Published : 09 Nov 2019 10:58 AM
Last Updated : 09 Nov 2019 10:58 AM

சென்னை ரியல் எஸ்டேட்: மவுசு கூடும் குறைந்த விலை வீடுகள்

சீதாராமன்

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் ரியல் எஸ்டேட் துறை மந்த நிலையில் இருந்தது. அது இந்திய ரியல் எஸ்டேட் துறையிலும் பாதிப்பை விளைவித்தது. இந்தியாவில் வணிகத் தலைநகரான மும்பை ரியல் எஸ்டேட் சந்தையில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறை இதிலிருந்து மீண்டு, வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது.

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு இந்திய ரியல் எஸ்டேட் துறை மீண்டும் சரிவை நோக்கிச் செல்வதைச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தத் தேக்க நிலையில் பெரிதும் பாதிக்கப்படுபவை வில்லாக்கள் போன்ற அதிக விலையுள்ள வீடுகள்தாம் எனச் சொல்லப்படுகிறது. இம்மாதிரியான சொகுசு வீடுகளை விற்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதனால், இம்மாதிரியான வீடுகளைக் கட்டக் கட்டுமான நிறுவனங்கள் தயங்குகின்றன. மாறாக, குறைந்த விலை வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

இன்று முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் நிலத்தின் விலை முன்பைவிட எகிறிவிட்டது. அதனால், நகர்ப்புறங்களின் மையப் பகுதியில் இடம் கிடைத்தாலும் கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்ட விரும்புவதில்லை. எல்லா நிறுவனங்களும் புறநகர்ப் பகுதிகளைத் தேடித்தான் போகின்றன.

சென்னை மட்டுமல்ல டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைதான். அதனால், நகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்கூட, குறைந்த விலை வீடுகளைக் கட்டுமான நிறுவனங்கள் கட்டுகின்றன. அப்படிக் கட்டப்படும் வீடுகளும் சொகுசு வீடுகள் அல்ல. குறைந்தவிலை வீடுகள்தாம் கட்டப்படுகின்றன. குறைந்த விலை வீடுகள் விற்பனையாகிவிடுவது இதற்குக் காரணம்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருந்தாலும், எல்லோராலும் வீடுகளை வாங்கிவிட முடிவதில்லை. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோரால் மட்டுமே வீடு வாங்குவதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இந்த வருவாய் பிரிவினரும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு வீடு வாங்குவோர் அல்ல.

வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியே வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். எனவே, இந்தப் பிரிவினர் 20 லட்சம் முதல் 35 லட்சம்வரையிலான விலையில் வீடுகள் கிடைத்தால் மட்டுமே வீட்டை வாங்க முன்வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டுதான் சொகுசு வீடுகளுக்குப் பதிலாகக் குறைந்த விலை வீகளைக் கட்டுவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

ஏனெனில், வங்கிகளில் 80 முதல் 85 சதவீதம் வரை கடனுதவி கிடைத்துவிடுவதால், வீடு வாங்க விரும்பும் இந்த வருவாய்ப் பிரிவினரால் குறைந்த விலையில் புதிய வீடுகளை வாங்க முடிகிறது. இந்த வீடுகள் 550 முதல் 700 சதுர அடிவரை பரப்பளவில் இருந்தால் போதும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அதை மனத்தில் வைத்தே குறைந்த பரப்பளவிலான வீடுகளைக் குறைந்த விலையில் கட்ட கட்டுமானத் துறையினர் விரும்புகிறார்கள்.

பெரு நகரங்கள் உள்பட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் கூட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பலவும் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் காலியாகவே கிடக்கின்றன. அப்படியானால், சொகுசு வீடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

ஆனால், இரண்டு படுக்கை அறை, ஒரு படுக்கை அறைக் கொண்ட வீடுகள் ஓரளவுக்கு விற்பனையாகி விடுகின்றன. இந்தப் போக்கின் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாகவே கட்டுமானத்துறையினர் அதிக விலை பிடிக்கும் சொகுசு வீடுகளைக் கட்டுவதைக் குறிப்பிடத்தக்க அளவு குறைத்துவிட்டனர். மாறாக, குறைந்த விலை வீடுகளைக் கட்டுவதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x