Published : 11 Jul 2015 11:19 AM
Last Updated : 11 Jul 2015 11:19 AM
அடித்தளம் அமைக்கும் முறை பற்றி சென்ற வாரம் பார்த்தோம். மண் நிரப்பி பக்குவப்படுத்திய பிறகு, அடித்தளச் சுவர்களின் மேல் ஒரு பீம் அமைக்க வேண்டும். அடிதளத்தளத்திற்கு நல்ல பாண்டிங் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பீம் அமைக்கப்படுகிறது.
சிறு குடியிருப்புக் கட்டுமானத்தில் முன்பெல்லாம் கிரேடு பீம் மட்டுமே பெரும்பாலான இடங்களில் அமைத்தார்கள். அடித்தள மட்டத்தில் மேலும் ஒரு பீம் அமைப்பது கூடுதல் செலவாக நினைத்தனர். ஆனால் தற்காலத்தில் பக்கவாட்டு அதிர்வில் எளிதில் அடித்தளச் சுவர்கள் சரிவதாக ஆய்வுகள் தெரிவித்ததால் அடிதளக் கட்டுமானப் பிணைப்பை அதிகரிக்கும் பொருட்டு அடித்தள மட்டத்தில் ஒரு பீம் அமைக்கப்படுகிறது. இது கட்டிடத்தை மேலும் சிறப்பாக்கும். கிரேட் பீம் அளவிற்கு உயரம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தமிழ்நாடு அரசு சுனாமிக்கு பிறகு வெளியிட்ட அறிக்கையில் இந்த வகை பீம் பரிந்துரைக்கபட்டுள்ளது, கடலோர கட்டுமானங்களில் அவசியமாக செய்யவேண்டும்.
அடுத்ததாகத் தரை அமைப்பதற்கான ஆயத்தங்களைத் தொடங்க வேண்டும். பி.சி.சி. தளம் அமைக்க வேண்டும். இதற்கு 1.5:10 என்ற விகிதம் எளிதான வகையில் பெரும்பாலான தனிக் குடிருப்பு வீடுகளுக்கான கட்டுமானத்தில் செய்யப்படுகிறது. இது இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட விகிதம்தான். இறுதிக்கட்டப் பணிகளில் தானே தரை அமைப்பார்கள். இப்போது எதற்கு தளம் அமைக்க வேண்டும்? எல்லாப் பணிகளையும் முடித்த பின்னர் தரைக்கான தளம் அமைக்கலாம் என நினைக்காதீர்கள்.
கட்டிடத்தின் இந்த நிலையில் தரைகளுக்கான தளம் அமைப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. எளிதாகச் சொல்வதானால் இப்போது தளம் அமைத்தால் ஃப்ளோரின் பீனிஷிங், ரூஹ் போன்ற பணிகளை வரையறை செய்ய ஏதுவாக இருக்கும். சாரம், முட்டு, தாங்கிகள் அமைக்கும் போது உள்ளழுந்தாமல் இருக்கும்.
தொழிலாளர்கள் அடுத்த கட்டப் பணியைச் செய்ய ஏதுவாக இருக்கும். சிலர் தரைகளுக்கான டி.சி.சி. தளத்தை ‘40மிமி ஜல்லிக் கற்களால் மட்டும்தான் செய்யவேண்டுமா, 20மிமி ஜல்லிக்கற்களால் செய்யக்கூடாதா?’ எனக் கேட்கப்துண்டு. அதற்கு வல்லுநர்கள் அளிக்கும் பதில், ‘செய்யலாம்’ என்பதே.
நடைமுறை ரீதியாகப் பார்த்தால் 40.மி.மி. ஜல்லிக்கற்களுடன் சிமெண்டு மணல் கலவையைக் கலப்பதைவிட, 20.மி.மி. ஜல்லிக்கற்களுடன் சிமெண்டு மணல் கலவையைக் கலப்பது நல்ல பிணைப்பாக இருந்தது. ஆக 20.மி.மி. ஜல்லிக்கற்களால் பி.சி.சி. செய்யலாம், இருப்பினும் 20.மி.மி, 40.மி.மி. இரண்டுக்கும் ஆகும் செலவுகளைக் கருத்தில் கொண்டு செய்வதே சிக்கனம். தரைக்கான பி.சி.சி. தளம் அமைக்கப்பபட்ட அடுத்த நாளே பாத்திகட்டி தண்ணீர் தேக்கி சோதித்து கொள்ள வேண்டும், பி.சி.சி. தளம் உறுதியாக முறையாகத் தண்ணீர்கட்டி curing செய்ய வேண்டும்.
கட்டுரையாளர், கட்டிடத் துறைப் பேராசிரியர்.
தொடர்புக்கு: sunbharathidasan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT