Published : 10 May 2014 07:18 PM
Last Updated : 10 May 2014 07:18 PM

திருவாரூர் ரியல் எஸ்டேட் - மூன்று ஆண்டு உச்சம்

தேரோட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் திருவாரூர் சிறிய மாவட்டம்தான் . தியாகராஜ சுவாமி திருக்கோயில், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் வரிசையில் மத்தியப் பல்கலைக்கழகம் இந்த மாவட்டத்தின் புதிய அடையாளம். பெரிய சுற்றுலாத்தலங்களோ, தொழிற்சாலைகளோ இல்லாத திருவாரூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியையும் தேக்கத்தையும் தீர்மானிப்பது உள்ளூர்வாசிகளின் முதலீடு மட்டுமே.

மற்ற மாவட்டங்களில் உள்ளது போல திருவாரூர் ரியல் எஸ்டேட் சந்தை மிகச் பெரியது அல்ல. அதுவும் ‘சந்தை வழிகாட்டு மதிப்பு’ உயர்ந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சுவிட முடியாதபடி தொழில் உள்ளதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள்.

“மிகவும் சிறிய எல்லைக்குள் இருந்த ரியல் எஸ்டேட் தொழில் திருவாரூரில் பரவலாகிப் போனது அண்மைக் காலங்களில்தான். எதிர்கால முதலீடாகக் கருதி பலரும் மனைகளை வாங்க ஆரம்பித்தார்கள். அப்படி வாங்கியவர்கள் பணத் தேவை ஏற்பட்டபோது அவற்றை உடனடியாக விற்க முடியவில்லை. அப்போதுதான் ஓர் உண்மை மக்களுக்குப் புலப்பட்டது. வாங்கிய எல்லா மனைகளையும் மறுவிற்பனை செய்யும் வாய்ப்பு குறைவு.

எனவே தேவைக்கு மனை என்று விரும்பியவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள். முதலீட்டு மனை என்று முன் வந்தவர்கள் தயங்குகிறார்கள். இதுதான் காரணம்’’ என்கிறார் முகவர் ஒருவர்.

ஆனால், சிலர் இக்கருத்தை மறுக்கவும் செய்கிறார்கள். ஏனெனில் ஏற்ற இறக்கம் எல்லாத் தொழில்களும் வெகு சகஜமான விஷயம்தான். தேக்கமாக உள்ள ரியல் எஸ்டேட் தொழில் விரைவில் ஊக்கம் பெறும் எனவும் சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேல் நம்மிடம் இது குறித்துச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “1981, 1986, 1991, 2011 மற்றும் 2007-ம் ஆண்டுகளிலும் வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட்டது. ஆனால் இப்போது உயர்த்தப்பட்ட அளவுக்குக் கிடையாது. கடந்த 2010-ம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டு 2012-ல் அமலாக்கப்பட்டுள்ள தற்போதைய வழிகாட்டு மதிப்பு மிக அதிகமே. இதனாலேயே மனை வாங்குவதற்குப் பணப் பரிமாற்றம் செய்துகொண்டதில் சிலர் பவர் பத்திரம் செய்துகொண்டுள்ளார்கள். பவர் பத்திரத்தின் செலவே ரூ.11,000 ஆகி விடுகிறது.

என்றாலும் மாவட்டத்தின் பல இடங்களில் வழிகாட்டு மதிப்பு சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவுதான். மாவட்டத் தலைநகரிலும் வேறு ஒருசில ஊர்களிலும் 1.04.2012க்குப் பிறகு மேலும் மதிப்பு கூடித்தான் போயிருக்கிறது. இப்படிச் சந்தை மதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும்போது வழிகாட்டு மதிப்பு தானே குறைந்தது போல ஆகிவிடும். அதாவது பெரிய கோட்டுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கோடு வரைவதுபோல” என்கிறார்

1.04.2012 அன்று முதல் தற்போதைய அதிகரித்த வழிகாட்டு மதிப்பு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில்

ஒருசில இடங்களில் 1.4.2012க்குப் பிறகு தற்போதைய வழிகாட்டு மதிப்புக்கு மேல் மேலும் இருபது சதவீதம் வழிகாட்டு மதிப்பு சேர்க்கப்பட்ட மனைகளும் மாவட்டத்தில் உண்டு. இப்படிக், கூடுதல் மதிப்புக்கு மேல் மேலும் கூடுதல் மதிப்பு சேர்க்கப்பட்ட பின்னரும்கூட மேற்கண்ட மனைத் தலங்களின் சந்தை மதிப்பு உச்சம் தொட்ட வழிகாட்டு மதிப்பை விட அதிகமாகவே உள்ளது.

இந்த வகையில் சந்தை மதிப்பு அதிகரித்த இடங்கள் பரவலாக எல்லா சார்பதிவக எல்லையிலும் உள்ளன. என்றாலும் உச்ச விலை என்பது சந்தை மதிப்பைப் பொறுத்தமட்டில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி சார்பதிவக எல்லைக்குட்பட்ட மனைகள்.

முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பத்திரப்பதிவு குறைவு. காரணம் இங்கெல்லாம் மனை விற்பனை குறைவு என்பது தான்.

பதிவாளர் பகிர்ந்துகொண்ட மற்றொரு தகவல்,

ஏப்ரல் 2014 முதல் பத்திரப்பதிவில் அமலாக்கப்பட்டுள்ள ஒரு புதிய நடைமுறை. இதன் படி, பத்திரப்பதிவின்போது மூலப் பத்திரம், கணினி சிட்டா நகல், மற்றும் வில்லங்க சான்று ஆகியவற்றுடன் நிலத்தின் மீதான பாத்தியதையை நிலைநாட்ட வாரிசுச் சான்றும் சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுகிறது.

இந்நடைமுறை போலி நிலப்பதிவுகளைத் தடுக்கவல்லதும், பட்டா வழங்குவதை இலகுவாக்கக்கூடியதுமாகும்.

பத்திரப்பதிவு எண்ணிக்கை

ஓர் ஆண்டில் பதிவுசெய்யப்படும் நில ஆவணங்களின் எண்ணிக்கை திருவாரூரில் அதிகபட்சமாக 5030. மன்னார்குடியில் 4500. திருத்துறைப்பூண்டியில் 3000. மற்ற பதிவகங்களில் இன்னமும் குறைவு.

கட்டுமானம்

மாற்று கட்டுமானப் பொருள் பயன்பாடு மாவட்டத்தில் அவ்வளவாகப் பரவவில்லை. தொழிலாளர் தட்டுப்பாடும் கிடையாது. ஆயத்த வீடு விற்பனை என்பதும் அவ்வளவாக இல்லை. வீடு கட்டித்தரும் நல்ல நிறுவனங்கள் இருந்தபோதும் ஆயத்த வீடு விற்பனை கிராமிய மேன்மைமிக்க இம்மாவட்டத்தில் பரவலாகவில்லை. அடுக்கக வீடுகள் என்ற வார்த்தை இன்னமும் முளைக்கவே இல்லை.

ஆக வெளிமுதலீடு ஏதுமின்றி, வழிகாட்டு மதிப்பும் அதிகரித்துப்போன நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டு எழும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது தேரோடும் மாவட்டம்.

- கட்டுரையாளர், ஒய்வுபெற்ற அரசு அதிகாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x