கட்டுமான வேலைகளை வெயிலோ மழையோ தள்ளிப்போட வைக்காது. ஆனால், வெளிப்புற வேலைகளை நிச்சயம் கடும் மழையோ பெரும் வெயிலோ பாதிக்கும்.
பெரும் காற்று வீசினாலும் மேற்கூரைக் கட்டுமானத்துக்கு அது பெரும் இடைஞ்சலாக இருக்கும். வானிலை அறிக்கைகளைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பொதுவாக, கட்டுமானக் காலத்தில் அந்தப் பகுதியில் வெப்ப நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment