Published : 30 May 2015 12:20 PM
Last Updated : 30 May 2015 12:20 PM
குளோபல் விபாசனா பகோடா உலகிலேயே மிகப் பெரிய குவிமாடம் (Dome) என்னும் பெருமையைப் பெற்றது. நேர்த்தியான கட்டிடக் கலைக்கான மகத்தான சான்றாக விளங்கும் இது, இந்தியாவின் வடக்கு மும்பையில் கட்டப்பட்டிருக்கிறது. இது 85.15 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது ஒரு புத்த கோயிலாகும்.
மிகப் பெரிய தியானக் கூடம்
பர்மியக் கட்டிடக் கலை பாணியை அடிப்படையாகக் கொண்டு, மியான்மர், யான்கூனில் இருக்கும் ஸ்வேதகூன் பகோடாவின் தோற்றத்தை மாதிரியாகக் கொண்டு இந்த புத்த விகாரையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகியிருக்கும் இந்தப் புத்த விகாரை, இந்தியப் பாரம்பரிய மற்றும் நவீனக் கட்டிடக் கலையின் சிறந்த அம்சங்களை உள்வாங்கிக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. நந்தாதீப் கட்டுமான மையத்தின் திறனுக்குச் சான்றாக விளங்கும் இந்தப் புத்த விகாரையின் தியான மையம் ஏறக்குறைய எட்டாயிரம் பேர் ஒரே சமயத்தில் தியானம் செய்யும் அளவுக்குப் பெரியது.
உலகின் மிகப் பெரிய குவிமாடம்
விபாசனா பகோடாவின் உயரம் 89.93. பிரதான மாடத்தின் சுற்றளவு 85.15 மீட்டர். பிரதான மாடத்தின் உயரம் 26.27 மீட்டர். பிரதான மாடத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கல்லின் எடை 192,000 டன். விபாசனா பகோடாவின் மையத்திலிருக்கும் கல்லால் செய்யப்பட்ட குவிமாடம், எந்தவிதமான தாங்கிகளும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் உலகின் மிகப் பெரிய குவிமாடம் என்னும் பெருமையைப்பெறுகிறது. தியானம் செய்யப் பயன்படும் பிரதான குவிமாடத்தின் சுற்றளவு 85.15 மீட்டர். இது, இதற்குமுன்பாக உலகிலேயே மிகப் பெரிய கல்லால் ஆன குவிமாடமாகக் கருதப்பட்ட ரோமின் செயின்ட் பியர் ஆஃப் ரோம் (41.47மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியது.
இண்டர்-லாக் கற்கள்
தாங்கும் சுவரில்லாமல், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கற்களின் (இண்டர்-லாக் கற்கள்) உதவியுடனே எழுப்பப்பட்டிருக்கும் குவிமாடம் இது.
விபாசனா பகோடாவுக்கான திட்டங்கள் இறுதிசெய்யப்பட்டு, 2000-மாவது ஆண்டில் தொடங்கப்பட்டு, 2006-ல் பிரதான மாடத்தின் கட்டுமானம் முடிந்தது.
இணை மாடத்தின் கட்டுமானத்தைப் பிரதான மாடத்தின் கட்டுமானத்தைப் பாதி முடிவடையும் தறுவாயில் தொடங்கினர். இரண்டாவது குவிமாடத்தின் கட்டுமானத்தை, இணை மாடத்தின் கட்டுமானம் முடியும் தறுவாயில் தொடங்கினர். உச்சியில் இருக்கும் மூன்றாவது மாடத்தின் கட்டுமானத்தை, இரண்டாம் மாடத்தின் கட்டுமானம் முடியும் தறுவாயில் தொடங்கினர்.
இறுதி மற்றும் மூன்றாம் மாடத்தின் கட்டுமானம் 2008 நவம்பரில் முடிக்கப்பட்டது. விபாசனா பகோடாவின் இறுதி வடிவம் 2010-ல் பிரம்மாண்டமான முறையில் இந்த உலகத்துக்குக் கிடைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT