Published : 30 May 2015 12:40 PM
Last Updated : 30 May 2015 12:40 PM
வீடு கட்டுவதன் முதல் களப்பணி அளவு குறித்தல் (Marking). அனுபவமுள்ள நபர்களால் மட்டுமே இதைத் துல்லியமாக சிறப்பாகச் செய்ய முடியும்.
இது துல்லியமாக அமைய, தூண் களைச் சம பகுதிகளாகப் பிரிக்கும் நடு கோடு மார்க்கிங் செய்ய வேண்டும். இதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். ஆனால் வெளிக்கூடு மார்க்கிங் என்பது தூண்களின் வெளிப்புறங்களை வைத்து மார்க் செய்வது. இதற்குக் குறைந்த நேரமே பிடிக்கும். ஆனால் துல்லியம் அற்றது.
ஏன் தனித் தூண் கடைக்கால் (Individual Isolated Footing)?
வெளிநாடுகளில் அந்த நாட்டின் பருவ கால நிலை, சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பொறுத்து இரும்பு, மரம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தியும் கடைக்கால் அமைக்கப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் பெரும்பாலும் தனி வீடுகளுக்கு ஷாலோ வகைக் கடைக்காலில் தனித் தூண் முறையில் அமைக்கப்படுகிறது. அதற்கான காரணம் இது சுலபமாகச் செய்யக்கூடிய வழிமுறைகளைக் கொண்டது.
இதைச் செய்ய நுட்பமான அளவீடுகள் கிடையாது. சாதாரண அனுபவம் உள்ல தொழிலாளர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கென பிரத்தியேகமான பொருட்கள் தேவைப்படுவதில்லை. கான்கீரிட், இரும்புக் கம்பி இருந்தாலேயே போதுமானது. ஷாலோ வகை கடைக்காலினைத் தனித் தூண் முறையானது தட்டை (plat or padfooting), மேல்குவி(tapered footing) என்ற இரு விதங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கும் குழி தோண்டல், ஆற்று மணல் நிரப்புதல், பி.சி.சி., ஃபூட்டிங் எனப் படிப்படியான செயல் முறைகள் உள்ளன.
குழி தோண்டல்
தூண் குழிகளுக்கு இடையே உள்ள இடைவெளி மார்ர் செய்யும்போதே நமக்குத் தெரிந்துவிடும் அப்போதே குழிதோண்டல் இயந்திரமா? ஆட்கள் மூலமா? என முடிவுசெய்து கொள்ளலாம். தனி வீடுகளுக்குக் குழிதோண்டல் இயந்திரங்களை வைத்துச் செய்யும்போது பெரிதாகவோ, அளவற்றோ சமமின்றியோ அமைந்துவிடுவது உண்டு. குழிகளுக்கு இடையே இடைவெளி குறைவாக இருக்கும்போது இடையில் உள்ள மண் சரிந்து குழி மிகப் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். அதை மனிதர்கள் மூலமே சரியான அளவுகளுக்குக் கொண்டு வரும் சூழல் ஏற்படும். தனி வீடுகளுக்கு ஆட்கள் மூலம் செய்யும்போது சரியான அளவில் எடுக்க முடியும். ஆட்கள் ஊதியத்தைக் கன அடி கணக்கிலோ குழி எண்ணிக்கையிலோ வழங்கலாம்.
ஆற்று மணல் நிரப்புதல் (Sand Filling) எதற்காக?
மண்ணில் கெடுதல் விளைவிக்கும் இருந்தாலும், மண் கட்டிட சுமையின் அழுத்தத்தைத் தாங்கும் வலிமையற்று இருந்தாலும், களிப்பு (Clay) தன்மையாக இருந்தாலும் குழி தரை பரப்பில் மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதைத் தடுத்துச் சமபடுத்தி அரண்போல ஆற்று மணல் கடைக்காலைக் காக்கும் என்பதே மணல் நிரப்புவதின் நோக்கம். மணல் விற்கும் விலையில் இவ்வளவு அளவு பூமியில் கொட்டுவதா என மணல் நிரப்புவதில் சுணக்கம் கொள்ளக் கூடாது.
எதற்காக பி.சி.சி. (Plain Cement Concrete)?
மணல் நிரப்பியதற்கு மேல் அடுக்கில் இது பி.சி.சி. அமையும் இது கடைக்கால் நிற்பதற்கான படுக்கையாக அமைகிறது. கடைக்கால் தாங்கும் வலிமை இது பெறுதல் அவசியம்.
தட்டை கடைக்கால் (Plat or Padfooting)
நூல் கயறு வட்டு குண்டு உதவியுடன் தூண் படல் இவற்றின் மையப்புள்ளி பரப்புகளைச் சரியாக மார்க் செய்து முதலில் படம் கம்பியை மார்க்கில் பொறுந்துமாறு வைத்து பிறகு தூண் கம்பியைப் படல் மேல் வைக்க வேண்டும்.
படல் (Mat), தூண் (Column) ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. படல் என்பது தூணின் கீழ்ப் பக்கம் வெவ்வேற்ய் தடிமன் (Dia) கொண்ட இரு கம்பிகள் சம இடைவெளியில் குறுக்கும், நெடுக்குமாக வைத்து அமைக்க வேண்டும். மேல் பரப்பில் கான்கிரீட் சமமாக அமைவதற்கு வசதியாக படல் கம்பியின் அனைத்து முனைகளும் மேல் நோக்கி வளத்து விடப்பட வேண்டும்.
முனையை அளவாகக் கொண்டு மேல் கான்கிரீட் பரப்பு சமமாக அமையும் படலின் அடிப்பகுதியில் கான்கிரீட் இறங்குவதற்கு வசதியாக கவர் ப்ளாக் வைக்க வேண்டும். நமக்கு எந்தக் கனத்தில் கான்கிரீட் கிழிறங்க வேண்டுமோ அதற்கு ஏற்ற அளவில் கவர் ப்ளாக் வைக்க வேண்டும். இப்போது படலில் கான்கிரீட் இடலாம். இத்துடன் படலுக்கான பணிகள் முடிந்தன. அடுத்த பணிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.
கட்டுரையாளர், கட்டிடத் துறைப் பேராசிரியர்.
தொடர்புக்கு: sunbharathidasan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT