Published : 02 May 2015 12:45 PM
Last Updated : 02 May 2015 12:45 PM
கோடை உஷ்ணம் உச்சமாக இருக்கும் காலத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் வாங்குவது ஆடம்பரமாக இருந்தபோது ஆக்சைடு தரைகள் அருமையான மாற்றாக இருந்தன. செலவு, உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் ஆக்சைடு தரைகள் சிறப்பானவைதான். பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ணங்களில் ஆக்ஸைடு தரைகள் பாவலாம் என்றபோதும் பரவலாக சிவப்பு வண்ணமான ரெட் ஆக்ஸைடு தரைகளே பாவப்படுகின்றன.
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை குளிர்சாதன வசதியைப் பணக்காரர்கள் மட்டுமே பெற்றுவந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் கொடூரமான கோடையைச் சமாளிக்கப் பிறர் குளிர்ச்சியான தரைகளைக் கொண்ட வீடுகளை விரும்பினார்கள். நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு இன்னமும் தங்கள் தாத்தா, பாட்டி வீடுகளில் உள்ள குளிர்ச்சியான தரையில் ஓடி, புரண்டு விளையாடியது ஞாபகத்துக்கு வரலாம்.
“அதெல்லாம் அந்தக் காலம். தரையில் பதிக்க டைல்ஸ்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில் அவை வருவதால் ரெட் ஆக்சைடு தரைகளுக்கு இப்போது மவுசு இல்லை. ரெட் ஆக்சைடு தரைத் தளத்தை அமைக்கும் கொத்தனார்களும் இப்போது வேறு வேலைகளுக்குப் போய்விட்டனர்” என்கிறார் கட்டிட ஒப்பந்தக்காரரான கருணாகரன்.
“ ரெட் ஆக்சைடு தரைகளைப் பொறுத்தவரை காலப்போக்கில்தான் பளபளப்பு அதிகரிக்கும். மற்ற தரைகளோ காலப்போக்கில் உடைந்துவிடும் பழையதாகிவிடும். அத்துடன் டைல்ஸ் போடுவதைவிட ரெட் ஆக்சைடு தரைகள் குறைந்த செலவே பிடிப்பவை. பாலீஷ் செய்வதற்கு மூன்று மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை ஆகும். பணியாளர்கள் குனிந்து அமர்ந்து வேலை செய்ய வேண்டும். தரை உலரும்வரை பாதம் படக் கூடாது” என்கிறார்.
ஒரு பங்கு ரெட் ஆக்சைடு, ஒரு பங்கு சிமிண்ட் மற்றும் மிருதுவான மணல் ஆகியவை சேர்த்து சாந்தாக ஆக்க வேண்டும். பூசிய பிறகு ஒரு துண்டைப் பயன்படுத்தி பாலீஷ் செய்வார்கள். சரியானபடி செய்தால் ரெட் ஆக்சைடு தரை அவ்வளவு சீக்கிரம் உடையாது. நீண்ட காலம் பளபளப்பாகவும் இருக்கும். ரெட் ஆக்சைடு தரைகளைக் கொண்ட பழைய கட்டிடங்கள் ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் உழைப்பவை. அவ்வளவு சீக்கிரம் உடையாதவை என்கிறார் ரெட் ஆக்சைடு தரை நிபுணரான ஜெபராஜ்.
தற்போதும் ஆக்சைடு தரைக்கான மூலப்பொருட்கள் மலிவாகவே கிடைக்கின்றன. ஒரு சதுர அடிக்கு 13 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் செலவாகும்.
ஆக்சைடு தரை அமைத்த பிறகு கவனிக்க வேண்டியவை:
தரை பாவிய பிறகு அடுத்த நாளிலிருந்து இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீரைத் தெளிக்க வேண்டும். தரை பாவி நான்கு நாட்களுக்குத் தண்ணீர் தெளிப்பவர் தவிர வேறு யாரும் நடக்கக் கூடாது. தெளிக்கும் நீர் அதிகம் தாதுப்பொருட்கள் கொண்ட கிணற்று நீராக இருத்தல் கூடாது.
ஒரு பங்கு ஆக்சைடுக்கு மூன்று பங்கு சிமிண்ட் பயன்படுத்தினால் கருஞ்சிவப்பு நிறத்துடன் தரை இருக்கும். சிமெண்டை அதிகரிக்கும்போது வெளிர் சிவப்பாகும். வெள்ளை சிமெண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் வெள்ளை சிமெண்ட் பயன்படுத்தும்போது கவனம் தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT