Last Updated : 04 Jul, 2015 11:38 AM

 

Published : 04 Jul 2015 11:38 AM
Last Updated : 04 Jul 2015 11:38 AM

உங்கள் வீடு உங்கள் அனுபவம்: கைகூடாத கனவு இல்லம்

எக்காரணம் கொண்டும் கடன் வாங்குவதில்லை என்றும் லஞ்சம் கொடுப்பதில்லை என்றும் முடிவுசெய்திருந்தேன். போதிய வருவாய் இன்றி வீடு கட்டக் கூடாது என்று காலம் சென்ற என் தந்தை எச்சரித்தது என் நினைவுக்கு வந்தது. நான் தனியார் நிறுவனத்தில் பருவகால ஊழியராகப் பணியாற்றினேன். அத்துடன் எனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலமும் உள்ளது. எனக்குப் பாகப்பிரிவினை மூலம் பன்னிரெண்டரை சென்ட்டில் 2 செண்டுக்குக் குறைவான 100 வயதுள்ள மண்ணால் ஆன வீடு கிடைத்தது. நாட்டு ஓடால் வேயப்பட்ட வீடு அது.

அங்குக் குடியிருப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த வீட்டின் அருகில் எலிப் புதர்கள் இருந்தன. அவற்றை விரும்பி உண்ணப் பாம்புகளும் படையெடுத்தன. இந்தச் சூழ்நிலையில் எனக்கு அங்கு இருக்கவே பயமாகத்தான் இருந்தது. வேறு ஒரு வீட்டுக்குப் போய்விடலாம் என யோசனை வரும். ஆனால் அந்த மாதிரியான சமயங்களில் என் தந்தையின் அறிவுரை என் மனத்தில் நினைவுக்கு வரும். என் யோசனையைத் தள்ளிப் போட்டுவிடுவேன்.

எனக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவர்களைப் படிக்க வைத்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே முக்கியமாக இருந்தது. இந்நிலையில் எனது பழைய வீட்டை இடித்துப் புதிய வீடு கட்டுவதுபோல் அடிக்கடி கனவு வந்து தொந்தரவு செய்தது. கனவுதானே காண முடியும். இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்றேன். அதில் உள்ள தொகையைக் கொண்டு அவ்வப்போது பழைய வீட்டுப் பராமரிப்புக்கும் கழிப்பறையும் குளியல் அறையும் கட்டினேன். மீதித் தொகையை டெபாசிட் செய்தும் தனியாருக்குக் கடன் கொடுத்தும் காலத்தைப் போக்கினேன்.

இந்நிலையில் எனக்குச் சொந்தமான 0.27 சென்ட் நிலம் குடியிருப்பு மனைக்காக விலைக்குக் கேட்டனர். சுமார் 18 லட்சமும் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள 3 லட்சமும் ஆக 21 லட்சத்தில் 31 அடி அகலமும் 58 அடி நீளமும் கொண்ட வீடு கட்ட முயன்றேன். பழைய வீட்டை இடித்துச் சுத்தம் செய்தேன். போர்வெல் அமைத்தேன். கட்டிடத்திற்கு வேண்டிய செங்கல், மணல், ஜல்லி, கம்பி, சிமெண்டு ஆகியவற்றுக்குப் பணம் கொடுத்து சேமிப்பு வைத்தேன். கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்தேன்.

தனி பட்டா வாங்க விண்ணப்பித்தேன். பின்னர் முறையாகக் கட்டிட மேஸ்திரியிடம் ஒப்பந்தம் செய்துகொண்டேன். பின்னர் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்து உறவினர்களுக்குத் தகவல் சொன்னேன். நான் நினைப்பது எப்போதும் நடக்காது என்ற முறையில் அப்பொழுது என் மருமகள் கருவுற்றிருந்தாள். உறவினர்கள், ஜோதிடர்கள், பெரியோர்கள் இப்போது வீடு கட்ட வேண்டாம். குழந்தை பிறந்தவுடன் வீடு கட்டலாம் என்றார்கள். எனவே ஓராண்டு தள்ளிப் போட வேண்டி வந்தது. பின்னர் என் மருமகள் குழந்தை பெற்றாள். புண்ணியாதானம் ஆகும் வரை பொறுத்து பின்பு கட்டிடப் பணியில் மும்முரம் காட்டினேன்.

மேஸ்திரிக்குப் பணம் அவ்வப்போது பட்டுவாடா செய்தேன். வங்கியில் உள்ள இருப்பு குறைந்து இல்லாமல் ஆனது. ஏற்கெனவே வங்கியில் டெபாசிட்டில் உள்ள இன்சூரன்ஸ் மற்றும் அஞ்சல் சேமிப்பு கைகொடுக்க முடியாத நிலையில் உள்ளது. முதிர்வடைய 2 ஆண்டுகள் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது?

வீட்டில் இருந்த நகைகளை ஈடு வைத்துப் பணம் பெற்றுச் சரி செய்தேன். முன்னர் கூறியபடி விவசாய வருமானம் வரும் என்று நினைத்தேன். எனக்குப் பருவநிலைக் குறைபாட்டால் வருமானம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் விவசாயம் இப்படித்தான் இருக்கும். அதற்கு நகையை விற்றே கட்டி இருக்கலாமே என்று தோன்றியது. வீட்டைப் புதுப்பிப்பதோடு நிறுத்திக்கொண்டேன்.

இப்போது என் மனைவியும் உறவினரளும் நண்பர்களும் மேலே வீடு கட்டுங்கள் என்கிறார்கள். கடன் வாங்கிக் கட்டி, கடனை அடைத்து விடலாம் என்கிறார்கள். இப்போது என் பேத்தி படிக்க வேண்டும். தொடர்ந்து படிப்பைத் தொடர வேண்டுமானால் வேறு எந்த நோக்கமும் இருக்கக் கூடாது. அடிக்கடி வரும் அந்தக் கனவு கூடாத ஒன்றாகத்தான் இப்போது இருக்கிறது.

வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x