Published : 31 Aug 2019 11:56 AM
Last Updated : 31 Aug 2019 11:56 AM

மவுசு கூடும் 2 படுக்கை வீடுகள்

திலக் கங்காதரன்

நடுத்தர மக்கள் தங்கள் வருமானத்துக்கு ஏற்ப வீடு வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் எனச் சமீபத்தில் வெளியான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலிவு விலை வீடுகளுக்காக நிதிநிலை அறிக்கையில் அரசும் சலுகைகளை அறிவித்திருக்கிறது. மக்களிடமும் வீடு வாங்குவதற்கான ஆர்வம் சற்றே அதிகரித்துவருதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பலரும் இரு படுக்கையறை கொண்ட வீடுகளையே வாங்க விருப்பமாக இருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தாலும் வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களில் இரு படுக்கையறை வீடுகளே அதிகமாக உருவாக்கப்பட்டுவருகின்றன.

கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட சிறிய குடும்பமாக இருந்தாலும், இரு படுக்கையறை வீட்டுக்குத்தான் அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கான வசதி, வசதியாகப் புழுங்குவதற்கான வெளி போன்ற தேவைகளுக்காக இரு படுக்கையறை வீடுகளை அவர்கள் நாடுகிறார்கள். அதேபோல் கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரும் இரு படுக்கையறை வீட்டையே விரும்புகிறார்கள்.

தங்களுடன் இருக்கும் பெற்றோருக்கான தனி அறையுடன் கூடிய வீடாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனத்துடன் இருக்கிறார்கள். மூன்று, நான்கு படுக்கையறை வீடுகள் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. மேலும் மூன்று படுக்கையறை வீட்டுத் தொகைக்கான வங்கிக் கடன், முன் பணம் எல்லாம் அதிகம் என்பதால் அவர்கள் இரு படுக்கையறை வீடுகளையே நாடுகிறார்கள்.

இப்படி இரு படுக்கையறை வீடு வாங்க விரும்புவர்களும் புறநகரிலேயே வாங்க விரும்புகிறார்கள். ஏனெனில், நகருக்குள் ஒரு படுக்கையறை வீடுகளே வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதில்லை. மேலும், நகருக்குள் போதிய அளவு காற்றோட்டம் இருப்பதில்லை. புறநகரில் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன. அதேபோல் அகலமான சாலைகள், காற்றோட்டம், அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்கின்றன. அதேநேரம் போக்குவரத்து வசதியும் இருக்கிறது. வீடும் ரூ.40 லட்சம் என்ற அளவில் கிடைக்கிறது.

பம்மல், வண்டலூர், கூடுவாஞ்சேரி. பொத்தேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், கீழ்க்கட்டளை, சேலையூர் போன்ற புறநகர் பகுதிகளில் இப்போது இரு படுக்கையறை வீடுகள் அதிகம் விற்பனையாகிவருகின்றன. மேற்குச் சென்னைப் பகுதிகளிலும் இரு படுக்கையறை வீடுகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்புதூர், ஒரகடம், பூந்தமல்லி, திருவேற்காடு போன்ற மேற்குச் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இரு படுக்கையறை வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டுவருகின்றன. இங்கும் ஏறக்குறைய அதே விலையில் வீடுகள் கிடைக்கின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு இங்கு வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன.

இரு படுக்கையறை வீடு வாங்குவதில் பல நன்மைகள் இருப்பதாக அத்துறைசார் வல்லுநர்கள் சொல்கின்றனர். பொதுவாக ஒரு படுக்கையறை வீடுகள், மூன்று படுக்கையறை வீடுகள் ஆகியவற்றைவிட இரு படுக்கையறை வீடுகளே அதிக அளவில் கட்டப்பட்டுவருகின்றன என்பது அவற்றுள் முக்கியமானது. மேலும், முதலீட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்களும் இரு படுக்கையறை வீடுகளை வாங்குவதே நல்லது என முதலீட்டு ஆலோசகர்களும் பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத் தேவையை முன்னுணர்ந்து இரு படுக்கையறை வீடுகளை வாங்குவதே நல்லது எனவும் சொல்லப்படுகிறது.

ஒரு படுக்கையறை வீட்டுக்கான வாடகை வாய்ப்பு, இரு படுக்கையறை வீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. மூன்று படுக்கையறை, நான்கு படுக்கையறை ஆகிய வீடுகளைவிட இரு படுக்கையறை வீடுகளுக்குத்தான் மவுசு அதிகம். மேலும், ஒரு படுக்கையறை வீட்டுக்கும் இரு படுக்கையறை வீட்டுக்கும் பத்திரச் செலவு அதிகம் இல்லை. அதனால் வாங்கும்போது இரு படுக்கையறை வீடுகளையே வாங்கலாம். அதுபோல் மறுவிற்பனை வாய்ப்பும் இரு படுக்கையறை வீடுகளுக்கு அதிகம். ஒரு படுக்கையறை வீடுகளை வாங்கினால் அதன் மறுவிற்பனை வாய்ப்பு இரு படுக்கையறை வீட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இவ்வளவு நன்மைகள் இருப்பதால் இரு படுக்கையறை வீடுகளின் தேவை இப்போது அதிகரித்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x