Published : 23 May 2015 12:02 PM
Last Updated : 23 May 2015 12:02 PM
அஸ்திவாரம் என்னும் கடைக்கால் (FOUNDATION) அமைத்தல் கட்டிடத்திற்கு முதலும் முக்கியமானதுமான பணி. ஏனெனில் ஒட்டுமொத்த கட்டிடத்தின் வலுவும் இந்த அஸ்திவாரத்தில்தான் இருக்கிறது. பாரத்தையும் தாங்குவதும் அதைப் பூமிக்குச் செலுத்துவதும் கடைக்காலின் பணி. கடைக்கால் டீப்(DEEP), ஷாலோ(SHALLOW) என்ற வகைகளில் பல விதங்களிலும், பல முறைகளிலும் அமைக்கப்படுகிறது.
பெரும்பாலும் தனி வீடுகளுக்கு ஷாலோ வகைக் கடைக்கால் அமைக்கப்படுகிறது, இதில் இயற்கையான நிலப்பரப்பு மட்டத்திற்குக் (NATURAL GROUND LEVEL) கீழே நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் என மூன்று அளவுகளைக்கொண்டு குழிதோண்டப்படுகிறது. இந்தக் குழியானது எல்லா ஊர்களுக்கும், அனைத்து வகையான கட்டிடத்திற்கும் ஒரே அளவாகவோ, ஒரே மாதிரியாகவோ அமையாது. மண்ணின் தன்மை, மனையின் நீர் மட்டம்,கட்டிடத்தின் வகை, ஒட்டுமொத்த சுமை ஆகியவற்றைப் பொறுத்து கடைக்கால் குழியின் நீளம், அகலம், ஆழம்கட்டிடத்திற்கு கட்டிடம் மாறுபடும். கடைக்கால் அமைப்பதில் மூன்று மூன்று நிலைகள் உள்ளன.
முதல் பணி
குழிகள் அனைத்தும் அடிப்பரப்பில் ஒரே மட்டத்தில் அமைய வேண்டும் குழிதோண்டப்பட்டதற்கு அடுத்ததாக மணல் நிரப்பும் பணி வேண்டிய உயரத்தில் சம மட்டத்தில் அனைத்துக் குழிகளுக்கும் மணல் அழுத்தப்பட வேண்டும்.
இரண்டாம் பணி
மணல் அழுத்தப்பட்ட பிறகு பி.சி.சியை (PLAIN CEMENT CONCRETE) இட வேண்டும். பி.பி.சி. என்பது கருங்கல் ஜல்லி,மணல்,சிமெண்ட் ஆகியவற்றையின் கலவையாகும். இவற்றை வேண்டிய விகிதத்தில், அதாவது குழிகள் சம மட்டத்தில் அமையும் விதத்தில் இடவேண்டும். சிலர் பி.சி.சி. போட்ட உடன் அதன் மேல் அப்படியே தூண் பாதப் பகுதியை நிறுத்திவிடுகின்றர், இது நல்லதல்ல. பி.சி.சியைக் குறைந்தது ஒரு நாளாவது தண்ணீர் காட்டிப் பக்குவப்படுத்த (WATER CURING)வேண்டும்.
மூன்றாம் பணி
மூன்றாவதாகச் செய்ய வேண்டியது ஃபூட்டிங் (FOOTING). இது கம்பி கட்டும் முறை எனச் சொல்லலாம். அடித்தள அமைப்பு முறை எனவும் சொல்லலாம். பி.சி.சி.யின் மேற்பகுதியில் ஃபூட்டிங் அமைப்பை அனைத்துக் குழிகளுக்கும் சிமெண்ட்டால் வருவி வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தூணிண் பாதப்பகுதி இதில் படல் (MAT), தூண்(COLUMN) என்னும் இரண்டு பகுதிகளைக்கொண்டது. படலானது தூணின் கீழ் பக்கம் வெவ்வேறு தடிமன் (DIA) கொண்ட இரு கம்பிகள் சம இடைவெளியில் குறுக்கும்,நெடுக்குமாக வைத்து அமைக்க வேண்டும்.
படல் கம்பியின் அனைத்து முனைகளும் மேல் நோக்கி வளைத்து விடப்பட வேண்டும். படலின் அடிப்பகுதியில் கவர் பிளாக் வைக்க வேண்டும், படலின் மேற்பகுதியில் தூணுக்கான கம்பியை நிறுத்த வேண்டும்,பின்பு படல் பகுதி முழுமைக்கும் கான்கிரீட் இடலாம்.
கட்டுரையாளர், கட்டிடத் துறைப் பேராசிரியர்.
தொடர்புக்கு : sunbharathidasan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT