Published : 10 Aug 2019 11:53 AM
Last Updated : 10 Aug 2019 11:53 AM

கட்டுமான மணலைக் கட்டுப்படுத்தும் பொருள்

ஸ்ரீராம் வெங்கட்ராமன்

கட்டுமானத்துக்குப் பயன்படும் ஆற்று மணலுக்கு நம் மாநிலத்தில் தட்டுப்பாடு அதிகம். அதனால் வெளிநாட்டிலிருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்யும் நிலை இன்று இருக்கிறது. ஆற்று மணலுக்கு மாற்றாக ‘எம் சாண்ட்’ எனப்படும் செயற்கை மணல் பயன்பாடும் இன்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மணல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பம் இன்று பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. அப்படியான ஒன்றுதான் ஜிப்ஸம் பிளாஸ்டர்.

கட்டிடங்களின் உட்புறச் சுவர்கள், மேற்கூரைகளின் பூச்சு வேலைகளுக்கு இந்தப் புதிய மாற்றுப் பொருள் பயன்படும். இந்த வகைப் பொருளின் முக்கியமான கலப்புப் பொருளான ஜிப்ஸம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முக்கியமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஜிப்ஸம் இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய பொருள்தான். ஆனால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகை ஜிப்ஸம், இங்கு கிடைப்பவற்றைவிடக் கெட்டித்தன்மை உடையது. தமிழ்நாட்டிலும் இந்த வகை மாற்றுப் பொருளைக் கட்டுமான நிறுவனங்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதனுடன் தண்ணீரைச் சேர்த்து நேரடியாக உட்புறச் சுவர்களின் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே இது மேலை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு இப்போது பரவிவருகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் உட்புறப் பூச்சு வேலைகளில் மணல், சிமெண்ட் தேவையை நூறு சதவீதம் குறைக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோல இதைப் பயன்படுத்தும்போது உட்புறப் பூச்சில் நேர்த்தி கிடைக்கிறது. அதனால் பட்டி பார்க்கும் வேலைக்கு அவசியமில்லாமல் போகிறது. சிமெண்ட் பூச்சைக் காட்டிலும் இது சிறந்த பிடிப்புத் தன்மை கொண்டது. பூச்சு பளபளப்புடன் இருக்கும்.

அந்தக் கால முறைப்படி வீட்டுக்குள் வெள்ளை நிறப் பூச்சை விரும்புபவர்கள் இதன் மேலே வண்ணம் அடிக்கத் தேவை இல்லை. இந்த பிளாஸ்டர், பூசிய கால் மணி நேரத்தில் பிடித்துக்கொள்ளும். சிமெண்ட் பூச்சைப் போல இதைத் தண்ணீர் ஊற்றி உலர்த்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்தச் சிறப்புத் தன்மையால் பிளாஸ்டரைப் பயன்படுத்தும்போது, பூச்சு வேலைக்குக் குறைந்த அளவு நேரமே ஆகும்.

இதனால் பொருள் செலவைப் பேரளவு குறைக்க முடியும். மேலும், பூச்சு முடிந்த சில நாட்களிலேயே சுவருக்கு வண்ண பெயிண்ட்டைப் பூசிக் கொள்ளலாம். சிமெண்ட் பூச்சின் கலவையானது திரண்டு இருக்கும். அதாவது சிமெண்ட் மெல்லிய தூளாக இருந்தாலும் மணல் பருமனான பொருளாக இருக்கும். அதனால் லேசாக மேலே தட்டினாலேயே மேல் பூச்சில் விரிசல் வர வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரச்சினை பிளாஸ்டர் பூச்சில் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x