Published : 05 Oct 2019 12:13 PM
Last Updated : 05 Oct 2019 12:13 PM

சுவர்களில் போஸ்டர்கள் – கவனம்

ஜி.எஸ்.எஸ்.

உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது மகேந்திரசிங் தோனி, விராட் கோலி இருவரின் ஒரு பிரம்மாண்ட போஸ்டரைத் தன் அறைச் சுவரில் ஒட்டியே ஆக வேண்டுமென்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான் உறவினரின் பதின்ம வயதுப் பையன். வீட்டுச் சுவர் பாழாகிவிடுமே என்ற கவலை அவருடைய பெற்றோருக்கு. அதுவும் நியாயம்தான். ஆனால், அவனின் விருப்பமும் பரிசீலிக்கக்கூடியதுதான். அதனால் போஸ்டரும் ஒட்ட வேண்டும். சுவர் பாழாகாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

வீட்டுச் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது என்பது ஒரு கலை. தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சரியான விதத்தில் போஸ்டர்களை ஒட்டவில்லை என்றால் போஸ்டரும் விரைவில் கிழிந்து போகும், சுவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, சில அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
பல தரமான போஸ்டர்கள் சுற்றப்பட்ட நிலையில் நீண்ட குழல் வடிவ பெட்டிக்குள் வைத்து விற்கப்படுகின்றன. இந்தப் போஸ்டரை வெளியே எடுப்பதற்கு முன் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள் (இல்லை என்றால் போஸ்டரில் அழுக்கு படிந்துவிட வாய்ப்பு உண்டு). பின்னர் போஸ்டரை எடுத்து, விரித்து அதன் முனைகளின் மீது எடைகளை வைத்துச் சில மணிநேரம் அப்படியே விடுங்கள். அப்போதுதான் போஸ்டரை ஒட்டும்போது அவ்வப்போது சுருண்டு கொள்ளாமல் இருக்கும்.

போஸ்டர் ஒட்ட வேண்டிய சுவரை நன்கு சுத்தம் செய்யுங்கள். மேலிருந்து கீழாகச் சுவரை முழுமையாகத் துடையுங்கள். எங்காவது அழுக்குச் சேர்ந்திருந்தால் ஈரமான ஸ்பாஞ்சை வெள்ளை வினிகரில் தொட்டு அங்கே துடையுங்கள். அழுக்குகளை அப்படியே விட்டுவிட்டால் அந்த இடத்தில் போஸ்டர் புடைப்பாகத் தெரியும்.
சுவரைத் துடைத்த பிறகு அதை முழுவதும் உலர விடுங்கள். சுவர் முழுவதும் அடைத்துக் கொள்ளும்படியான போஸ்டர்களைச் சிலர் ஒட்டுவார்கள் – முக்கியமாக விளையாட்டு ரசிகர்களும், திரைப்பட விசிறிகளும். ஆனால், அவ்வளவு பெரியதாக இல்லாத போஸ்டர்களை ஒட்டும்போது நீங்கள் வேறொரு கோணத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நம் கண்கள் எதிர்ப்புறத்தை நேரடியாகப் பார்க்கும்போது எந்த மட்டத்தில் இருக்கிறதோ அங்குதான் போஸ்டரை ஒட்ட வேண்டும் - அதாவது ‘ஐ லெவல்’ என்பார்கள். நீக்கக் கூடிய ஓட்டுவானைத்தான் (Removable adhesive) பயன்படுத்த வேண்டும். பின்னாளில் போஸ்டரை நீக்கும்போது என்ன இருந்தாலும் ஓரளவு போஸ்டரை ஒட்டியதற்கான அடையாளம் தெரியாமல் போகாது. எனவே, சமீபத்தில்தான் சுவருக்குப் பெயிண்ட் அடித்​தீர்கள் என்றால் போஸ்டர் ஒட்டுவதைப் பற்றி ஒரு முறைக்கு இருமுறை நினைத்துப் பார்ப்பது நல்லது.

போஸ்டர் டேப் என்றே ஒன்று உண்டு. இதை Double side removable tape என்றும் கூறுவதுண்டு. இதைப் பயன்படுத்தினால் போஸ்டருக்கும் சுவருக்கும் பாதிப்பு கிட்டத்தட்ட ஏற்படுவதில்லை. ஆனால், சுவரும் சுத்தமாக இருப்பதை மீண்டும் உறுதிசெய்து கொள்ளுங்கள். மேஜிக் டேப் எனும் வகை எளிதில் பிய்க்கக்கூடியது. இதைப் பயன்படுத்தும்போது இது கண்ணுக்குத் தெரியவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

உங்களுக்குத் தெரியுமா? பற்பசைகூட போஸ்டரைச் சில நாட்களுக்கு ஒட்டிவைக்க பயன்படுத்தப்படலாம். ஆனால் அதிகப்படியாக எந்த ரசாயனமும் சேர்க்கப்படாத சாதாரணப் பசை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்குப் பிறகு போஸ்டரை நீக்கும்போது எளிதில் சுத்தம் செய்யலாம் என்பதுடன் எந்தக் கறையும் படியாது என்பதும்
கூடுதல் வசதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x