Published : 25 Jul 2015 12:27 PM
Last Updated : 25 Jul 2015 12:27 PM

பவர் பத்திரம் ரத்து செய்யாமல் சொத்தைக் கிரயம் செய்ய முடியுமா?

நில உரிமையாளர் ஆனந்த் என்பவர் 1996-ம் ஆண்டு குமார் என்பவருக்கு நிலம் விற்பனைசெய்ய பவர் பத்திரம் எழுதிக் கொடுத் துள்ளார் (பவர் ஏஜெண்டாக). பிறகு நில உரிமையாளரே (ஆனந்த்) தனது கவனக்குறைவால் பவர் பத்திரம் இரத்துசெய்யப்படாமலேயே 2000-ம் ஆண்டு எனக்கு (இராமக்கவுண்டர்) அதே நிலத்தைக் கிரயம்செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் பவர் ஏஜெண்டான குமார் என்பவர் 1996-ம் ஆண்டு செய்த பவர் பத்திரம் மூலமாக 2008-ம் ஆண்டு தனது மனைவி மீது கிரயம் செய்துகொண்டு, தற்போது அந்த நிலம் எங்களுக்கு (குமார்) உரிமையானது என்கிறார். (இன்றுவரை நில உரிமையாளர் ஆனந்த் மீதுதான் பட்டா உள்ளது) தற்போது இந்த நிலம் சட்டப்படி யாருக்கு உரிமையானது?

- ஆனந்த குமார்

நில உரிமையாளர் ஆனந்த் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய்வதற்காக குமார் என்பவரைத் தனது முகவராக நியமித்து அதிகாரப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்திருந்தாலும், தனது முகவர் மூலமாக இல்லாமல் தானே நேரில் சென்று அந்தச் சொத்தை விற்பனை செய்யவும் விற்பனைப் பத்திரப் பதிவுசெய்யவும் அவருக்குச் சட்டப்படி உரிமை உள்ளது. நில உரிமையாளர் 2000-ம் ஆண்டு விற்பனைப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்து கொடுத்து, மேற்படி சொத்தை உங்களுக்கு விற்பனை செய்துள்ள நிலையில் அதை நீங்கள் அனுபவித்து வரும் நிலையில், நில உரிமையாளரின் முகவரான ஆனந்திற்கு மேற்படி சொத்தினை மீண்டும் வேறு யாருக்கும் விற்பனை செய்ய சட்டப்படி அதிகாரம் இல்லை. ஆகையால் அவர் நில உரிமையாளரின் முகவர் என்ற நிலையில் தனது மனைவி பெயருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனைப் பத்திரம் சட்டப்படி செல்லாது. அந்த நிலம் சட்டப்படி உங்களுக்கே உரிமையானது.

எனது தந்தை வழித் தாத்தா தான் சுயமாகச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டை அவருடைய தகப்பனார் பெயரில் (எனது கொள்ளுத் தாத்தா) எழுதி வைத்துள்ளார். இப்போது இருவரும் உயிருடன் இல்லை. அந்தச் சொத்தில் எனக்கும் என் அப்பாவுக்கும் உரிமை உள்ளதா? எனது தாத்தாவுக்கு இரண்டு மகன்கள் ஒரு பெண்.

- உதயா

உங்கள் கொள்ளு தாத்தா அந்த வீட்டினைப் பொறுத்து எந்த ஒரு ஆவணமும் (உயில்) எழுதி வைக்காமல் காலமாகியிருந்தால், அந்த வீட்டில் உங்கள் தாத்தாவின் மற்ற வாரிசுகளோடு சேர்த்து உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் உரிமை உள்ளது.

என்னுடைய தந்தை அவரது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு வீட்டைக் கட்டினார். கடந்த 1995-ம் ஆண்டு அவர் மரணமடைந்துவிட்டார். நான் அவருடைய ஒரே மகள். இப்போது அந்த வீட்டில்தான் வசிக்கிறேன். எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். இப்போது இந்த வீட்டை நான் என் மகன், மகள் பெயரில் எழுதிவைக்க முடியுமா?

- கவிதா

உங்கள் தாயார் தற்போது உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற தகவலை நீங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தாயார் உயிருடன் இல்லாத நிலையில் உங்கள் தந்தை அந்த வீட்டைப் பொறுத்து எந்த ஒரு ஆவணமும் (உயில்) எழுதி வைக்காமல் காலமாகியிருந்தால், அந்த வீட்டில் உங்களோடு உங்கள் மகன் மற்றும் மகளுக்கும் பங்கு உள்ளது. உங்களுக்கு உரிமையான 1/3 (மூன்றில் ஒரு பங்கு) பிரிவுபடாத பாகத்தைப் பொறுத்த வரையில் மட்டும் நீங்கள் உங்கள் மகன் மற்றும் மகளுக்குச் சாதகமாக விடுதலைப் பத்திரமோ அல்லது செட்டில்மெண்ட் பத்திரமோ எழுதிப் பதிவு செய்துகொடுக்கலாம்.

