Published : 02 Nov 2019 01:17 PM
Last Updated : 02 Nov 2019 01:17 PM

மிளகுக்கு ஒரு கோட்டை

எஸ்.ராஜகுமாரன்

தரங்கம்பாடிக் கோட்டையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘மிளகுக்காகக் கட்டப்பட்ட கோட்டை’ எனலாம். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷார் இந்தியாவுடன் கடல்வழி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களுடன் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் போன்ற ஐரோப்பியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவுக்குக் கடல்வழியே ‘வணிகப் படை’ எடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி இந்தியாவில் காலூன்றிய வணிக நிறுவனங்களே கிழக்கிந்திய கம்பெனி வகையறாக்கள். இவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்குச் சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்னரே போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் குடியேறி இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் கறுப்பு வைரக் கற்களாக விளைந்த மிளகு ஒரு உயர்ரக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் கருதப்பட்டது. அவர்களுடைய நாடுகளில் மிளகு உற்பத்தி இல்லை.

கடற்கரை வாடகைக்கு

1620-இல் மிளகு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய டச்சு, போர்த்துக்கீசியருடன் வணிகக் கூட்டணி அமைத்தார் டென்மார்க் மன்னர் கிறிஸ்டியன் போக். அப்போது தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்காலம். தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கருடன் டேனிஷ் கம்பெனி ஒப்பந்தம் செய்துகொண்டது. 1621-ஆம் ஆண்டு தரங்கம்பாடி கடற்கரையை டேனிஷ் கம்பெனி வாடகைக்கு எடுத்துக்கொண்ட அந்த ஒப்பந்தம், ஒரு சுவாரசியமான ஆவணம். ஒலை வடிவத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தாளில் கடிதம் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. மன்னர் ரகுநாத நாயக்கர் தெலுங்கில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ் ஆவணம்

கோபன்ஹேகனின் அரசு ஆவணக் காப்பகத்தில் இன்னும் பராமரிக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாய்ந்த அந்தக் கடிதத்தில் உள்ள வாசகம் இது:

‘மாட்சிமை தாங்கிய ஸ்ரீமத் ரகுநாத நாயக்கராகிய நாம் ரௌத்திர வருடம் சித்திரை மாதம் 22-ம் நாள் டென்மார்க் மன்னரின் தூதருக்கு இக்கடிதத்தை அனுப்புகிறோம். நலம்! மன்னர் பிரானின் நலத்தைக் கோருகிறோம். கேப்டன் ரோலண்ட் கிரேப், ஹாலன் சேனாதிபதி அவ்விடம் பற்றிக்கொண்டு வந்த செய்தி அறிந்து மெத்த மகிழ்ச்சி. எமக்கும் தங்களுக்கும் இடையே எவ்விதப் பேதமும் இல்லையாகையாலும், நாம் ஒன்றே எனக் கொள்வதாலும், ஹாலன் சேனாதிபதி, ரோல்ண்ட கிரேப் ஆகியோர் பல்லக்குகளில் பவனி வரவும் அந்நாட்டவர் இங்கே வந்து குடியேறவும் நமது அனுமதி உண்டு.

தரங்கம்பாடி என்ற பெயரில் இங்கே ஒரு துறைமுகம் அமைக்கும்படியும், அந்நாட்டில் மிளகு உற்பத்தி இல்லையாகையால் இங்கிருந்து ஏற்றுமதி செய்யவும் உத்தரவிடுகிறோம். ரோலண்ட் கிரேப்புக்கு போர்த்துக்கீசியர் இழைத்த தீங்கு குறித்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் பன்னிரண்டு பொன் அபராதமும் விதித்து மேற் கொண்டு தங்களது கப்பல்களுடன் குறிக்கிடாத படிக்கும் உத்தரவிட்டுள்ளோம்.'

