Published : 09 May 2015 10:42 AM
Last Updated : 09 May 2015 10:42 AM
வீட்டின் பராமரிப்பில் மின் சாதனப் பொருட்களின் பராமரிப்பும் அடங்கும். சிலர் வீட்டின் சுவர், கூரை, தரை போன்ற விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் வீட்டில் மின் சாதனப் பொருட்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் ஒயர்கள் அரதப் பழசாக இருக்கும். பழைய ஒயர்களால் அதிக மின்சாரம் செலவாவதுடன் வீட்டின் பாதுகாப்பும் மனித உயிர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.
வீட்டின் மின் சாதனப் பொருட்களைத் தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் மின் பயனீட்டின் அளவைக் குறைக்க முடியும். பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் மின் சாதனப் பொருள்களைப் பராமரிப்பதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே தருகிறோம்:
# உங்கள் வீட்டின் ஒயரிங் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால், அதை மாற்ற வேண்டியது அவசியம்.
# பழைய முறையில் சுவருக்கு வெளியே ஒயரிங்கைப் பட்டியில் பதித்து பயன்படுத்தி இருப்பார்கள். புதிய முறையில், சுவருக்கு உள்ளேயே ஒயரிங்கை செய்கிறார்கள். இந்த முறையே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
# தகுந்த சான்றிதழ் பெற்ற எலக்ட்ரீஷியனைக் கொண்டு மின் சாதனப் பொருட்களைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அவர்களுக்குத்தான் ஒவ்வொரு மின் சாதனப் பொருட்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் ஒயர்களின் தரத்தைப் பற்றித் தெரியும். குளிர் சாதனப் பொருட்களுக்கு சாதாரண டியூப் லைட்களுக்குப் பயன்படுத்தும் தடிமனில் ஒயர்களைப் பயன்படுத்தினால், வோல்டேஜ் தாங்காது.
# ஆயிரம் பொன் கொடுத்து யானை வாங்குவானாம் அரைக் காசு கொடுத்து அங்குசம் வாங்க மாட்டானாம் என்பது இந்தக் காலத்துக்கும் பொருந்தும் பழமொழிதான். 20, 30 ஆயிரம் கொடுத்து ஏசி வாங்குவார்கள். ஆனால் அதற்குப் பொருத்தமான ஐஎஸ்ஐ தரச் சான்றுடன் கூடிய ஸ்டெபிலைசரை வாங்கமாட்டார்கள். தரமற்ற ஸ்டெபிலைசரால் தரமான மின் சாதனப் பொருட்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
# உங்களின் குளிர் சாதனப் பெட்டியில் அதன் அளவுக்கு மீறிப் பொருட்களைத் திணித்து வைக்காதீர்கள். உங்களின் குளிர் சாதனப் பெட்டியில் 25 சதவீதம் அளவுக்குக் காலி இடம் அவசியம். இதனால் உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் திறன் அதிகரிக்கும்.
# துணி துவைக்கும் இயந்திரத்திலும் தேவையான அளவுக்கு நீரும் சோப்புப் பவுடரும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
# மின் சாதனப் பொருட்களின் மீது நேரடியாகச் சூரிய ஒளி படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
# மின் சாதனப் பொருட்களின் பயன்பாட்டுக்குப் பின், அதற்கான மின் இணைப்பைத் துண்டித்துவிட வேண்டும். இதன்மூலம் தேவையற்ற மின் கசிவைத் தவிர்க்கலாம்.
# மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, மின் சாதனப் பொருட்களை வாரத்துக்கு ஒருமுறையாவது சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
# மைக்ரோ ஓவன், இண்டக்ஸன் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர், ஏர் கூலர் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், அந்தப் பொருட்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த கையேட்டை அவசியம் படித்து, நீங்கள் அந்தப் பொருளைப் பயன்படுத்துவது குறித்து புரிந்துகொண்டிருப்பது சரிதானா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
# துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியவுடன் அதன் உள்பகுதிகள் காயும்வகையில் சில நிமிடங்கள் இயந்திரத்தைத் திறந்துவைக்கவும்.
# `மைக்ரோ வேவ் அவனில்’ உலோகப் பாத்திரங்களைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
# நள்ளிரவில் படுக்கை அறை தேவைக்கு அதிகமாகக் குளிர்ந்தவுடன் தூக்கக் கலக்கத்தில், ரிமோட்டைக் கொண்டு ஏசியை அணைத்துவிடுவீர்கள். ஆனால் சிரமம் பார்க்காமல் எழுந்து அதன் மெயின் ஸ்விட்சையும் அணைத்துவிட்டுப் படுக்கவும். அதுதான் சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT