Published : 25 Jul 2015 11:55 AM
Last Updated : 25 Jul 2015 11:55 AM
ரியல் எஸ்டேட் தொழிலின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு இப்போது நேரடியாக நில உரிமையாளரிடம் இருந்து அல்லாமல் கட்டுநர்களின் பெயரில் பவர் ஆப் அட்டர்னி எழுதிக் கொடுத்து விற்கும் வழக்கம் வந்துள்ளது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இது பெருமளவில் வழக்கத்தில் உள்ளது.
பவர் ஆஃப் அட்டார்னி என்றால் என்ன?
சொத்து கொடுக்கல் வாங்கலில் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் ‘பவர் ஆப் அட்டர்னி’முக்கியமானது. ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை, நிர்வகிக்க தனது சார்பில் வேறு ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இம்மாதிரியான பவர் பத்திடம் எழுதிக்கொடுப்பதில் பல வகை இருக்கின்றன. நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் ஒருவருக்கு எழுதிக்கொடுக்க முடியும். இந்த அடிப்படையில்தான் இன்று இந்த பவர் பத்திரம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்று கட்டப்பட்டு விற்கப்படுகின்றன.
இந்த மாதிரி பவர் பத்திரம் மூலம் நிலம் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். விற்பனை அதிகாரம் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்துப் பார்த்த பிறகுதான் வாங்க வேண்டும். ஏனெனில் சிலர் சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம். இவர்களால் சம்பந்தப்பட்ட சொத்துக்கான பத்திரப்பதிவை எழுதிக்கொடுக்க முடியாது. அப்படி அவர் விற்பனைக்கான ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாததாக ஆகிவிடும்.
எந்த மாதிரியான பவர் பத்திரம்?
பவர் பத்திரம் மூலம் நிலத்தை வாங்குவதாக இருந்தால் அந்த பவர் பத்திரம் எத்தகையானது என்பதைப் பார்க்க வேண்டும். நிலத்தை விற்பனை செய்யும் உரிமை பவர் பத்திரம் வைத்திருக்கும் நபருக்கு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முக்கியமாக அந்த பவர் பத்திரம் செல்லத்தக்கதாக இருக்கிறதா எனவும் பார்க்க வேண்டும். ஏனெனில் நிலத்தின் உரிமையாளர் நினைத்தால் அந்த பவர் பத்திரத்தை ரத்துசெய்ய முடியும்.
செல்லாத பத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?
செல்லாத பவர் பத்திரத்தை வைத்து மோசடிகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் தெளிவாக இல்லை என்றாலும் நாம்தான் நஷ்டம் அடையக் கூடும். அதனால் இந்த விஷயத்தில் தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். பவர் பத்திரம் எழுதிக்கொடுத்த உரிமையாளரைச் சந்தித்து அந்த பவர் பத்திடம் குறித்து கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.
பவர் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிக்கொடுத்த பவர் பத்திரம் ரத்துசெய்யப்பட்டிருக்கலாம். ஒருவேளை உரிமையாளர் இறந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பவர் பத்திரம் செல்லாததாகிவிடும். உரிமையாளர் உயிரோடு இருக்கும் வரைதான் பவர் பத்திரம் செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT