Published : 21 Sep 2019 11:52 AM
Last Updated : 21 Sep 2019 11:52 AM
ஏழுமலை
நிலம் தொடர்பான முதல் புள்ளி விவரம், ராஜராஜ சோழன் காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளது. சரியான புள்ளி விவரங்கள் தயாரிப்பதற்காக ஆங்கிலயே அரசால் நில அளவை ஆவணப்படுத்துதல் தொடங்கப்பட்டது. சங்கிலியாலும் கோணக் கருவிகளாலும் நிலம் அளந்து வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன.
1867-ம் ஆண்டு பைமாஸ் சர்வே செய்து நிலங்களுக்கு எண்கள் மட்டும் வழங்கப்பட்டன. அரசுக்கும் மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதற்காகவே நிலம் பயன்படுத்தப்பட்டு வரும் அனுபவ எல்லைகளின் படி நில அளவை செய்து தனியார் நிலங்கள், அரசு நிலங்கள், கோயில் நிலங்கள் என மூன்று வகைப்படுத்தியதே மக்களையும் அரசாங்கத்தையும் இணைத்த முதல் நிகழ்வு.
இதுதான் முதல் நில உரிமைச் சான்று அல்லது சொத்துரிமைச் சான்று என வழங்கப்பட்ட அனுபவ நிலப்பட்டா ஆகும். 1912-ம் ஆண்டு நில அளவை வரைபடங்களும் நில உடைமையாளர்களின் விவரங்கள் அடங்கிய ஆர்.எஸ்.ஆர். (R.S.R. அ-பதிவேடு) ஆகும். இந்த ஆவணங்களைத் தயாரித்த பிறகு விதிக்கப்பட்ட நில வரியே அரசுக்கு கிடைத்த முக்கிய வருவாயாக இருந்தது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்று, கிராம கர்ணம் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்பட்டன. அரசுக்கு நில வரி முக்கியமான வருமானமாக இருந்ததால் விளையும் வேளாண் பொருட்கள், நீர் ஆதாரம், சாகுபடிப் பயிர்கள், வரி விகிதம் போன்ற விவரங்கள் அடங்கிய ‘அடங்கல்’ பதிவேடு, வருடா வருடம் (பசலி தோறும்) கிராமக் கர்ணம், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோரால் நிலம் ஆய்வுசெய்யப்பட்டுப் பதிவுசெய்யப்படுகிறது.
இந்த நில அளவை ஆவணங்களான வரைபடம், சிட்டா பதிவேடு, அடங்கல் பதிவேடு ஆகியவை தயாரிக்கப்பட்ட பிறகே பத்திரப்பதிவுத் துறை என்ற புதிய துறை உருவானது. நிலங்கள் பரிமாற்றம் - அதாவது பாக சாசனம், உயில் சாசனம் போன்ற ஆவணங்கள் வழியாக மக்களையும் அரசாங்கத்தையும் இந்தப் புதிய துறை இணைத்தது. சர்வே எண்கள், பரப்பளவு, பட்டா எண் ஆகிய நில ஆவணங்களில் பதிவாகி உள்ளதை அடிப்படையாக வைத்துத்தான் சொத்து மதிப்பீடு நிர்ணயித்து முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் ஓர் ஆதாரம்தான் ‘பத்திரம்’ எனலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்,
ஓய்வுபெற்ற நில அளவையர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT