Published : 30 May 2015 12:37 PM
Last Updated : 30 May 2015 12:37 PM
புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, ஒயிட் டவுன் பகுதிகளில் சென்றால் ஏராளமான பாரம்பரியக் கட்டிடங்களைத் தரிசிக்கலாம். பாரம்பரிய கட்டிடங்களைப் பார்வையிடவே தற்போது ஏராளமானோர் புதுச்சேரிக்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். நடைப்பயணத்துடன் கூடிய பயணத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கட்டிடங்களில் வசித்தோர் அக்கால பிரான்ஸ் தேசத்தவர்கள்தான். தற்போதும் பாரம்பரியத்துடன் இக்கட்டிடங்களை நாம் தரிசிக்கலாம். பாரம்பரியத்தைப் பாதுகாத்தோருக்கு உயரிய விருது தரவும் பிரான்ஸ் அரசு தயங்குவதில்லை.
பாரம்பரியக் கட்டிடங்களைப் பேணிக் காப்பதில் சிறந்த பணிக்காகப் புதுச்சேரி தச்சுக் கலைஞர் அந்துவானுக்கு (53) இந்தியாவுக்கு பிரான்ஸ் தூதர் பிராங்கோயிஸ் ரிச்சர் சிறப்பு விருதினைத் தந்தார்.
இன்டாக் அமைப்பில் இணைந்து பணிபுரியும் இவர் புதுவையில் உள்ள பிரான்ஸ் துணைதூதரகம், கிராட்டியூட் கெஸ்ட் அவுஸ், குளுனி பிரைமரி பள்ளி, இன்டாக் அலுவலகம், தனியார் கட்டடங்கள், தரங்கம்பாடியில் உள்ள பழமையான ஆளுநர் மாளிகை போன்றவற்றையும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
பாரம்பரியக் கட்டிடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள மெட்ராஸ் டெரஸ் ரூஃபிங் என்ற மேற்கூரை அமைக்கும் பணியை மேற்கொள்வதில் அந்துவான் தேர்ந்தவர்.
மெட்ராஸ் டெரஸ் ரூபிங்
பழங்காலங்களில் மெட்ராஸ் டெரஸ் ரூபிங்தான் அனைத்து வீடுகளிலும் இருந்தது. அம்முறை தற்போது இல்லை. ஆனால், பழங்காலக் கட்டிடங்களில் இம்முறையில்தான் இருக்கும். மெட்ராஸ் டெரஸ் ரூபிங் முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் குளுமையாக இருக்கும்.
தளத்தின் அடியில் மரம் வைத்து இக்கட்டிடங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்கிறார் அந்துவான். மேலும் இது பற்றிச் சொல்லும்போது, “சில மரங்கள் வீணாகப் போயிருக்கும். அதைச் சரியான முறையில் இருக்கிறதா என ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்க்க வேண்டும். மரம் உள்ளே வெடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். தட்டிப் பார்த்தே மரத்தின் தன்மையை உணர்ந்து விடுவோம். பெரும்பாலான இடங்களில் தேக்குமரம்தான் பயன்படுத்தப் பட்டிருக்கும்.
பழைய கட்டிடத்தில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கசிவு அகற்றும் முறையைப் பாரம்பரிய அடிப்படையில் செய்ய வேண்டும். அத்துடன் மரத்துக்குப் பாலிஷ் போட்டுப் பராமரித்தால் உள் பகுதி அழகாகக் காட்சிதரும்.
பல கட்டிடங்களில் பால்கனிகளில் கைப்பிடிகள் அழகான வேலை அமைப்புகளுடன் இருக்கும். அதையும் சரியாகப் பராமரிக்க வேண்டும். இவையும் மரங்களால்தான் அக்காலத்தில் அமைத்திருப்பார்கள். இதுபோல் தற்போது அமைவது இல்லை. வீட்டுக்கே அழகை அதிரிக்கச் செய்யும். கடற்கரையோரங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்களில் அக்காலங்களில் இம்முறையைப் பயன்படுத்தினார்கள். பிரான்ஸ் நாட்டின் கட்டிடக்கலை நுணுக்கங்களை அப்படியே பயன்படுத்திக் கட்டியிருக்கின்றனர். பராமரிப்பு மிகவும் பழங்காலக் கட்டிடங்களுக்கு அவசியம்” என்கிறார்.
அந்துவான் பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பதன் மூலம் முக்கியமான சமூகப் பணியைச் செய்துவருகிறார். பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க எல்லா ஊருக்கும் ஒரு அந்துவான் வேண்டும்.
படங்கள்: எம். சாம்ராஜ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT