Published : 23 May 2015 12:13 PM
Last Updated : 23 May 2015 12:13 PM
வீடு கட்டும்போது நாம் அறைகளைத் தீர்மானித்துவிடுவோம். ஆனாலும் வீட்டு வரவேற்பறையில் சிறு பகுதியை உங்கள் சொந்த அலுவலுக்காகப் பிரிக்க நினைக்கிறீர்கள் என்றால் அதற்காகச் செங்கற்களை எடுத்து அறையைப் பிரிக்க வேண்டாம். சட்டென ஒரே நிமிஷத்தில் அறையைப் பிரித்துவிட முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா? இந்த அறைப் பிரிப்பான் அதை அந்த மாயத்தைச் செய்துவிடும்.
அறை பிரிப்பான், அறைகளைப் பிரிப்பது மட்டுமல்லாமல் அறைத் தனியழகைத் தேடித் தருகின்றன. இந்த அறைப் பிரிப்பான்களில் பலவகை உண்டு. அழகாக வேலைப்பாடு உள்ள மரச் சட்டகங்களாகவும் உள்ளன. கண்ணாடிச் சுவர்களாகவும் உள்ளன. இவை மட்டுமல்லாது புத்தக அலமாரிகளையும் கூட அறைப் பிரிப்பானாக நாம் பயன்படுத்த முடியும்.
அறைப் பிரிப்பான்களில் தற்காலிக அறைப் பிரிப்பான், நிரந்தர அறைப் பிரிப்பான் ஆகியவை உள்ளன. பிளாஸ்டிக் சட்டகங்கள் கொண்டு அறையை நிரந்தரமாகப் பிரிக்கலாம். மரச் சட்டகங்கள் கொண்டு அறையை நிரந்தரமாகப் பிரிக்கலாம். அதாவது இந்தச் சட்டகங்களைச் சுவராக மாற்றி அறையைப் பிரிக்கலாம். மடக்கு மரச் சட்டகங்கள் முன்பே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
அவற்றைப் பயன்படுத்தி வீட்டை நிமிடத்தில் பிரிக்க முடியும். அறைப் பிரிப்பான்கள் முன்பு இருந்தே நாம் பயன்படுத்தி வரும் ஒரு சாதனம்தான் என்றாலும் அதில் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. உலர் சுவர் தொழில்நுட்பத்தையும் நாம் புதிய அறைப் பிரிப்பானகாவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டட் சேனல்கள் மூலம் பிரேம் அமைத்து, பைபர் சிமெண்ட் போர்டுகளை இரண்டு புறமும் பொருத்தி உலர் சுவர்கள் பொருத்தப்படுகின்றன.
வெளிநாடுகளில் இந்த முறை அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. ஆனால் நம் நாட்டில் பாதுகாப்பு கருதி வீட்டின் சுற்றுச்சுவர்களை மட்டும் பாரம்பரிய சுவர்போல செங்கல் மூலம் கட்டலாம். மற்றபடி வீட்டின் உள்புறம் அனைத்துமே உலர் சுவர்கள் அமைக்கலாம்.
இதுமட்டுமல்லாமல் அறைப் பிரிப்பானை அறையைப் பிரிப்பதற்கு மட்டுமல்லாமல் அழகுக்காகவும் பயன்படுத்தலாம். அழகாக மூங்கில் சட்டங்களைக் கொண்டு அறையைப் பிரிக்கும்போது அது ஒரு தனி அழகைத் தரும். சுவரின் மேலே தொங்கும் திரைகளைப் போலவும் அறைப் பிரிப்பான்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் அறைகளைப் பிரிக்கும்போது அவர்களுக்குப் பிடித்த வண்ணமயமான ஓவியங்களையே அறைப் பிரிப்பான்களாகப் பயன்படுத்தலாம்.
தொகுப்பு: வை.விண்மதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT