Published : 02 May 2015 01:07 PM
Last Updated : 02 May 2015 01:07 PM
குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுக்கும் ஒரு விளையாட்டுப் பொருள் கலைடாஸ்கோப். வெளிப்புறப் பார்வைக்குச் சாதாரண குழாய்போலத் தோன்றும். ஆனால் அந்தக் குழாயினுள் பார்வையைச் செலுத்தினால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அற்புதமான நிறங்களின் கலவையைக் காட்டி நம்மைப் பரவசமூட்டும். முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள், வண்ணம் பூசப்பட்ட நெகிழி அல்லது கண்ணாடித் துண்டுகள் பொருத்தப்பட்ட கருவிக்குப் பெயர்தான் கலைடாஸ்கோப். பார்க்கும் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் கலைடாஸ்கோப் போலவே ஒரு மேஜையை வடிவமைத்திருக்கிறார் ஆண்ட்ரூ டோமேன் எனும் போர்ச்சுகல் வடிவமைப்பாளர்.
“பொதுவாக அலுவலகங்களில் நடத்தப்படும் கலந்துரையாடல் கூட்டங்கள் மந்தமாக நிகழும். அதே போல தினமும் நம் வீட்டில் உள்ள உணவு மேஜையின் அருகில் ஏனோ தானோ என உட்கார்ந்து சாப்பிடுவோம். அத்தகைய இடங்களில் கலைடாஸ்கோப் மேஜை இருந்தால், அந்த இடம் மாய உலகம் போல வண்ணமயமாகக் காட்சியளிக்கும். நிச்சயமாகக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த கலைடாஸ்கோப் மேஜையை விரும்புவார்கள்” என உற்சாகமாகக் கூறுகிறார் ஆண்ட்ரூ. ஆண்ட்ரூ வடிவமைத்திருக்கும் கலைடாஸ்கோப் மேஜையின் மர பாகங்கள் வார்னிஷ் பூசப்பட்ட ஓக் மரத்தாலானவை.
அதன் கால்கள் பித்தளையால் செய்யப்பட்டவை. பித்தளை மட்டுமின்றி செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் கொண்டும் இந்த மேஜையின் கால்களைச் செய்யலாம் என்கிறார் அவர். கலைடாஸ்கோப் கருவியில் உள்ள வடிவமைப்பைத் தான் உருவாக்கிய மேஜையில் எவ்வாறு உட்புகுத்தினார் என்பதையும் வரைபடம் மூலம் விளக்கியுள்ளார் ஆண்ட்ரூ. மேஜையின் மேல் பரப்பில் கண்ணாடித் துண்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள், பித்தளைத் துண்டுகள் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட ஓக் மரப் பட்டைகள் குறுக்கு மறுக்குமாக அடுக்கப்பட்டுள்ளன.
300 சென்டிமீட்டர் நீளம், 120 சென்டிமீட்டர் அகலம், மற்றும் 78 சென்டிமீட்டர் உயரத்தில் இம்மேஜை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் மாதிரி வடிவம் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் கிடைக்கவிருக்கும் வரவேற்பைப் பொருத்துதான் கலைடாஸ்கோப் மேஜைகள் மென்மேலும் தயாரிக்கப்படும். சிதறியடிக்கப்பட்ட வானவில் நிறங்கள் உங்கள் வீடு முழுவதும் பிரதிபலிக்க வேண்டும் எனும் ஆசை உங்களுக்கும் இருந்தால் கலைடாஸ்கோப் மேஜை கூடிய சீக்கிரம் உங்கள் வீடு தேடி வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT