Published : 24 Aug 2019 11:06 AM
Last Updated : 24 Aug 2019 11:06 AM
அனில்
குளியலறையில் சிறு சிறு அலமாரிகள் அவசியமானவை. அதற்காக அலமாரி ஒன்றை வாங்கிக் குளியலறைக்குள் வைக்க முடியாது. அதற்காகச் சிறு சிறு சுவர் அலமாரிகளைப் பொருத்துவது வழக்கம். இதற்காக சுவரில் துளையிட்டு சோப், ஷாம்பு, பிரஷ் போன்றவற்றை வைப்பதற்கான அலமாரிகளைப் பொருத்துவோம். மேலும் ஒரு அலமாரி வைக்க வேண்டும் என்றால் மீண்டும் சுவரில் துளையிட வேண்டியிருக்கும். இதைத் தவிர்ப்பதற்காக இப்போது துளையிடாமல் சுவரில் பொருத்தக்கூடிய அலமாரிகள் கிடைக்கின்றன.
இவை பயன்பாட்டைப் பொறுத்துப் பலவகையில் கிடைக்கின்றன. சோப் வைப்பதற்கென மட்டும் தனி ஸ்டாண்ட் கிடைக்கிறது. துண்டு வைப்பதற்கெனவும் தனியாக இருக்கிறது. மேலும் இரும்பு, பிளாஸ்டி, அக்ரலிக் உள்ளிட்ட பல பொருட்களில் இவை கிடைக்கின்றன. மேலும் குளியலை, கழிவறை போன்ற இடங்களில் கைப்பிடி பயன்படுத்தப்படுவதுண்டு.
அந்தப் பயன்பாட்டுக்கும் இந்த வகையில் துளையிடாக் கைப்பிடியும் கிடைக்கிறது.
இந்த வகை அலமாரி பல வகையில் பயன்மிக்கது. உதாரணமாக சுவர் மூலை அலமாரியாக இதைப் பயன்படுத்தினால் இடம் மிச்சமாகும். ஆனால் சில குளியலறைகளில் நினைத்தவுடன் மூலை அலமாரிகளைப் பொருத்த முடியாது.
ஏனெனில் தண்ணீர் செல்லும் குழாய் சுவரில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும். அந்தமாதிரி இடங்களில் இந்த அலமாரிகள் ஏற்றவை. இதைப் பொருத்துவது மிக எளிதானது. சுவரில் பொருத்தக்கூடிய வட்ட வடிவப் பகுதியின் நடுவில் அழுத்திவிட்டு ஒரு சுற்றுச் சுற்றினால் போதுமானது.
இந்தச் சாதனம் காற்றை இறுக உறிஞ்சிக் கொள்வதன் மூலம் சுவரை இழுத்துப் பிடித்துக்கொள்ளும். தேவையான உறுதி இந்த அலமாரிக்குக் கிடைக்கும். இதைப் பொருத்துவதற்கான வழிகாட்டுக் குறிப்பு இணையத்தில் கிடைக்கிறது. இதன் விலை பயன்பாட்டைப் பொறுத்து ரூ. 200லிருந்து ரூ.1000 வரை கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT