Published : 14 Sep 2019 11:30 AM
Last Updated : 14 Sep 2019 11:30 AM
- கனி
வீட்டில் நமக்கே நமக்கான ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்பது புத்தகக் காதலர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய கனவு. அதுவும் பாரம்பரியமான கூரை உயர மர அலமாரி மீது புத்தகக் காதலர்களுக்குத் தீராத காதல் எப்போதும் உண்டு. தற்போதைய நவீன வீட்டு வடிவமைப்பில், நூலக வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்துவருகிறது. வீட்டின் சிறிய இடத்திலும் அழகான நூலகம் அமைக்கும் போக்கு பிரபலமாக இருக்கிறது.
எந்த அறை?
ஒரு குறிப்பிட்ட அறையை நூலகம் அமைப்பதற்காக ஒதுக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. வரவேற்பறை, நுழைவாயிலில் பயன்படுத்தாமல் இருக்கும் இடம் என எந்த வடிவமைப்புத் தடைகளுமின்றி உங்கள் நூலகத்தை அமைக்கலாம்.
உங்கள் சுவர் முழுக்கவும்கூட சுவரொட்டியால் அலங்கரிப்பதைப் போல புத்தகங்களால் அலங்கரிக்க முடியும். புத்தக அலமாரியை வரவேற்பறையைச் சுற்றிப் பொருத்தி, வரவேற்பறை முழுவதும்கூடப் புத்தகங்கள் அடுக்கிவைக்கலாம். இந்தப் புத்தக அலமாரி உங்கள் வரவேற்பறைக்கு ஒரு புதுப் பரிமாணத்தைக் கொடுக்கும். உங்கள் நூலகத்தை அழகியலுடன் வடிவமைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குப் பயன்படுத்தும் வசதியுடன் வடிவமைக்க வேண்டியதும் அவசியம். உங்களிடம் இருக்கும் பழைய, அரிய, பாதுகாப்புத் தேவைப்படும் மென்மையான புத்தகங்களை அடுக்கும்போது கூடுதல் கவனம் எடுத்து அடுக்குங்கள்.
அதிகமான சூரிய வெளிச்சம்படுவது புத்தங்களுக்கு ஆபத்து. அதேபோல, பயன்படுத்தாமல் அப்படியே பரணில் இருளில் வைத்திருப்பதும் புத்தகங்களுக்கு ஆபத்துதான். அதனால், உங்கள் நூலகத்தை நேரடியான சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்காமல் அளவான வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்கும் இடத்தில் வைப்பது சரியானதாக இருக்கும்.
புத்தக அலமாரிகள்
போதுமான புத்தகங்கள் இல்லாத நூலகம் சுவாரசியமாக இருக்காது. அதனால், வீட்டில் நூலகம் அமைப்பது என்று முடிவுசெய்துவிட்டால், அதற்கான புத்தகச் சேகரிப்பைத் தொடங்கிவிடுங்கள். உங்கள் புத்தக சேகரிப்பை எப்படி அடுக்கிவைக்கப் போகிறீர்கள் என்பதும் முக்கியம். அரிய புத்தகங்களைக் கண்ணாடி அலமாரிக்குள் பாதுகாப்பாக வைப்பது சிறந்தது.
எப்படிப் புத்தகங்களை அடுக்கி வைத்தால் நீங்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்குமோ அப்படி அடுக்கிவைப்பதற்குச் சற்று மெனக்கெடுவதில் தவறு எதுவுமில்லை. உங்கள் ரசனைக்கேற்ற வகையில் புத்தக அலமாரியை எந்த வடிவத்திலும் அளவிலும் தேர்ந்தெடுக்கலாம். வீட்டில் பயன்படுத்தாமல் நல்ல நிலையில் இருக்கும் அலமாரியைக்கூட உங்கள் ரசனைக்கேற்றபடி, புதிய புத்தக அலமாரியாக மாற்றிக்கொள்ளலாம்.
வண்ணம்
பாரம்பரிய நூலக வடிவமைப்பை விரும்புபவராக இருந்தால், மரப் புத்தக அலமாரிகளே உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இப்போது புத்தக அலமாரிகளை வண்ணமயமாக்கும் போக்கு நவீன வடிவமைப்பில் பிரபலமான போக்காக இருக்கிறது. வண்ணங்களை விரும்புபவராக இருந்தால், உங்கள் அறையின் வண்ணத்துடன் பொருந்தும் வண்ணத்தில் புத்தக அலமாரியை வடிவமைக்கலாம்.
அறைக்கலன்கள்
உங்கள் வீட்டின் நூலகத்தில் எந்த மாதிரியான அறைக்கலன்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக இந்த அறைக்கலன்கள் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு மேசை, நாற்காலி, மேசை விளக்கு என அனைத்து அம்சங்களுடனும் வாசிப்பதுதான் பிடித்தமாக இருக்கும்.
சிலருக்கு ஊஞ்சல் நாற்காலியில் அமர்ந்து படிப்பது பிடிக்கும். சிலருக்கு சோஃபாவில் சாய்ந்தபடி படிப்பது பிடிக்கும். உங்களுக்கு எப்படி அமர்ந்து வாசிக்கப் பிடிக்கும் என்பதை மனத்தில் கொண்டு உங்கள் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுத்தாலே போதுமானது. மற்ற பாரம்பரியமான அம்சங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. வீட்டில் இடமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மனத்தில் நூலகம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் உடனடியாக வீட்டில் நூலகத்தை அமைத்துவிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT