Published : 04 Jul 2015 12:12 PM
Last Updated : 04 Jul 2015 12:12 PM

வீட்டுக் கடனை அடைப்பது எப்படி?

கடந்த ஐந்து, பத்து ஆண்டுகளில்தான் வீடு வாங்குவதற்கான கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் (2000-ம் ஆண்டில் எல்லாம் 13 சதவீதமாக இருந்திருக்கிறது) தற்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதிலும் பெண்களுக்கு இன்னமும் குறைந்த வட்டி வீதத்திலேயே வீட்டுக் கடன் தற்போது கிடைக்கிறது.

வாடகைக்கு அடிக்கடி வீடுகளை மாற்றுவதில் இருக்கும் சிரமங்கள், வீட்டின் உரிமையாளர்கள் வாடகை இருப்பவர்களுக்குத் தரும் நெருக்கடிகள் போன்ற காரணங்களால் தற்போது சொந்தமாக ஒரு படுக்கை அறையுடன் கூடிய அபார்ட்மென்ட் வீடாக இருந்தாலும் பரவாயில்லை என்னும் முடிவோடு, வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் பல ஆண்டுகளாகக் காட்டிவந்த கெடுபிடிகள் பெரும் அளவுக்குத் தற்போது தளர்த்தப்பட்டு, தகுந்த ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் பத்து நாட்களுக்குள் வீட்டுக் கடனை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் தனியார் வங்கிகள்கூட இன்றைக்குப் பல உள்ளன.

ஆனால் வீட்டைக் கட்டிப் பார் என்னும் பழமொழியை இன்றைக்கு `வீட்டுக் கடனைக் கட்டிப்பார்’ என்று மாற்றிச் சொல்லலாம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறது.

வங்கிகள், ஒருவரின் மாத வருமானத்தில் 30-திலிருந்து 40 சதவீதம் அளவுக்கு குடும்பச் செலவுகளைச் செய்வதற்கு முடியும் என்னும் உத்தரவாதம் இருந்தால்தான், அவருக்கு வங்கிகள் வீட்டுக் கடனை அளிக்கின்றன. ஏனென்றால், குடும்பச் செலவுகளுக்குப் போதாமல் அவரால் வங்கிக் கடனைக் கட்ட முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். அதனால்தான் அவரின் கடன் திரும்பச் செலுத்தும் தகுதியையும் வங்கிகள் பார்க்கின்றன.

# இதை வங்கிகளில் வீ்ட்டுக் கடன் பெறுவோர் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவரின் வீட்டுக் கடனுக்காக மாதம்தோறும் செலுத்தும் தவணை அவரின் வருமானத்தில் பாதி அளவுக்கு இருக்கும் என வைத்துக்கொண்டால், மீதி இருக்கும் வருமானத்தில் அந்த நபர், சாமர்த்தியமாக தன்னுடைய அன்றாடச் செலவுகளையும் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், குடும்ப நிர்வாகம் என அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் புதிதாகக் கடன் வாங்கி கார் வாங்குவது, LED டிவி வாங்குவது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடக் கூடாது. சிக்கனமாக இருந்து சேமிப்பதின்மூலம்தான் வீட்டுக் கடனை குறித்த காலத்துக்கு முன்பே முடிப்பதற்கான திட்டமிடலில் இறங்க வேண்டும்.

# எப்போதுமே வீட்டுக் கடனுக்கான தவணைக் காலம் அதிகமாக இருந்தால்தான் நல்லது எனப் பொதுவான ஒரு கருத்து உண்டு. ஆனால் இன்றைக்கு அதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு நபரின் வருமானத்தைப் பொருத்து தவணைக் காலத்தை திட்டமிடுவது சிறந்தது. இன்றைய சூழலில் எவ்வளவு சீக்கிரமாக வீட்டுக்கான முழுக் கடனையும் செலுத்திவிடுகிறோமோ அதுதான் நல்லது என்னும் எண்ணம் அதிகரித்திருக்கின்றது. இந்த வகையில் வீட்டுக் கடனுக்கான தவணைக் காலம் 15 முதல் 20 ஆண்டுகள் இருப்பது நலம். அதுதான் 15 ஆண்டுகள் இருக்கிறதே மெதுவாக அடைத்துக்கொள்ளலாம் என்றில்லாமல், 15 ஆண்டுகளில் முடியும் கடனை, 10, 12 ஆண்டுகளிலேயே முடிப்பதற்கு முயல வேண்டும். இதனால் சில லட்சங்கள் மீதமாகும்.

# சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்குச் சில நேரங்களில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாக லாபம் வரும். தனியார் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊக்கத் தொகை, சிறந்த முறையில் விற்பனை செய்ததற்கான கூடுதல் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் போது, அந்தத் தொகையை வீட்டுக் கடனுக்கான அசலைச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

# மாறும் வட்டி விகிதத்துக்கேற்ப வீட்டுக் கடனுக்கான தவணையை அதிகப்படுத்திக் கொள்வது, அதிகமான வட்டியைக் கட்டுப்படுத்தும். உங்களின் வருமானத்துக்கேற்ப தவணைத் தொகையை நிர்ணயித்துக்கொள்வதால், அரசு அறிவித்திருக்கும் வரிச் சலுகையைப் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x