Last Updated : 09 May, 2015 10:53 AM

 

Published : 09 May 2015 10:53 AM
Last Updated : 09 May 2015 10:53 AM

கவனிக்கப்படுகிறார்களா கட்டுமானத் தொழிலாளர்கள்?

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக அளவில் வேலையாட்கள் உள்ள துறை எது எனக் கேள்வி கேட்டால் ரயில்வே, விவசாயம் எனப் பலவிதமான பதில்களை அளிக்கக் கூடும். ஆனால் அதிகமான வேலையாட்கள் உள்ள துறை கட்டுமானத் துறைதான்.

விவசாயத்துக்கு அடுத்தபடியாகப் பெரும்பாலான இந்திய மக்கள் சார்ந்திருக்கும் துறையாகக் கட்டுமானத் துறை வளர்ந்திருக்கிறது. சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய வேலைத் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அதிகமான வேலைவாய்ப்பு உள்ள இந்தத் துறையில் உள்ள அனைவரும் அதற்கான தொழில் திறன் பெற்றவர்களா? அவர்கள் அமைப்புசார் தொழிலாளர்களாக இருக்கிறார்களா?

கட்டுமானத் தொழிலாளர்கள் திறன் பெற்றவர்களா?

‘இல்லை’ என்கிறது தேசிய வேலைத் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 2012-2013-ல் 8.0 சதவீதமாக இருந்தது. 2017-ல் அது 8.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிக்கும் கட்டுமானத் துறையில் அதற்குத் தகுந்தாற்போல் வேலை வாய்ப்புகளும் அதிகம்.

அதுபோல விவசாயத்துக்கு அடுத்தபடியாகப் பருவகால வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் கட்டுமானத் துறை இருக்கிறது. 64-வது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின்படி 58.6 மில்லியன் தினக் கூலிகள் விவசாயம் அல்லாத துறையில் இருக்கிறார்கள். அவர்களுள் 58 சதவீதத்தினர் கட்டுமானத் துறையில் இருக்கிறார்கள் என்கிறது அந்தக் கணக்கெடுப்பு.

அதாவது 5.86 கோடி பேர்களில் கட்டுமானத் துறை சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.2 கோடி ஆகும். இவர்களில் 83.3 சதவீதமானவர்கள் முறையான தொழில் திறன் அற்றவர்கள் என்கிறது அந்த அறிக்கை. 3.2 கோடி பேர்களில் 98 லட்சம் பேர்கள்தான் முறையான தொழில்திறன் பெற்றிருக்கிறார்கள். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின்படி 15 வயதில்

இருந்து 65 வயதுக்கு உள்பட்டவர்கள் 97 சதவீதத்தினர் எந்த விதமான பயிற்சியும் அற்றவர்கள் எனச் சொல்கிறது. அரசுக் கல்வித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புத் திறனை அளிப்பதில் போதாமை உள்ளதாகவும் தேசிய வேலைத் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இந்த அறிக்கை பாரம்பரிய முறையில் தொழில்திறன் பெற்றவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர்.கீதா. தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு ஆணையம் அவர்களுக்கு முறையாகப் பயிற்சி வழங்கினால் அது வரவேற்கத் தக்கது என்றும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

பாதுகாப்பில்லாத தொழிலா?

மேலும் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அமைப்புசாரா வேலைவாய்ப்புத் துறையாகக் கட்டுமானத் துறைதான் இருக்கிறது. 4.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்தத் துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு எவ்விதமான அமைப்பு சார்ந்த பாதுகாப்பும் இல்லை. பெரும்பாலும் முறையான பயிற்சியில்லாத தொழிலாளர்கள்தான் தினக் கூலிகளாகச் சுரண்டப்படுகிறார்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் விபத்துகளால் அவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பும் தரப்படுவதில்லை. ரூபாய் 7,67,400 கோடி பங்களிப்பு செய்யும் இந்தத் துறை 80 சதவீதம் அமைப்புசாரா தொழிலாக இருக்கிறது. 2004-2005 ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் 2.62 கோடி பேராக இருந்தனர். 2009-2010-ல் 5.21 கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் இந்தத் துறை வேலைவாய்ப்பால் அதிகமானோர் மாநிலங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

மேற்கு வங்கம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், பிஹார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

உதாரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் சென்னையில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாகவும் கீதா கூறுகிறார். அம்மாதிரி தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பதிவுசெய்ததில் அரசு சில நிபந்தனைகளை வைத்திருக்கிறது. வேலைக்குக் கொண்டுவரும் முதலாளிகள் மூலமாகப் பதிவுசெய்யும் நடைமுறை உள்ளது.

ஆனால் தொழிற்சங்கம் மூலமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என கீதா கோரிக்கை வைக்கிறார். கட்டுமானத் தொழிலாளர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டுவர இது சரியான வழிமுறையாக இருக்கும் எனச் சொல்கிறார். இம்மாதிரி நல வாரியத்துடன் இணைந்து தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு ஆணையம் தொழிலாளர்களின் பாரம்பரியப் பயிற்சியைச் சோதித்துச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் கீதா சொல்கிறார்.

கட்டுமானத் தொழிலுக்கும் அதைச் சார்ந்து இயங்கும் தொழிலாளர்களுக்கும் நன்மைபயக்க இந்த அறிக்கை ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x