Last Updated : 03 May, 2014 05:34 PM

 

Published : 03 May 2014 05:34 PM
Last Updated : 03 May 2014 05:34 PM

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள சென்னையின் வடமேற்கு எல்லை

சென்னையின் வடமேற்கு எல்லை ரெட் ஹில்ஸ். புழல் ஏரிக்கரையில் அமைந்துள்ள இப்பகுதி, சென்னை நகரில் குடிநீருக்குப் பஞ்சம் வராத சில பகுதிகளில் ஒன்று. பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் தற்போது புதிதாகக் கட்டப்பட்டாலும், ரெட் ஹில்ஸ் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கட்டுமானத்துறை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக, பல்வேறு முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் ரெட் ஹில்ஸ் பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியுள்ளன.

சென்னையின் பிற இடங்களைக் காட்டிலும், ரெட் ஹில்ஸ் பகுதியில் நிலத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே இருக்கிறது. 1,000 முதல் 1,500 சதுர அடி பரப்பளவு உள்ள மனைகள், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்க்குள் இங்கே கிடைப் பதால், நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள் இங்கே நிலம் வாங்க ஆர்வம் காட்டுகின்றன. புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளும், சதுரடி 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்குள் கிடைப்பதால், ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கும் டீலக்ஸ் வசதிகளுடன் கூடிய 2BHK வீடுகள், 28 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. இதனால் ரெட் ஹில்ஸ் பகுதி முதலீட்டுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

சென்னையின் மையப் பகுதியில் இருந்து ரெட் ஹில்ஸ் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பயண நேர அடிப்படையிலும், ரெட் ஹில்ஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. சாலை மார்க்கமாக இப்பகுதிக்குச் சிறந்த போக்குவரத்து வசதி இருப்பதால், பிராட்வே, மவுண்ட் ரோடு, அடையாறு போன்ற பகுதிகளில் இருந்து 45 முதல் 60 நிமிடங்களில் ரெட் ஹில்ஸ் பகுதியை அடைந்து விட முடியும் என்பது சிறப்பம்சம். அண்ணா நகர், அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளைத் தாண்டி ரெட் ஹில்ஸ் அமைந்திருந்தாலும், இங்கு மனைகள் மற்றும் புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவாக இருப்பது, முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக உள்ளது.

புறநகர் ரயில் போக்குவரத்து வசதி இல்லாத போதிலும், நெடுஞ் சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது ரெட் ஹில்ஸ் பகுதியின் சாதக அம்சங்களில் ஒன்று. மதுரவாயல் - சென்னைத் துறைமுகம் இடையிலான 4 வழிச்சாலை திட்டம் முழுமையடைந்தால் ரெட் ஹில்ஸ் பகுதியின் வளர்ச்சி நிச்சயம் மேம்படும் எனக் கட்டுமானத் துறை முன்னணி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

ரெட்டேரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் ரெட் ஹில்ஸ் உள்ளதால், குண்டூர் - சென்னை நெடுஞ்சாலையில் இருந்தும் எளிதாக வந்து செல்ல முடியும். எனவே முதலீட்டு நோக்கத்துடன் நிலம் மற்றும் மனையை வாங்க நினைப் பவர்களுக்கு ரெட் ஹில்ஸ் பகுதி சிறந்த தேர்வு.

எனினும், தமிழக - ஆந்திர எல்லைக்கு அருகே இருப்பதால், காலி மனைகள் அல்லது வீடுகளை வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துவிட்டே முதலீடு செய்வது நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், காலி மனைகள் வாங்கும் பட்சத்தில், அந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு இருக்கிறதா என்பதையும் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான், நில ஆக்கிரமிப்பில் இருந்தும் முதலீட்டாளர்கள் தப்பிக்க முடியும் என ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் எச்சரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x