இந்தத் தங்கக் கடித ஒப்பந்தம் தொல்லியல் அறிஞர் முனைவர் ரா.நாக சாமியால் 1978-ம் ஆண்டு கோபன் ஹேகனின் அரசு ஆவணக் காப்பகத்தில் கண்டறியப் பட்டு, வெளியுல கத்துக்குத் தெரியவந்தது. 1620-ல் போர்த்துக்கீசிய மொழியில் டென்மார்க் மன்னரும் ரகுநாத நாயக்கரும் செய்துகொண்ட முறையான வணிக ஒப்பந்தத்தின் பிரதி இன்னமும் கோபன் ஹேகனின் அரசு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப் பட்டுப் பராமரிக்கப்படுகிறது!

கொழித்த லாபம்

அதன்பிறகு தரங்கம்பாடியில் கோட்டை கட்டும் பணிகள் தொடங்கின. அட்மிரல் ஒகஜே என்பவர் கோட்டையின் படத்தை வரைந்து பல கட்ட ஆய்வுகளுக்குப் பின், கோட்டையைக் கட்டினார். இப்போது தரங்கம்பாடி கோட்டை இருக்கும் கடற்கரைப் பகுதியில், அந்தக் காலத்தில் சில மைல் தூரம் கடல் நோக்கி உள்வாங்கி இருந்துள்ளது.
இந்தியக் கடல் பரப்பில் அலைந்து கொண்டிருந்த டேனிஷ் கப்பல்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் முகாமிடத் தொடங்கின. டேனிஷ் வியாபாரிகள் தரங்கம் பாடியில் கோட்டையைக் கட்டி, வணிகத்தைக் கவனித்த படி சொகுசு வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்!

மிளகு, பருத்தி, பட்டு போன்ற பொருட்களின் ஏற்றுமதி வணிகம் சூடுபிடிக்கத் தொடங்கியது. டென்மார்க்கின் உணவு, மருத்துவப் பயன்பாட்டில் மிளகின் தேவை மிகுதியாக இருந்தது. ஆனால், அங்கு மிளகு உற்பத்தி இல்லை. இதிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகைக் கொள்ளை விலைக்கு அங்கே விற்று, கொழுத்த லாபம் ஈட்டத் தொடங்கினார்கள் டேனிஷ் வியாபாரிகள்.

வாங்கிய ஆங்கிலேயர்கள்

டேனிஷ் கோட்டை அதன் பிறகு பலமுறை சீரமைக்கப்பட்டுள்ளது. அதன் வடிவம் இரண்டு பெரிய கட்டுமானங்களைக் கொண்டது. ஒவ்வொரு மூலையிலும் பெரிய கொத்தளங்களைக் கொண்ட சதுர வடிவ பிரம்மாண்டமான சுற்றுச்சுவர். இதன் உட்புறத்தில் உள்ள மூன்று சுவர்களை இணைத்து ஒரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. இது பாசறை, கிடங்கு, சமையலறை, சிறைச்சாலை ஆகிய பகுதிகளைக் கொண்டது. கோட்டையைச் சுற்றி அகழியும் அதைக் கடந்து செல்லப் பலகைப் பாலமும் இருந்துள்ளன.

கிழக்குத் திசையில் கடலும், தெற்கே ஆறும் அரணாக அமைந்திருந்த இந்த டேனிஷ் கோட்டையைக் காலம் மேலும் பல மாற்றங்களுக்கு உட்படுத்தியது. இந்தியாவில் அதன் பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் கிழக்கிந்திய கம்பெனியினர், 1845இல் இந்த டேனிஷ் காலனியை விலைகொடுத்து வாங்கினார்கள்.

தரங்கம்பாடி கோட்டையில் உள்ள டேனிஷ் அருங்காட்சியகத்தில் அந்தக் காலகட்டத்தில் பயன் படுத்தப்பட்ட பல அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் - காரைக்கால் சாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தரங்கம்பாடி கோட்டையைப் பார்க்கும்போதும் அதன் வரலாறும் வியப்பைத் தரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x