Published : 14 Sep 2019 11:40 AM
Last Updated : 14 Sep 2019 11:40 AM
- முகேஷ்
வீடு கட்டும்போது முதலில் தொடங்கும் பணி அஸ்திவாரம் அமைப்பதுதான். அஸ்திவாரப் பணியின் தரத்தைப் பொறுத்து தான் வீட்டு உருவாக்கத்தின் தரமும் அமையும். பலமான அஸ்திவாரம் அமையும்போது பல ஆண்டுகளுக்கு வீடும் தரமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதனால்தான் அஸ்திவாரம் இடும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.
அஸ்திவாரத்துக்கு முன்பு கருப்பட்டி, சுண்ணாம்பு போன்றவற்றைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அஸ்திவாரத்தைப் பொறுத்த அளவில் பேரமளவில் தரமான இரும்புக் கம்பியுடன் கான்கிரீட் கலந்தே அது அமைக்கப்படுகிறது. அஸ்திவாரத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்கள் இரும்புக்கம்பி, கான்கிரீட் ஆகியவை. இவற்றை ஒன்றுகூட்டி வலுவேற்றப்பட்ட கான்கிரீட் உருவாக்கப்படுகிறது. ஆர்சிசி எனப்படும் இந்த வலுவேறிய கான்கிரீட் மீதுதான் நமது வீடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
வலுவேறிய கான்கிரீட்டில் துருப்பிடிக்கவோ, விரிசல் ஏற்படவோ வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. கான்கிரீட் கலவையில் இரும்புக் கம்பிகள் காரத் தன்மையுடன் இருப்பதால் அதில் தண்ணீர் பட்டால்கூட எஃகு துருப்பிடிக்காமல் தடுத்துவிடுகிறது. இதையும் மீறி எப்படித் துருவேறுகிறது என்பதுதான் புதிரான விஷயம். சிமெண்டில் குளோரைடு சம்பந்தப்பட்ட உப்புச் சத்து இருந்தால் அது எஃகைச் சுற்றி உருவாகும் பாதுகாப்பு உறையைச் சிதைத்துவிடும். அதேபோல் காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவும் பிற நச்சு வாயுக்களும் இந்தப் பாதுகாப்பு உறையை அழிப்பதில் தீவிரமாகச் செயல்படுகின்றன.
இந்தக் கரியமில வாயு கான்கிரீட்டில் புகும்போது கார்பானிக் அமிலமாக மாறி பாதுகாப்பு உறையின் காரத் தன்மையை அரித்துவிடுகிறது. இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தவிர்க்காவிட்டால் கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். எஃகு கம்பிகளைச் சுற்றிப் போதுமான அளவு கான்கிரீட் கலவையைப் போட்டு அதை மூட வேண்டும். அதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
அதே போல் அஸ்திவாரத்துக்குப் பயன்படுத்தும் நீரும் நன்னீராக இருக்க வேண்டும். உப்புத் தன்மை உள்ள நீர் என்றால் கம்பிகள் துருப்பிடிக்கக் காரணமாக அமைந்துவிடும். அதே போல் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், கட்டிடத்திலிருந்து வழியும் கழிவு நீர் அஸ்திவாரத்துக்குள் புகுந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் அஸ்திவாரத்தைக் கவனத்துடன் அமைத்து, அதற்குக் கேடு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டால் வீட்டின் நிலைத் தன்மை குறித்த பெரிய கவலை ஏற்பட வாய்ப்பிருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT