Published : 26 Oct 2019 01:42 PM
Last Updated : 26 Oct 2019 01:42 PM

நினைத்ததுபோல் அமைந்த நிறை வீடு

A. ரேவதி

சொந்த வீட்டில் இருக்கும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அனுபவித்தல் மட்டுமே உணரமுடியும். தஞ்சாவூரில் என் மாமனார் கட்டிய வீட்டில், நாங்கள் மாடியில் வீடு கட்டித் தனியாக இருந்தோம். கீழே என் கொழுந்தனார் குடும்பம் வசித்தது. எங்களுக்கு உரிமை உள்ள வீட்டில் வசித்ததால், புதிதாக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை.

நேரம் வந்தால் எதுவும் நிற்காது என்பார்கள். திடீர் என எங்கள் ஏரியாவில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். நிலத்தடிநீர் 350 அடிக்குக் கீழே போய்விட்டது. ஏற்கெனவே இருக்குற போர்வெல் இல்லாமல், புதிதாக ஒன்று இட வேண்டி வந்தது. ஆனாலும் எவ்வளவு நாள் இந்தப் புதிய போரில் தண்ணீர் வரும் என்று சொல்ல முடியாது. நிலத்தடி நீரின் அளவோ குறைந்துகொண்டே சென்றது.

வேறு வழியே இல்லாததால், புதிதாக வேறு பகுதியில் மனை வாங்கி வீடு கட்டலாம் என முடிவெடுத்தோம். தரகர்கள் மூலமாக மனைகளைப் பார்க்கத் தொடங்கினோம். 50, 60 மனைகளாவது பார்த்திருப்போம். இடம் அமைந்தால் திசை அமையாது. திசை அமைந்தால் அந்தப் பகுதி பிடிக்காமல் போகும். இதில் இன்னும் பலவிதமான சவால்கள். இடம் வாங்கும்போது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.

மனை வாங்குவதில் சிக்கல்

ஒரு பகுதியில் சதுர அடி 1,200 ரூபாய் விற்றது. ஆனால், அங்குள்ள ஒரு மனையின் உரிமையாளர், எங்களுக்கு அந்த மனையை 900 ரூபாய்க்குத் தருகிறேன் என்றார். தனது மகளுக்குக் கல்யாணம் ஏற்பாடாகி இருப்பதால், அவசரத்துக்கு விற்க வேண்டியதாயிருக்கிறது என அவர் காரணம் சொன்னார். நாங்களும் நம்பிவிட்டோம். இதை என் தம்பியிடம் சொன்னபோது, அவன்தான் ஏதாவது சிக்கல் இருக்கக்கூடும் என எங்களை எச்சரித்தேன். பிறகுதான் அந்த மனையைக் கவனமாகப் பார்த்தோம். அந்த மனைக்கு மேலே இ.பி. ஒயர் சென்றது.

அதன் பிறகு வேறொரு பகுதியில் எல்லா விதங்களிலும் எங்களுக்கு ஏற்றதுபோல் ஒரு மனை அமைந்தது. முன் பணம் கொடுக்கும் வரை சென்றுவிட்டோம். வில்லங்கச் சான்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அதில் சட்டச் சிக்கல். இதுபோல் நெருங்கி முடியும் நேரத்தில், நாங்கள் கைவிட்ட மனைகள் ஏராளம். அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. கவலையில் தூக்கமே வராது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போயிருந்த நேரத்தில்தான் எங்களுக்கு ஏற்றது போல் ஓரு மனை தஞ்சை எல்.ஐ.சி. காலனியில் அமைந்து. பத்திரப்பதிவு நல்லபடியாக நடந்து முடிந்தது. அப்பாடா, இனிமேல் கவலையில்லை. உடனே வீடு கட்டத் தொடங்கிவிடலாம் என நினைக்கும் போது அடுத்த சவால் காத்திருந்தது. டி.டி.சி.பி. அனுமதி, கட்டுமானத் திட்ட அனுமதி வாங்குவதற்கே ஆறு மாதங்களுக்கு மேலாகியது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல் நல்ல பொறியாளர் அமைந்தார்.

கைகூடிய கனவு இல்லம்

எங்களது கனவு இல்லம் அழகாகவும், அதேசமயம் எல்லா விதங்களிலும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என விரும்பினோம். மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இது மட்டும் போதாது, வீட்டைச் சுற்றிலும் சிமெண்ட் தளம் அமைக்காமல், மண்ணாக விட்டால்தான், மண்ணுக்குள் மழைநீர் இறங்கும் என்பதால் இதிலும் கவனமாக இருந்தோம். நாங்கள் தெரிந்தவர்களிடம் மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றிச் சொல்லிப் புரியவைத்தோம். எங்கள் பொறியாளரிடமும் நீங்கள் கட்டும் வீடுகளுக்கெல்லாம் மழைநீர் சேகரிப்பு வைக்கச் சொல்லி வலியுறுத்தினோம்.

டைல், கதவு எல்லாம் பல இடங்களுக்கு அலைந்து, திரிந்து நாங்களே தேர்வுசெய்தோம். பெரும்பாலும் பல வீடுகளில் சமையலறை ரொம்பச் சின்னதாக இருக்கும். ஆனால், நாங்கள் சமையலறை பெரிதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். புதுமனை விழாவுக்கு வந்தவர்கள், சமையலறையைப் பெரிதாகப் பாராட்டினார்கள். பொதுக் கழிவறையும் குளியலறையும் தனித் தனியாக இருப்பதுதான் ஆரோக்கியம் என முடிவெடுத்தோம். நாங்கள் நினைத்ததுபோல் ஒரு வருடத்தில் நி்றைவான வீட்டைக் கட்டிக் குடி புகுந்தோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x