எனது தந்தையும் அவரது சகோதரர்களும் மறைந்த எங்கள் தாத்தா பாட்டியின் பெயரில் உள்ள நிலத்தை இன்னமும் பிரிக்காமல் அனுபவித்து வருகிறார்கள். அந்த நிலத்தின் மூலம் வரும் வருவாயில் எனக்கும் எனது சகோதரனுக்கும் எந்தப் பங்கும் தராமல் முழுவதும் எனது தந்தையின் சகோதரர்கள், அவர்களது பிள்ளைகளுக்கே செலவு செய்கிறார்கள். வருடத்திற்கு அவர்கள் கல்வி செலவிற்கு மட்டும் 20 லட்சம் செலவிடுகிறார்கள் ஆனால் எங்களுக்கு 20 ஆயிரம் கூட தர மறுக்கிறார்கள் இதற்கு எங்கள் தந்தையும் உறுதுணையாக இருக்கிறார். அவர்களிடம் எங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டால் தற்போது முடியாது என்று சொல்கிறார்கள். இதனால் நானும் எனது சகோதரனும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் . அவர்களிடம் இருந்து சட்டப்படி எங்களால் சொத்தை வாங்க முடியுமா? நாங்கள் இருவரும் 25 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் சொத்தை அனுபவிக்காமல் இருக்க ஸ்டே வாங்கமுடியுமா?

- சாரதி, ஆப்பக்கூடல்

உங்கள் தாத்தா பாட்டி பெயரில் உள்ள நிலத்தில் உங்கள் தந்தை மற்றும் அவரது சகோதரர்களோடு சேர்ந்து, உங்களுக்கும் உங்கள் தந்தையின் சகோதரர்கள் பிள்ளைகளுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் உங்களுக்குச் சேரவேண்டிய பங்கினைக் கொடுத்து விடுங்கள் என்று நீங்கள் கேட்டபிறகும், தரவில்லை என்றால், நீங்கள் உங்களுக்குச் சேர வேண்டிய பாகத்தினைக் கோரி தகுந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். அவர்கள் சொத்தை அனுபவிக்காமல் இருக்கத் தடை உத்தரவு கோர உங்களுக்கு உரிமை இல்லை. ஆனால் அந்தச் சொத்திலிருந்து வரும் வருமானத்தைப் பொறுத்து உங்களுக்குச் சேரவேண்டிய பங்கினை உங்களுக்குத் தரக்கோரும் பரிகாரத்தையும் நீங்கள் தொடுக்கப்போகும் பாகப்பிரிவினை வழக்கில் கேட்கலாம்.

எனக்கு இரண்டு அண்ணன்கள். எனது தயார் எனது அண்ணன்களுக்கு மட்டும் அவர்கள் பாகங்களை தானசெட்டில்மெண்ட் செய்துவிட்டு இறந்து விட்டார். தந்தை அவருக்கு முன்னரே இறந்து விட்டார். மீதமுள்ள எனது பாகத்தை எப்படிப் பெறுவது? அண்ணன்கள் எனக்கு எந்த உதவியும் செய்ய மறுக்கின்றனர். இதற்கு என்ன வழி?

- வேல் முருகன், கடலூர்

நீங்கள் குறிப்பிட்டுள்ள மொத்த சொத்து உங்கள் தாயாரின் சுயசம்பாத்தியத்தில் அவர் தனது பெயரில் வாங்கிய சொத்தா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அந்தச் சொத்து உங்கள் தாயாரின் சுயசம்பாத்தியத்தில் அவரது பெயரில் வாங்கப்பட்ட சொத்தாக இருக்கும்பட்சத்தில், அவர் உங்களது அண்ணன்களுக்குத் தானசெட்டில்மெண்ட் எழுதிக்கொடுத்துவிட்ட சொத்தினை தவிர்த்து மீதம் இருக்கும் சொத்தில் உங்கள் அண்ணன்களுக்கும் உங்களுக்கும் தலா 1/3 (மூன்றில் ஒரு) பாகம் உரிமை உள்ளது. மேற்படி சொத்து உங்கள் தாயாருக்கு மூதாதையர் வழியில் உரிமையான சொத்தாக இருந்தால் உங்களுக்கு மொத்த சொத்திலும் 1/3 (மூன்றில் ஒரு) பாகம் உரிமையுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்குச் சட்டப்படி உரிமை உள்ள சொத்தினைக் கோரி நீங்கள் தகுந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

எனது தந்தைக்கு இரண்டு தாரம். நான் மூத்த தாரத்தின் மகன். இளைய தாரத்திற்கு ஒரு மகன் உள்ளார். எனது தாய் இறந்து விட்டதால், எனது தந்தை ஈட்டிய சொத்து களையும், தந்தை வழித் தாத்தாவின் சொத்துக்களையும் இளையதார மகனுக்குக்காக மட்டும் எழுத முடியுமா? நான் அந்தச் சொத்துகளில் உரிமை கோர முடியுமா?

- குணா, சென்னை

உங்கள் தந்தை தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கியுள்ள சொத்துக்களைப் பொறுத்து அவர் தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதிக்கொடுக்கலாம். உங்கள் தந்தை வழித் தாத்தாவின் சொத்துக்களைப் பொறுத்து உங்கள் தந்தை தனது இளைய தார மகனுக்கு மட்டும் எழுதிக்கொடுக்க முடியாது. உங்கள் தந்தை வழித் தாத்தாவின் சொத்துக்களில் உங்களுக்கும் மற்ற வாரிசுகளோடு சேர்த்து சட்டப்படி உரிமை உள்ளது. ஆகவே அந்த சொத்துக்களில் உங்கள் பாகத்தைப் பொறுத்து நீங்கள் உரிமை கோரச் சட்டத்தில் இடமுண்டு.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்குகேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார். கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002.

கேள்விகளைத் தமிழில் எழுதி அனுப்பவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x