Last Updated : 04 Jul, 2015 05:05 PM

 

Published : 04 Jul 2015 05:05 PM
Last Updated : 04 Jul 2015 05:05 PM

வீட்டை நவீனமாக்கும் சுவரொட்டிகள்

வீட்டை அலங்கரிப்பதற்கு வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாகச் சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு உதவுகின்றன சுவரொட்டிகள்.

சுவரொட்டிகளில் இப்போது பலவகைகள் கிடைக்கின்றன. அழகு, கலைநயம், புதுமை, தனிநபர் ரசனை, பட்ஜெட் என எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, நமக்குப் பொருத்தமான சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி, உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான சுவரொட்டியைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது ஐடேக்கோர்வாலா (idecorwala) என்னும் இணையதளம். ‘தி இன்டிரியர் பீப்பிள்’ என்னும் உள்அலங்கார நிறுவனம் ‘ஐடேக்கோர்வாலா’ தளத்தை முதன்முதலில் பிரத்யேகமாகச் சுவரொட்டிகளுக்காகச் சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆன்லைன் வால்பேப்பர் ஷாப்பிங், சுவரொட்டிகளின் பயன்பாட்டை எல்லோருக்கும் சாத்தியப்படுத்துகிறது.

யாமினி

சுவரொட்டிகளில் நவீனம்

சுவரொட்டிகளால் வீட்டுக்கு நவீனத் தோற்றத்தை எளிமையாக வழங்க முடியும். அதுவும், தற்போது வீடுகளில் இந்தச் சுவரொட்டிகள் பலவகையில் பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்துடன் வீட்டில் வசிப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதிலும் இந்தச் சுவரொட்டிகள் பெரிய பங்குவகிக்கின்றன. “ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். அது பாரம்பரியம், கலை, தனி நபர் ரசனை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுடைய அந்தக் கதையை சுவரொட்டிகள் வழியாக நவீன மொழியில் சொல்வதுதான் ‘ஐடெக்கோர்வாலா’வின் நோக்கம்” என்கிறார் அதன் இயக்குநர் யாமினி.

புதுமையான வகைகள்

உங்களுடைய வீட்டின் தன்மைக்கேற்றபடி இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ‘வால் பேப்பர்’(Wall paper), ‘வால் மியூரல்’(Wall Mural), ‘வால் டாட்டூ’ (Wall Tattoo) என மூன்று வகையாக இதைப் பிரித்திருக்கிறது ‘ஐடேக்கோர்வாலா’ இணையதளம். இதில் ரசனை, பட்ஜெட், அறையைப் பொருத்து இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வால் பேப்பர் என்னும் சுவரொட்டிகளிலேயே பல வகைகள் இருக்கின்றன. “ஃபேப்ரிக், ‘வினைல்’, ‘ஃபோம்’, ‘நான்-ஓவன்’ என நான்கு முக்கியமான சுவரொட்டிகள் இருக்கின்றன. இதில் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ‘வினைல்’ வால் பேப்பர் ஏற்றது. ஏனென்றால் இந்த வகை ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைக்கும். பத்துக்குப் பத்து சதுர அடிக்கு இந்த வினைல் வால்பேப்பரைப் பயன்படுத்தினால் சுமார் 5000 ரூபாய் வரை செலவாகும். அதேமாதிரி, உங்கள் ரசனைக்கும் வீட்டின் வடிவமைப்புக்கும் ஏற்ற மாதிரி நான்-ஓவன், ஃபேப்ரிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்” என்கிறார் யாமினி.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் சாதாரண காகித சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம். இது ஓராண்டு வரை உழைக்கும். பட்ஜெட்டும் குறைவாக இருக்கும். இந்தக் காகித சுவரொட்டிகளிலும் பலவகையான டிசைன்கள் இருக்கின்றன. சர்வதேச உள் அலங்கார வடிவமைப்பாளர்களின் டிசைன்களும் ‘ஐடேக்கோர்வாலா’வில் கிடைக்கின்றன.

3டி சுவர்கள்

3டி வடிவமைப்பில் வீட்டுச் சுவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் வீட்டுச் சுவரை வடிவமைக்க விரும்புபவர்களுக்கு ‘வால் மியூரல்’ வடிவமைப்புகள் உதவியாக இருக்கும். நவீனத்தை விரும்பும் இளைஞர்களுக்கும், கார்ட்டூன்களை விரும்பும் குழந்தைகளுக்கும் வால் டேட்டூக்கள் சரியான தேர்வாக இருக்கும். சுவரொட்டிகளின் தன்மையைப் பொருத்து விலை மாறுபடும்.

‘ஐடேக்கோர்வாலா’வில் டாட்டூக்களை வடிவமைக்க ஆயிரம் ரூபாயில் இருந்தும், 3டி வால் பேப்பர்களை வடிவமைக்க 3,000 ரூபாயில் இருந்தும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. “இந்த 3டி வால்பேப்பர்களில் எந்த ஓவியத்தையும், கருப்பொருளையும் உருவாக்க முடியும். உதாரணத்துக்குக் காட்டைக் கருப்பொருளாக வைத்து 3டி வால்பேப்பரையும், வீட்டின் உள்அலங்காரத்தையும் எளிமையாகச் செய்யமுடியும்” என்கிறார் இயக்குநர் யாமினி.

இன்ப அதிர்ச்சிகள்

உங்கள் குடும்பத்தினர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் வால்பேப்பர் அலங்காரம் மூலம் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வசதியையும் வழங்குகிறது இந்த இணையதளம். “கடந்த ஆண்டு, காதலர் தினத்தின் போது இந்த இன்ப அதிர்ச்சி தரும் டீல்களை அறிமுகப்படுத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு எதிர்பாராத பரிசாக இந்த வால்பேப்பரைக் கொடுக்க விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வால்பேப்பரை, அந்த நபர் இல்லாத நேரத்தில் வந்து ஒரே நாளில் வடிவமைத்துக் கொடுத்துவிடுவோம். இதனால், உங்கள் குடும்பத்தினருக்குச் சிறந்த பரிசளித்த உணர்வைப் பெற முடியும்” என்கிறார் யாமினி.

மேலும் தகவல்களுக்கு: >idecorwala.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x