Published : 16 Nov 2019 10:10 AM
Last Updated : 16 Nov 2019 10:10 AM

மழை நீரைச் சேமிப்போம்

வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த வாரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு மழை பெய்தும் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஆழம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதன் மூலம் இதை உணர முடியும்.

கோடைக் காலத்தில் பெரும்பாலான ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நிலத்துக்குள் மழை நீர் ஊடுருவிச் சென்றால்தான் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். நமக்கும் தேவையான நீர் கிடைக்கும். ஆனால், இன்று வீட்டைச் சுற்றிப் பெயருக்குக்கூடத் திறந்தவெளி கிடையாது. வீட்டைச் சுற்றித் தண்ணீர் இறங்குவதற்கு வழியில்லாமல் சிமெண்ட், டைல் தளத்தால் மூடிவிட்டோம்.

வெளியேயும் மண் சாலைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதியை சிமெண்ட் தளமாகக் கட்டி மூடிவிடுகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளோ தார் சாலை, கல் சாலை, சிமெண்ட் சாலையைப் போட்டு மண் சாலையை நிரந்தரமாக மூடிவிடுகிறார்கள். திறந்தவெளிகள் குறைந்துகொண்டே போவதால், பெய்யும் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் நிலத்தடி நீர் குறையும் போக்கு தொடர்கிறது.

ஒரு காலத்தில் இரவு நன்றாக மழை பெய்தால் காலையில் மழை பெய்ததற்கான தடமே இருக்காது. மழை நீர் முழுமையாக நிலத்துக்குள் இறங்கியிருக்கும். கிணற்றை எட்டிப் பார்த்தால் தண்ணீர் மேலேறி நிற்கும். ஆனால், இன்றோ கான்கிரீட் கட்டமைப்புகள் பெருகிவிட்டதால் மண் பரப்பு குறைந்துவிட்டது. பெய்யும் மழை நீர் மண்ணுக்குள் ஊடுருவிச் செல்ல வழி இல்லாததால் வீணாகிறது. எனவே, கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளின் ஆழத்தை அதிகரித்தாலும் அதில் தண்ணீர் வருவது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டேபோகிறது.

இந்த இடத்தில்தான் நிலத்தடி நீர்மட்டம் உயர மழை நீர்ச் சேகரிப்புத் திட்டம் அவசியமாகிறது. மகத்தான திட்டமாக மாற வேண்டிய மழை நீர்ச் சேகரிப்புத் திட்டம் ஒவ்வொரு கட்டிடத்திலும் காட்சிப் பொருளாகிக் கிடக்கிறது. பொதுமக்கள் முறையாக இதைச் செய்யாமலும் பராமரிக்காமலும் விட்டுவிடுவது தொடர்கிறது. மழை நீரைச் சேமிப்பதன் மூலம் தண்ணீர்த் தேவையை ஓரளவு தீர்த்துக்கொள்ளலாம்.

எந்த மாதிரியான கட்டிடத்திலும் பெய்யும் மழை மேற்கூரையில் விழும். அப்படி விழும் மழை நீரை மொட்டைமாடித் தண்ணீரைச் சேமிக்க, மொட்டை மாடியிலிருந்து குழாய்கள் மூலமாகக் கீழே கொண்டு வந்துவிடலாம். அந்தக் குழாய்களை இணைத்து ஒரு வடிகட்டி தொட்டியை அமைத்து, அதை நீரைச் சேமிக்கும் தொட்டியில் சேமித்து வைக்கலாம். இந்தத் தண்ணீரை உடனடித் தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தொட்டி இல்லாவிட்டால் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேமிக்கலாம். இது உடனடி தேவைக்கான மழை நீர் சேமிப்பு.

இன்னொரு வழியும் உள்ளது. நிலத்துக்குள் தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி நீராகச் சேமிப்பது. தேவையைப் பொறுத்து நீரைச் சேமிக்கலாம். குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கப் பெறாதவர்கள், தண்ணீரைத் தொட்டிக்கு மாற்றி சேமித்துப் பயன்படுத்தலாம்.

மழைக் காலங்களில் இந்த முறைகளைப் பயன்படுத்தி நீரைச் சேமிக்கும்போது தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்கலாம். இனிமேலாவது வீட்டைச் சுற்றிப் பெய்யும் மழை நீரை முறையாகச் சேமித்து உடனடித் தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது நிலத்துக்குள் விட்டு நிலத்தடி நீரை உயர்த்த உதவலாம். அதற்கு வீட்டு மாடியைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் தொடங்கி வீட்டைச் சுற்றிப் பெய்யும் மழை நீர் தெருவுக்குச் சென்றுவிடாதபடி செய்வதும் முக்கியம்.

- முகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x