Published : 28 Sep 2019 12:13 PM
Last Updated : 28 Sep 2019 12:13 PM

உங்கள் கட்டுநரை அறிந்துகொள்ளுங்கள்

கனி

நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநர் சரியானவர்தானா, அவரால் நாம் எதிர்பார்க்கும்படி வீட்டைக் கட்டித்தர முடியுமா, அவருடைய பழைய திட்டங்களையெல்லாம் சரியான நேரத்தில் முடித்திருக்கிறாரா, அவர் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துகிறாரா என்பன போன்றவை கட்டுநரிடம் நாம் கேட்கும் வழக்கமான கேள்விகள். கட்டுநரிடம் கேட்க வேண்டிய சரியான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்கள் அவரிடம் இருந்தால், அதுவே வீடு வாங்கும் கனவில் பாதி நிறைவேறிய மாதிரிதான். திட்டத்தை இறுதிசெய்வதற்குமுன், கட்டுநரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்…

கட்டுநர் பின்னணி

கட்டுநர்கள் பற்றிய அதிகாரபூர்வ தகவல்களெல்லாம் ‘ரெரா’ இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த இணையதளத்தில் உங்கள் கட்டுநர் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்பதை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். அவரிடம் அவர் பணியாற்றிய பழைய திட்டங்கள் பற்றிக் கேட்பதும் அவசியம். அவர் முடித்த கட்டுமானத் திட்டங்களை நேரடியாகச் சென்று பார்ப்பது முக்கியம். உங்கள் கட்டுநர் சரியான நேரத்தில் திட்டத்தை முடித்து கொடுத்தாரா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

* எத்தனை ஆண்டுகளாகக் கட்டுநர் பணியில் இருக்கிறீர்கள்?
* வீட்டுக் கடன் பெறுவதில் உதவ முடியுமா?
* ஏற்கெனவே நீங்கள் கட்டிமுடித்திருக்கும் திட்டங்களைப் பார்வையிட முடியுமா?
தேர்ந்தெடுக்கும் இடம்
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தைப் பற்றிக் கட்டுநரிடம் கேட்க வேண்டியவை.
* இந்த இடம் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதா?
* இந்த இடத்தை மேம்படுத்துவதற்கு உள்கட்டமைப்புத் திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறதா?
* இந்த இடத்தில் இடம் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிக்குமா?

ஆவணங்கள்

கட்டுநரிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் இது.
* பட்டா
* வில்லங்கச் சான்றிதழ்
* சொத்து வரி ரசீதுகள்
* உள்ளூர் நகராட்சி ஒப்புதல்கள்
* ரெரா சான்றிதழ்
* தொடக்கச் சான்றிதழ்
* கட்டிட ஒப்புதல் திட்டம்
* எப்போது முடிக்கப்படும்?

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, சரியான நேரத்தில் திட்டத்தை முடித்துக்கொடுத்தாக வேண்டும் என்ற நடைமுறையைக் கட்டுநர்கள் பின்பற்ற வேண்டும். இருந்தாலும், திட்டத்தை எப்போது முடித்துக்கொடுப்பீர்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். எதிர்பாராதவிதமாகத் திட்டத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அது எப்படிக் கையாளப்படும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

திட்டத்தைப் பற்றிய கேள்விகள்

* கட்டுமானத் திட்டத்தில் எத்தனை நுழைவாயில்கள் இருக்கின்றன?
* எங்கே அவை அமைக்கப்படவிருக்கின்றன?
* திட்டத்தில் எத்தனை குடியிருப்புகள் இருக்கின்றன? அத்தனை குடியிருப்புகளுக்கும் வாகனம் நிறுத்தும் இடவசதி இருக்கிறதா?
* வாகனம் நிறுத்துமிடம் கூரையுடன் அமைக்கப்படுமா?
*ஒரு குடியிருப்புக்கு எத்தனை வாகன நிறுத்துமிடும் ஒதுக்கப்படும்?
* விருந்தாளிகளுக்கு வாகன நிறுத்துமிடம் தனியாக இருக்குமா?
*சரியான வடிகால் அமைப்புத் திட்டம் இருக்கிறதா?
* மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்கிறதா?
* அடிக்கடி வடிகால் அடைப்பு ஏற்படுமா?
* இந்தத் திட்டம் அமைக்கப்படும் ஒட்டுமொத்த அளவு என்ன?
*அதில் எவ்வளவு இடம் திறந்தவெளி அல்லது பூங்காவுக்கு ஒதுக்கப்படும்?
* இந்தத் திட்டத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?
* நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், யோகா ஸ்டுடியோ போன்ற வசதிகள் இருக்கின்றவா?
* இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பேசுவதற்குச் சரியான நபர் யார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x