Last Updated : 25 Jul, 2015 12:52 PM

 

Published : 25 Jul 2015 12:52 PM
Last Updated : 25 Jul 2015 12:52 PM

பட்ஜெட்டுக்குள் செய்யலாம் உலோக அலங்காரம்

வீட்டு அலங்காரத்தில் இப்போது உலோகங்களைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இந்த உலோக அலங்காரத்தால் உங்கள் வீட்டின் சுவர்களையும், தரைகளையும் பேச வைக்கலாம். ஓர் அறையின் பிரதானமான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பவை சுவர்கள். அத்துடன், வீட்டு அலங்காரத்தில் முக்கியமான இடத்தை யும் சுவர்களே வைத்திருக்கின்றன. அதனால் உங்கள் அறையை அற்புதமாக மாற்ற வேண்டுமானால் முதலில் அதற்கு உங்கள் சுவர்களை அற்புதமானதாக மாற்ற வேண்டும்.

உங்கள் சுவரை அழகான வண்ணத்தில் வடிவமைத்த பிறகு உங்கள் அறையின் தோற்றத்தையே அது ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். அந்தச் சுவரில் ஸ்டைலான அலங்காரத்தை மேற்கொள்வதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பட்ஜெட்டுக்குள் இந்தச் சுவர் அலங்காரத்தைச் செய்ய நினைப்பவர்கள் உலோக அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சென்னையில் ‘மெட்டல்கிராஃப்ட்’ என்னும் நிறுவனம் இந்த உலோக அலங்காரத்துக்கான பொருட்களைத் தயாரிக்கிறது.

வீட்டை அலங்கரிப்பதற்கு உலோகச் சுவர் சிற்பங்களை இப்போது பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். “விதவிதமான பூக்கள், மரங்கள், இசைக் கருவிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள், நவீன வடிவமைப்பிலான நாற்காலிகள் என எல்லாவற்றையும் உலோகத்தில் தயாரிக்க முடியும்.

வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற வகையில் பிரத்யேகமாகவும் இந்தப் பொருட்களைத் தயாரிக்கிறோம். இந்த உலோகத்தைச் சுவர் அலங்காரத்துக்கு மட்டுமல்லாமல் தரை அலங்காரம், கூரை அலங்காரம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்” என்கிறார் மெட்டல் கிராஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் கலா பந்தாரி.

‘மெட்டல் வால் ஆர்ட்’ எனப்படும் இந்த உலோகச் சுவர் அலங்காரத்துக்கான பொருட்கள் ஐந்தாயிரம் ரூபாயில் ஆரம்பித்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை கிடைக்கின்றன. “ஒவ்வொரு அறைக்கும் பொருந்தும்படி இந்த உலோக அலங்காரப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க முடியும். வால் மியூரல், ஃப்ளோர் மியூரல், அலங்காரக் கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை வரவேற்பறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், அறையைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தும் அறைப் பிரிப்பான்களிலும் உலோக அலங்காரத்தைச் செய்ய முடியும்”என்று சொல்கிறார் கலா பந்தாரி.

ஓர் அறையில் இடம்பெறும் எல்லாப் பொருட்களையும் இந்த மாதிரி அலங்கார பாணியில் வடிவமைக்கமுடியும். அறையை மட்டுமல்லாமல் தோட்டம், மாடியை வடிவமைப்பதற்கு இந்த உலோக அலங்கார உத்தியைத் தேர்ந்தெடுக்கலாம். “தோட்டத்துக்குத் தேவையான நாற்காலிகள், இருக்கைகள், ஊஞ்சல்கள் போன்றவற்றை இப்போது வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குகின்றனர். இந்தத் தோட்ட மேசை நாற்காலிகள் இருபத்தைந்து ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கின்றன” என்கிறார் கலா பந்தாரி.

வீட்டை பட்ஜெட்டுக்குள் அலங்காரம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த உலோக அலங்காரம் பெரிதும் பயன்படும். மேலும் விவரங்களுக்கு: >http://www.metalcraftindia.net/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x