Last Updated : 23 May, 2015 12:10 PM

 

Published : 23 May 2015 12:10 PM
Last Updated : 23 May 2015 12:10 PM

ஒரு கோடி வீடுகள் தயார்

கட்டுமானத் துறையில் நிலவி வரும் மந்த நிலை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவதாக ரியல் எஸ்டேட் துறையினர் கூறத் தொடங்கியிருக்கின்றனர். இதனால், விரைவில் கட்டுமானத் துறை எழுச்சிபெறும் என்றும், வீடுகள் மற்றும் நிலத்தின் மதிப்பு உயரும் என்றும் விளம்பரப்படுத்துகின்றனர். எனவே, விலை அதிகரிப்பதற்கு முன்பாக வீடுகளை வாங்குங்கள் என்றும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைத் தள்ளுபடி விலையில் தருவதாகவும் சில கட்டுமான நிறுவனங்கள் அறிவிக்கின்றன.

இதை நம்பி, தங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக் கொள்ளலாமா? என்ற கேள்வி குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால், கட்டுமானத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேக்க நிலையை சந்தித்துள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு, குடியேறுவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே 20 லட்சம். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, தேவைப்படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 88 லட்சம் வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தேவைக்கும் குறைவாகத்தானே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இருக்கிறது என்றும் தோன்றக் கூடும். ஆனால், உண்மை நிலை நேர் எதிரானது. புதிய வீடு தேவைப்படும் ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங்களில், சுமார் 95 சதவிகிதம் பேர் குறைந்த வருவாய் அல்லது பொருளாதார நிலையில் பின் தங்கியிருப்பவர்கள். இவர்களுக்குத் தேவையானது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்ல. மாறாக, அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஏற்ற அடிப்படை வசதிகளைக் கொண்ட குறைந்த விலை வீடுகள்தான். நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் வீடுகள், விலை போகாததற்கு இதுவும் முக்கியக் காரணமாகியிருக்கிறது.

பூட்டிக் கிடக்கும் புதிய வீடுகள்

ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யப்படாமல் இருந்தாலும், நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து வீட்டைக் கட்டி வருவது ஏன்? என்ற கேள்விக்குக் கடந்த பிப்ரவரியில் FICCI அமைப்பு வெளியிட்ட ஆய்வுத் தகவலில் குறிப்பிடத்தக்க பதில் கிடைத்தது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 11 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாகவும், அதிக விலையுள்ள வீடுகள் விற்பனை செய்யப்படுவதால், 2012-13-ம் ஆண்டில் மட்டும் கறுப்புப் பணம் அதிக அளவில் இத்துறையில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அந்த ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக் கட்டுமானத் துறையைச் சேர்ந்த சில பண முதலைகள் அதிகம் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே, கட்டி முடிக்கப்பட்ட பல லட்சம் வீடுகள் தயார் நிலையில் இருந்தாலும், தொடர்ந்து வீடுகளைக் கட்டும் பணியைச் சில கட்டுமான நிறுவனங்கள் செய்துவருகின்றன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், 2011-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் குடும்பங்களின் எண்ணிக்கை 24 கோடியே 70 லட்சமாக இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டில் இது 18 கோடியே 70 லட்சமாக இருந்துள்ளது. அதாவது 2001 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும், புதிதாக 6 கோடிக் குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன.

இதே காலகட்டத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 8 கோடியைக் கடந்துவிட்டது. அதாவது, வீடுகள் தேவைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையை விட, புதிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களைப் பொறுத்தவரை குடும்பங்களின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சமாக அதிகரித்த நிலையில், புதிய வீடுகளின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சமாக இருக்கிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுக் காலியாகப் பல வீடுகள் இருப்பதன் மூலம் இந்தப் புள்ளிவிவரத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கட்டுமானத்துறையில் கறுப்புப் பணம் முடக்கப்படுவதை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்திலும், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் பூட்டிக் கிடப்பதைத் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். சரி, உண்மை ஒருபக்கம் இருக்கட்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நடுத்தரக் குடும்பங்கள் என்ன செய்வது? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

கறுப்புப் பணம் முடங்கும் அதே கட்டுமானத் துறையில், குறைந்த வருவாய் உள்ள மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்துடன் பல கட்டுமான நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அவர்களைப் பொறுத்த வரை, குறைந்த அளவு லாபத்தில் அதிக வீடுகளை விற்றுத் தங்களின் நிறுவனத்தை வளர்ப்பதே இலக்கு. கறுப்புப் பணத்தை முதலீடு செய்த தனி நபர்கள் போல் இவர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்படுவதில்லை. எனவே, ஒரு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து வீட்டை வாங்கும் முன்பாக, அதன் உண்மையான விலை எவ்வளவு என்பதை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து வாங்குவதே சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x