Published : 09 May 2015 10:44 AM
Last Updated : 09 May 2015 10:44 AM
பொதுவாக ஒரு அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தவுடன் உங்களுடைய இயல்பு எப்படி மாறும்? அமைதி காத்து, நிதானமாக நடந்து, பொறுமையோடும், சீரியசான முகப் பாவனைகளோடும் அரங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தள்ளி நின்று பார்வையிடுவீர்கள் அப்படித்தானே!
ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் புதிதாக ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. “ஆர்ட் இன் ஐலாண்ட் மியூசியம்” எனும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் ஆடலாம், குதிக்கலாம், விளையாடலாம் முக்கியமாக எத்தனை ஒளிப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். சொல்லப்போனால், இங்கு வரும் பார்வையாளர்கள் ஒளிப்படங்கள் எடுத்தால்தான் இந்த அருங்காட்சியகத்துக்கே அர்த்தம் கிடைக்கும். “ஆர்ட் இன் ஐலாண்ட் மியூசியம்” என்பது ஒரு 3டி அருங்காட்சியகம். கிட்டத்தட்ட 200 விதமான ஓவியங்கள் இந்த அருங்காட்சியகம் முழுக்க வரையப்பட்டுள்ளன.
அதில் பெரும்பாலானவை 3டி ஓவியங்கள். லியானார்டோ டா வின்சி, வான் கா போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் பிரசித்தி பெற்ற ஓவியங்கள் புதிய கோணங்களில், முப்பரிமாணங்களில் வரையப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்களாக இருந்தாலும் அவை சுவரோடு நின்றுவிடுவதில்லை. சுவரைத் தாண்டித் தரை மீதும் கால் பதிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சில ஓவியங்கள் கூரை மேல் ஏறிக் குதிக்கின்றன. சில ஓவியங்கள் உங்களை வந்து தாக்கும்.
சிலவற்றில் நீங்கள் உங்கள் குறும்புத்தனங்களை வெளிப்படுத்தலாம். தன் சட்டகத்தை விட்டு வெளியே எகிறிக் குதிக்கும் சித்திரங்களும் உள்ளன. சித்திரம் விட்ட இடத்தில் நீங்கள் நுழைந்து கொள்ளலாம். அத்தனை அம்சங்களைவிடவும் எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பது இங்கு எடுக்கப்படும் ஒளிப்படங்கள்தான். இங்கு வரையப்பட்டிருக்கும் 3டி ஓவியங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சியோடு தொடர்புடைய உணர்ச்சியை நீங்கள் உடல் மொழியிலும், முகபாவனையிலும் வெளிக்காட்டியபடி அந்த ஓவியத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிற்க வேண்டும்.
அதன் பின் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உங்களை அந்த ஓவியத்தோடு ஒளிப்படம் பிடித்தால் நீங்களே அந்த ஓவியத்துக்குள் இருப்பதுபோன்ற மாயையான ஒளிப்படம் கிடைக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்ட் இ ஐலாண்ட் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப் பெரிய ஊடாடும் கலை அருங்காட்சியகம் இதுதான். “மக்கள் கலையின் அங்கம் என்பதைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் இது. பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றும் முயற்சி இது. அதாவது இங்கு உள்ள ஓவியங்களுக்குள் மக்கள் நுழைந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளும்போதுதான் அந்த ஓவியங்கள் முழுமைபெறுகின்றன” எனக் கூறுகிறார் கலை அருங்காட்சியகத்தின் செயலாளரான பிளித் காம்பேயா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT